செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வன்னியில் 8,552 அரச வீடுகள் நிறைவுறாத நிலை – விசேட நிதி கோரும் ரவிகரன்

வன்னியில் 8,552 அரச வீடுகள் நிறைவுறாத நிலை – விசேட நிதி கோரும் ரவிகரன்

3 minutes read

கடந்த கால அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நிறைவுசெய்யப்படாமல் உள்ள அரச வீட்டுத்திட்டங்களின் கீழான வீடுகளைப் பூர்த்திசெய்வதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கைக்கு, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு பதிலளித்துள்ளது.

குறிப்பாக, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் கடந்த காலங்களில் அரச வீட்டுத்திட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 8,552 வீடுகளின் நிர்மாணப் பணிகள் இன்னமும் நிறைவுசெய்யப்படாமல் உள்ளமை அமைச்சின் பதிலினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த  ஆகஸ்ட்  (25) ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் செயலாளருக்கு எழுத்துமூலமாகக் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

அக்கோரிக்கையில், கடந்த கால அரசாங்கங்களினால் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட பெருமளவான அரச வீட்டுத்திட்டங்கள், அவற்றுக்காக அங்கீகரிக்கப்பட்ட நிதி முழுமையாக விடுவிக்கப்படாமையால் பல ஆண்டுகளாக நிறைவுறாத நிலையில் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் தகவல்களுக்கு அமைவாக, 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் அதிகளவான வீடுகள் முழுமைப்படுத்தப்படாமல் உள்ளதாகவும், அவற்றில் 820 வீடுகள் சுவர் மட்டத்தோடும், 1,063 வீடுகள் கூரை மட்டத்தோடும், 316 வீடுகள் கதவு மற்றும் சாளரங்கள் இல்லாத நிலையிலும், 13 வீடுகள் வேறு நிறைவுறாத நிலைகளிலும் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மொத்தமாக 2,212 வீடுகள் முழுமைப்படுத்தப்படாமல் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர், குறித்த வீடுகளுக்காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 369.82 மில்லியன் ரூபாய் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,319.18 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நிதிப்பற்றாக்குறை காரணமாக வீட்டுத்திட்டங்களை நிறைவுசெய்ய முடியாத நிலையில், பல பயனாளிகள் தமக்குப் பாதுகாப்பான நிரந்தர வீடொன்றை அமைத்துக்கொள்ள முடியாமல் நீண்டகாலமாகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், சில பயனாளிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாகத் தமது சேமிப்புகளையும் கடன்களையும் பயன்படுத்தி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ள போதிலும், எஞ்சிய பணிகளை நிறைவுசெய்வதற்கான பொருளாதார வசதிகளின்றித் தவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த வீடுகளை நிறைவுசெய்வதற்குத் தேவையான நிதியை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதுடன், 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரியிருந்தார்.

இக்கோரிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த  புதன்கிழமை (21)  நடைபெற்ற வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதற்காக அமைச்சிடம் கோரப்பட்ட பதில், கடந்த  நேற்று முன்தினம் வியாழக்கிழமை (29) பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் மட்டும் 2,252 வீடுகளுக்கு 1,319 மில்லியன் ரூபாய் தேவை!

அமைச்சினால் வழங்கப்பட்ட பதிலில், கடந்த 2015–2019 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுசெய்யப்படாத வீடுகளின் நிலை தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த 2,252 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு 1,319 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 8,552 வீடுகளின் நிர்மாணப் பணிகள் இன்னமும் நிறைவுசெய்யப்படாமல் உள்ளதாகவும் அமைச்சின் பதிலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமைகளினால் கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளமையையும் அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த காலத்தில் வீடமைப்புக்காக வழங்கப்பட்ட 500,000 ரூபாய் முதல் 750,000 ரூபாய் வரையான நிதி தற்போதைய கட்டுமானச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லாத நிலையில், வீட்டொன்றின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு 1,000,000 ரூபாய் முதல் 1,500,000 ரூபாய் வரையான நிதி தேவைப்படுவதாகவும் அமைச்சின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால வீட்டுத்திட்டங்களை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகள்

அமைச்சின் பதிலின்படி, கடந்த 2015–2019 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுசெய்யப்படாத வீடுகளின் நிர்மாணப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2025ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் 169 வீடுகளினதும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீடுகளினதும், மன்னார் மாவட்டத்தில் 299 வீடுகளினதும் நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

மேலும், 2026ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 66 வீடுகளினதும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 வீடுகளினதும் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு நிறைவுசெய்யப்படாத வீடுகளின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு அரசாங்கத்தினால் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வீட்டுத்திட்டங்களுக்கு முன்னர் நிறைவுறாத வீடுகளுக்கு முன்னுரிமை வேண்டும்!

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்துள்ள கோரிக்கையில், நீண்டகாலமாக நிறைவுசெய்யப்படாமல் உள்ள வீடுகள், மிகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வீடுகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வீடுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகளைக் கொண்ட பயனாளிகளுக்கான வீடுகள் ஆகியவற்றுக்கு நிதி விடுவிப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் நிறைவுசெய்யப்படாமல் இருக்கும்போது, அவற்றின் பயனாளிகள் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி வாழவேண்டிய நிலை நீடிப்பதைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய கட்டுமானச் செலவுகளுக்கு ஏற்ப வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்வதுடன், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிதியையும் உரிய பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிப்பதுடன் அரசாங்கத்தின் பொறுப்பு நிறைவடைந்துவிடுவதில்லை. அத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான நிரந்தர வீடுகளில் குடியேறுவதற்கான சூழலை உறுதிசெய்வதே அதன் உண்மையான நிறைவாக அமையவேண்டும்.

எனவே, வன்னி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிறைவுறாத நிலையில் காணப்படும் அரச வீட்டுத்திட்டங்களுக்குத் தேவையான நிதியை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதுடன், அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே அவற்றின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறைச் செயற்றிட்டமொன்றையும் அரசாங்கம் உருவாக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பதிலின் அடிப்படையில், நிறைவுறாத வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் ஊடாக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.