கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய இராணுவ பயிற்சித் தளத்திற்கு அருகில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உத்தியோகபூர்வ விவரங்களையோ அல்லது தீ விபத்திற்கான துல்லியமான காரணத்தையோ அவர் உறுதிப்படுத்தாத போதிலும், கள நிலவரம் மிகவும் தீவிரமானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கனேடிய இராணுவத்தினரும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நாட்டின் அதிகளவான இராணுவ பயிற்சிகள் முன்னெடுக்கப்படும் தளங்களில் ஒன்றான வெய்ன்ரைட் கனேடிய படைத்தளத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. கனேடிய ஆயுதப் படைகளின் நேரடி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளுக்கான பிரதான தளமாக விளங்கும் இங்கு, வழமையான நாட்களில் சுமார் 690 இராணுவத்தினரும் 300 சிவில் ஊழியர்களும் பணியில் ஈடுபடுவது வழக்கம் என சி.பி.சி. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அங்கு முன்னெடுக்கப்பட்ட நேரடி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது, எரிவாயுக் குழாய் அல்லது எரிவாயுக் கிணறு மீது தாக்கம் ஏற்பட்டதாலேயே இந்த வெடிப்பும் தீ விபத்தும் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி குளோபல் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் டசின்கணக்கானோர் காயமடைந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.