இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள ஆங்கிள்சி தீவில் அமைந்துள்ள ஆர்.ஏ.எப். வேலி (RAF Valley) விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இங்கிலாந்து விமானப் படைக்குச் (RAF) சொந்தமான ஹாக் டி2 (Hawk T2) ரக அதிவேக பயிற்சி போர் விமானம், தரையில் மோதி தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது.
கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தின் போது, விமானத்தில் பயணித்த இரு விமானிகளும் சாதுரியமாக பாரசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர் பயிற்சி விமானி எனவும், மற்றையவர் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட விமானி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே குதித்த இரு விமானிகளுக்கும் சிறிய அளவிலான காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமாக உள்ள நிலையில் விரைவில் பூரண குணமடைவார்கள் என்றும் இங்கிலாந்து விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்விபத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாக் ரக விமானங்களின் அனைத்துச் செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து விமானப்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.