செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கவேண்டும்: சாணக்கியன்

விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கவேண்டும்: சாணக்கியன்

2 minutes read

பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்துக்கமைய ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயி ஒருவர் இரு மடங்காக செலவழிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும். எரிபொருளுக்காக தற்போது வழங்கப்படும் நிவாரணம் வழங்கல் டிசெம்பர் மாதத்துக்கு பின்னரும் தொடருமா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளன.  கடந்த ஒக்டோபர் மாதம் முதன்மை பணவீக்கம் 8.3 சதவீதமாகவும், உணவு பணவீக்கம் 8.8 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி  எரிபொருள்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்துள்ள நிலையில் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் 5 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.

டீசலுக்காக தற்போது வழங்கப்படும் 70 ரூபா நிவாரணத்தை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் 2026ஆம் ஆண்டிற்கான ஆண்டின் இடைக்கால அரச நிதிக்கூற்று அறிக்கையின்படி,  2026 ஜூன் மாத இறுதியில் திறைசேரியின் கையிருப்பு 690.3 பில்லியன் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கையிருப்பில் நிதி இருக்குமாயின் ஏன் எரிபொருளுக்கு மேலதிகமாக வரி அறவிடவேண்டும்? நிதி இருக்குமாயின் மக்களுக்கு நேரடியாக நிவாரணமளிக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 57 பில்லியன் ரூபா எரிபொருள் மானியங்களை வழங்கியதாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 41 பில்லியன் ரூபா ஏப்ரல் முதல் ஜூன் வரை இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனத்துக்காகவும் 15 பில்லியன் ரூபா மின்கட்டண மாணியம்  வழங்கலுக்காகவும்  வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இக்காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 29.2 பில்லியன் ரூபா தேறிய இலாபமடைந்துள்ளதாகவும் அதற்கு நிவாரணம் வழங்கல் பிரதான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு திறைசேரி ஊடாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இலங்கை வங்கி, மக்கள் வங்கிக்கு கடன் செலுத்துவதற்காக 750 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணம்  செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தேசிய இலாபம் அறிக்கை ஊடாக காட்டப்படுகிறது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நோக்கம் இலாபமடைவதா அல்லது மக்களுக்கு சேவையாற்றுவதா?

2026 ஜனவரி முதல் இன்று வரை திறைசேரியால்  வழங்கப்பட்ட மொத்த எரிபொருள் மானியத் தொகை எவ்வளவு? அதில் இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனத்திற்கு  எவ்வளவு  வழங்கப்பட்டது? மற்றும் பிற எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது?

எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்துக்காக திறைச்சேரியின் மாதாந்த நிவாரண செலவு எவ்வளவு? 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 95 ரக பெட்ரோல் மற்றும் ஆட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விற்பனை அளவுகள் என்ன?

ஏப்ரல் முதல் ஜூன் 2026 வரை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட முழு ரூ. 41 பில்லியன் மானியமும் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள் மூலம் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைக்கப்பெற்றதா? எரிபொருள் மானியங்களின் தற்போதைய மாதாந்திரச் செலவைக் கொண்டு திறைசேரியின் கையிருப்பில் இருந்து இன்னும் எத்தனை மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்திற்கு நிதியளிக்க முடியும்?

உலகளாவிய எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்தால் கூட  2026 டிசம்பர் 31க்குப் பிறகும் அரசாங்கம் எரிபொருள் நிவாரணத்தைத் தொடருமா? எரிபொருள் நிவாரண வழங்கலின்போது பொதுப் போக்குவரத்து துறைக்கு வழங்க வேண்டும். அப்போது போக்குவரத்து கட்டணம் குறைவடையும். அதன் பயன் நடுத்தர மக்களுக்கு நேரடியாக கிடைக்கும்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கான விவசாய நடவடிக்கைகளுக்கான செலவு தற்போதைய டீசல் விலையினால் இரண்டு மடங்காக அதிகரிக்கும். விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களை இலக்காகக் கொண்டு நிவாரணம் எரிபொருள் நிவாரணம் வழங்கினால் அதனுடான  உற்பத்திக்களின் செலவுகளை குறைக்க முடியும். ஆனால் தற்போது பெரு நிறுவனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆகவே எரிபொருள் நிவாரணம் வழங்கலின்போது இலகுபடுத்தப்பட்ட தரப்பு குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும். அவசியமான தரப்பினருக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.