பாகிஸ்தானில் 1999–ம் ஆண்டு ராணுவ புரட்சியை ஏற்படுத்தி 2008–ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர், பர்வேஸ் முஷரப். 72 வயது முஷரப் 2007–ம் ஆண்டு சட்டவிரோதமாக நீதிபதிகளை சிறைபிடித்ததாக தொடரப்பட்ட வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, வெளிநாட்டில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவர் 2013–ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் தவறாமல் கோர்ட்டில் ஆஜர் ஆவேன் என்றும் கூறினார்.
2 மாதங்களுக்கு முன்பாக, தனக்கு முதுகு தண்டுவடத்தில் கோளாறு இருப்பதாக கூறி வெளிநாடு சென்று சிகிச்சை பெற சுப்ரீம் கோர்ட்டு மூலம் முஷரப் அனுமதி கேட்டார். இதற்கு கோர்ட்டும், பாகிஸ்தான் அரசும் ஒப்புதல் அளித்தன. இதனால் அவர் கடந்த மாதம் துபாய்க்கு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் நீதிபதிகளை அவர் சிறைபிடித்ததாக தொடரப்பட்ட வழக்கு நேற்று இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால் முஷரப் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் முஷரப்பை ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது செய்யும் விதமாக பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தனர்.