ஆப்பிரிக்காவில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் பரவல் இங்கிலாந்து உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் விரிவடையும் அபாயம் காணப்படுவதாக ஆப்பிரிக்காவின் முன்னணி சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்துள்ள இந்நோய்த்தொற்றினால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அரிதான மற்றும் மிகக் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இக்காய்ச்சல், தற்போது காங்கோவைத் தாண்டி கென்யா, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. இந்நிலையானது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்பிரிக்காவின் மூன்று பிராந்தியங்களை ஒரே நேரத்தில் பாதித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பொது இயக்குநர் கலாநிதி ஜீன் கசேயா, இந்த நிலைமையை கொரோனா பெருந்தொற்றின் ஆரம்பக் கட்டத்துடன் ஒப்பிட்டு எச்சரித்துள்ளார். கொரோனா பரவலின் தொடக்க காலத்தில் பல நாடுகள் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை அசட்டை செய்ததை நினைவுகூர்ந்த அவர், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகள் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உலகம் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆப்பிரிக்க பிராந்தியம் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள நாடுகள் தமது தயார்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை உட்கட்டமைப்புகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் எனவும், இங்கிலாந்து உட்பட வேறு எந்தவொரு நாடும் இந்நோய்த்தொற்றின் புதிய மையமாக மாறுவதை தாம் விரும்பவில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, குறித்த எச்சரிக்கை தொடர்பில் விளக்கமளித்துள்ள இங்கிலாந்து பொது சுகாதாரப் பதிலளிப்புப் பிரிவின் தலைவர் கலாநிதி சாம் காலின்ஸ், ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா நிலைவரத்தை இங்கிலாந்து சுகாதாரத் தரப்பு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் எபோலா பரவல் மிகத் தீவிரமாக உள்ள போதிலும், இங்கிலாந்தில் உள்ள மக்களுக்கு இதனால் ஏற்படக்கூடிய ஆபத்து மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து எபோலா தொற்றுக்குள்ளான நபர்கள் இங்கிலாந்துக்குள் பிரவேசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கும், தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடைமுறைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கும் இங்கிலாந்து முழுமையான தயார்நிலையில் உள்ளதாக அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.