மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர், ஹார்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைப் பாதித்து வளைகுடா நாடுகளின் ஏற்றுமதியை வெகுவாகச் சீர்குலைத்துள்ளதாக கட்டார் எச்சரித்துள்ளது. இதன் தாக்கங்கள் எரிசக்தித் துறையைத் தாண்டிப் பல்வேறு துறைகளிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், ஈரான் தொடர்பான இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தின் மீது தாங்க முடியாத பெரும் சுமையை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலையைத் தணிப்பதற்கான மத்தியஸ்தப் பணிகளைத் தாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக கட்டார் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
டோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கலாநிதி மஜித் அல்-அன்சாரி, பிராந்தியத்தில் இடம்பெறும் இந்த அசாதாரண சூழ்நிலைகளின் எதிர்விளைவுகளை உலகப் பொருளாதாரம் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாங்கிக்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், எந்தவொரு இணக்கப்பாட்டிலும் தடைகள் காணப்படுவது இயல்பானது எனவும், அந்தச் சவால்களை முறியடித்து இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே தமது பணியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மோதல் மேலும் தீவிரமடைவது பிராந்தியத்திற்கு மேலும் பாரதூரமான இன்னல்களையே ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அண்மையில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகிய போதிலும், அமைதியான முறையில் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையே கட்டார் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் தெளிவுபடுத்தினார்.