பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான மோதல்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாரிஸ், மார்செய், லியோன், லில், போர்டோ, துலூஸ், மொன்பெலியே மற்றும் நான்ட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர்த்தாரைப் பிரயோகங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகள் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 4 இலட்சத்து 10 ஆயிரம் முதல் 8 இலட்சம் வரையான மக்கள் பங்கேற்றதாக அதிகாரிகளும் போராட்ட ஏற்பாட்டாளர்களும் வெவ்வேறு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர். தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 10 ஆயிரம் முதல் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடைபெற்ற பிரதான ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் கடைசி நேர உத்தரவையடுத்து நகரின் தென்கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் அமைதியாக நடைபெற்ற போதிலும், மக்கள் கலைந்து செல்லத் தொடங்கிய பின்னர் பொலிஸாருக்கும் சில ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதன்போது பொலிஸார் கண்ணீர்ப்புகை, தடியடி மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, பொலிஸார் தங்களை அநாவசியமாகப் பின்வாங்க உத்தரவிட்டதுடன் கடுமையான தாக்குதல்களை நடத்தியதாகப் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், சுமார் 500 பேர் கொண்ட வன்முறைக் குழுவினர் பாதுகாப்புப் படையினருடன் திட்டமிட்டு மோதலில் ஈடுபட்டதாக பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகரில் மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தில் பல வர்த்தக நிலையங்கள் தங்களது கண்ணாடி ஜன்னல்களைப் பாதுகாப்புப் பலகைகளால் மூடியிருந்ததுடன், புகழ்பெற்ற லூவர் மற்றும் மியூசே டி’ஓர்சே அருங்காட்சியகங்களும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களின் போது அரச கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சுமார் 2,700 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய கிளர்ச்சிகளை முன்னெடுத்த மஞ்சள் அங்கி இயக்கத்தினர் மீண்டும் களமிறங்கத் தயாராகி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனநாயக சுதந்திரத்தை வலியுறுத்தி எதிர்வரும் 31ஆம் திகதி புதிய போராட்டங்களை முன்னெடுக்க அந்த இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. பாரிஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இடதுசாரித் தலைவர் ஜீன்-லூக் மெலன்சோன், அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால் இத்தகைய மக்கள் எதிர்ப்புகள் வாரந்தோறும் தொடரும் என எச்சரித்துள்ளார்.