யேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ஐ.நா. மேற்பார்வையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவான படைகளுக்கான தலைமைத் தளபதி முகமது அலி அல்-மக்தாஷி கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் (இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணி) போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாதவரை, நாங்கள் அதனை மதித்து நடப்போம் என்றார் அவர்.
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள், யேமன் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைப்பற்றினர்.
அவர்களுக்கு ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான் ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஹூதி கிளர்ச்சியாளர்களுடன், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவான யேமன் ராணுவப் பிரிவினரும், தற்போதைய அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவான படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், யேமனின் இரண்டாவது பெரிய நகரான ஏடனை நோக்கி ஹூதி படையினர் முன்னேறியதைத் தொடர்ந்து, அதிபர் ஹாதி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார்.
அதையடுத்து, சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.
சவூதி கூட்டுப் படைகளின் உதவியுடன், மன்சூர் ஹாதி ஆரவுப் படையினர் ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
7