பிலிப்பீன்ஸ் நாட்டில் இரு இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் நேற்றுப் பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மோதிக்கொண்ட இரு விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்து விமானப்படைத் தளத்தின் வளாகத்திற்குள்ளேயே வீழ்ந்து நொறுங்கின. இந்த விபத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பிலிப்பீன்ஸ் விமானப்படைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்குள்ளான இரண்டு SF-260 ரக விமானங்களும் எவ்வாறு மோதிக்கொண்டன என்பது தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விசாரணைகள் நிறைவடையும் வரை தற்காலிகமாக எந்தவொரு SF-260 ரக விமானமும் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதமும் இதேபோன்ற SF-260 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள பேங்கெட் வட்டாரத்தில் முன்னெடுக்கப்பட்ட பயிற்சியின் போது குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிலிப்பீன்ஸ், விமான விபத்து, இராணுவ விமானங்கள் மோதல், SF-260, பெர்னாண்டோ விமானப்படைத் தளம், பேங்கெட், விமானிகள் மரணம், சர்வதேச செய்திகள்