தமிழ் ரசிகர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பரிபாடி’ எனும் மலையாள திரைப்படம், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஜோஜூ ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பரிபாடி’ திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் உடன் நூற்றுக்கும் மேற்பட்ட புது முகங்கள் நடித்திருக்கிறார்கள்.
ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை காவ்யா ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேணு குன்னப்பில்லி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. மேலும் யுவனின் இசையில் இந்த அறிமுக காணொளி உருவாக்கப்பட்டிருப்பதால்.. அவருடைய ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
இதனிடையே ‘பரிபாடி’ என்பதற்கு நிகழ்ச்சி எனும் பொருளை கூகுள் வழங்கினாலும், தமிழில் சட்டவிரோத செயலுக்கு சம்பவம் என சொல் குறிக்கப்படுவதைப் போல்..மலையாளத்தில் ‘சண்டை’ செய்வதை பரிபாடி என குறிப்பிடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.