நியூசிலாந்தின் வேலையின்மை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அந்நாட்டு புள்ளியியல் திணைக்களம் (Stats NZ) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் வேலையின்மை விகிதம் 5.7 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன், இது 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான உச்சபட்ச அதிகரிப்பாகும். முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு மட்டம் 0.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற பொருளாதார அழுத்தங்களை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் நிற்கும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுக்கு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான சவால் உருவாகியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ள சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் தீவிரமடைந்துள்ளது.