அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாவதை முன்னிட்டு, நியூசிலாந்து பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை கலைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், ஆளும் மைய-வலதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்கும் லேபர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கு முன்னதான பாராளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார முகாமைத்துவம் மற்றும் பொதுச் சேவைகளின் தரம் ஆகிய பிரதான விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது விவாதங்களை தீவிரமாக முன்னெடுத்திருந்தன.
வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘1News-Verian’ கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, லேபர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 65 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கக்கூடிய சாதகமான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போதைய ஆளுங்கட்சியான நஷனல், ஏசிடி மற்றும் நியூசிலாந்து பர்ஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளடங்கிய கூட்டணி 59 ஆசனங்களை மாத்திரமே பெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் ஜேர்மனிய தேர்தல் முறைமையைப் போன்ற கலப்பு உறுப்பினர் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று தசாப்தங்கள் நிறைவடைந்துள்ளன. இத்தேர்தல் முறையினால் அந்நாட்டில் கூட்டாட்சி நிர்வாகங்களே வழமையான நடைமுறையாக மாறியுள்ளதுடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிறிய கட்சிகளின் வகிபாகமும் மிகவும் தீர்மானமிக்க காரணியாக உருவெடுத்துள்ளது.
பொதுவாக நியூசிலாந்து பாராளுமன்றம் 120 ஆசனங்களைக் கொண்டுள்ளது. எனினும், ஒரு அரசியல் கட்சி தனது நாடு தழுவிய கட்சி வாக்குகளின் சதவீதத்தை விடவும் கூடுதலான நேரடித் தொகுதிகளில் வெற்றிபெறும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் மேலதிக ஆசனங்கள் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
இதனிடையே, ஒரு தசாப்த கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட நடுநிலை அரசியல் கட்சியான ‘ஆப்பர்சூனிட்டி கட்சி’ (Opportunity Party), இம்முறை புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகார சமநிலையைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக உருவெடுக்கக்கூடும் என சில தேர்தல் கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.