இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள அங்குரார்ப்பண மகளிர் கால்பந்தாட்ட லீக் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று சனிக்கிழமை (24) பிற்பகல் நடைபெறவுள்ள றினோன் மகளிர் விளையாட்டுக் கழகத்துக்கும் டிபெண்டர்ஸ் எவ்சிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகிறது.
ஏக்கல, விமானப்படை மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் புளூ ஈக்ள்ஸ் மகளிர் அணியை பொலிஸ் மகளிர் அணி எதிர்த்தாடும்.

இந்த இரண்டு போட்டிகளும் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் என சம்மேளனம் அறிவித்துள்ளது.
மகளிர் லீக் காப்பந்தாட்டம் இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.
முதலாம் பிரிவில் புளூ ஈக்ள்ஸ், டிபெண்டர்ஸ், பொலிஸ், றினோன், சீ ஹோக்ஸ் ஆகிய ஐந்து மகளிர் கழகங்கள் இரண்டு சுற்றுகளைக் கொண்ட லீக் முறையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். இதற்கு அமைய முதல் சுற்றில் 10 போட்டிகளும் இரண்டாம் சுற்றில் 10 போட்டிகளுமாக மொத்தம் 20 போட்டிகள் நடத்தப்படும்.
இரண்டாம் பிரிவில் ஏஞ்சல் எவ்சி, இன்ஸ்பயர் எவ்சி, யாழ்ப்பாணம் மகளிர் எவ்சி, மினுவாங்கொடை எஸ்சி, ரமிசெஸ் எவ்சி ஆகிய ஐந்து அணிகள் ஒற்றைச் சுற்றில் விளையாடும். இதற்கு அமைய இரண்டாம் பிரிவில் 10 போட்டிகள் நடத்தப்படும்.
இரண்டு பிரிவுகளிலும் லிக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் சம்பியன்கள், உப சம்பியன்கள் தீர்மானிக்கப்படும்.

இலங்கையில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதிலும், வீராங்கனைகளுக்கு தொடர்ச்சியான போட்டி வாய்ப்புகளை வழங்குவதிலும், மகளிர் தேசிய அணிகளுக்கான பாதைகளை பலப்படுத்துவதிலும் ஒரு முக்கியப் படியைக் குறிக்கும் முகமாக மகளிர் லீக் கால்பந்தாட்டம் அறிமுகமாகிறது.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலாவது FIFA மகளிர் கால்பந்தாட்ட மூலோபாய பயிற்சி அரங்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மகளிர் லீக்கின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பயிற்சி அரங்கு மகளிர் விளையாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், 2027-2030க்கான நான்காண்டு மகளிர் கால்பந்தாட்ட வியூகத்தை வடிவமைப்பதற்காக பங்குதாரர்களை ஒன்றிணைத்தது.
மேலும், இந்த லீக் மகளிர் கழகங்களுக்கான கழக உரிமம் மற்றும் கால்பந்தாட்ட கடவுச்சீட்டு (Football Passport) முறையை அறிமுகப்படுத்தும். இது வலுவான கழகத் தரங்களுக்கும், வீராங்கனைகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் ஆதரவளிக்கும்.
மகளிர் லீக் கால்பந்தாட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், ‘அடிமட்ட கால்பந்தாட்டம், இளைஞர் மற்றும் மகளிர் கால்பந்தாட்டத்திற்காக 2027ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்படும். மேலும் அங்குரார்ப்பண மகளிர் லீக் கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதற்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அணுகுமுறையின் தொடக்கமாக இது அமையும்’ என்றார்.
மேலும், விளையாட்டில் சிறுமிகளின் பங்கேற்பினால் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கம் உட்பட அதன் பரந்த சமூக மதிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக அனைவரையும் நேரிய வழியில் இட்டுச் செல்லும் நன்னோக்குடனும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனும் 12 வயதுக்குட்பட்டோர் முதல் 18 வயதுக்குட்பட்டோர் வரையிலான பிரிவுகளில் சிறுமிகளுக்கான போட்டிகளை 2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.
இன்றைய போட்டிக்கான குழாம்கள்
றினோன் மகளிர் குழாம்: அஷானி இமேஷா அருணதினீ, யோகாந்தராசா உமாசங்கவி, நியாஸ் கதீஜா, ரஷ்மி கவிஷா தேவிந்தி, துலினி சந்தீப்பனி, சசிதி நிம்சரா, சுதாகரன் குகனிதா, மதுஷானி யசாரா, யசோதரன் லயன்சிகா, இந்திரன் மாஷி கிறகறி, லியா ஜயசிங்க, பாரமி அஹின்சா ராஜபக்ஷ, ஷவ்னிக்கா துஷானி, ருமேஷா செவ்மினி, சிவாகரன் சியாளினி, இமேஷா வர்ணகுலசூரிய, சிவனேஸ்வரன் தர்மிகா, இசுரி உமயங்கனா ஷலனி, ஆத்திகா அஸ்பர், ஓஷதி செவ்வந்தி, தியாகராசா மொனிக்கா, ஹம்னா ஷக்கில்.
டிபெண்டர்ஸ் மகளிர் குழாம்: மதுரா தியானி, யுஹன்சா நிம்ரதா, நாகேந்திரன் திஹாரிக்கா, தேவமுனி ஹிமாயா சச்சினி, டில்கி உத்பலா மதுவன்தி, தேஜானி தீக்ஷனா, கவீஷா சந்தரேனு, மஹேஷி ப்ரதீபிகா, நயனி தமாஷா, யுரேஷா சவீந்த்ரனி, திலினி பிரியங்கிகா குமாரி, ஹன்சிகா குமாரி, ஹஷனி கௌஷல்யா, சஞ்சனா நெத்மி, புத்தினி கௌஷல்யா, சக்குரா சுதர்ஷி, ஆன் பெரேரா, உப்பேஷிகா சதாருவனி, ஓதானி வரங்கனா, சயுனி ஹன்சாதி, ஷானிக்கா குமாரி, ஓஷாதி வந்தனா.