வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பாடசாலைகளில் நிலவும் நெருக்கடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையாக மாறியுள்ளன. நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் சுமார் 550,000 பேர் வீதிகளில் இறங்கிப் போராடியதுடன், அங்கு நிலவிய வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தலைநகர் பாரிஸில் மாலை வேளையில் தீவிரமடைந்த மோதல்களைக் கட்டுப்படுத்த கலகமடக்கும் பொலிஸார், கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். பாரிஸ் மற்றும் ஏனைய நகரங்களில் உள்ள பல கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. குறிப்பாக லிமோஜஸ் நகர சபை கட்டடத்தில் பரவிய பாரிய தீயினால் அதன் கூரையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததுடன், தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பிரான்ஸின் பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டதோடு, நகர சபைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது பரவலான சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களில் 150 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர் என பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
பாரிஸில் பிற்பகல் வேளையில் அமைதியான முறையில் ஆரம்பமான பிரதான பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர், தாங்கள் சமாதான விரும்பிகள் எனவும், சூழ்நிலைகளை மாற்றியமைக்கவே முயற்சிப்பதாகவும், ஆனால் எதுவுமே மாறவில்லை எனவும் பிபிசி செய்தி சேவைக்குத் தெரிவித்தள்ளனர். எனினும், நேரம் செல்லச் செல்ல சில குழுவினர் வீதிகளில் தீயிட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிளேஸ் டி லா ரிபப்ளிக் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களுக்குத் தீவைத்தனர்.
பல கடைகள் சூறையாடப்பட்டதோடு, உணவகம் ஒன்றும் தீக்கிரையானது. பல்வேறு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்புகளின் போது, பாரிஸின் மையப்பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர். லியோன் நகரில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா அலுவலகக் கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டமை பெரும் சோகம் என அந்நகர மேயர் கிரிகோரி டூசெட் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்பகுதியில் திரண்டிருந்த சிலர் தீயணைப்புப் படையினர் தீயை அணைப்பதைத் தடுத்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.