கடும் மழை காரணமாக, இன்று (09) திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் அட்டன் பிரதான பஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.
அட்டன் நகரின் பிரதான வீதியில் மழைநீர் பெருமளவில் தேங்கியதால், எம்.ஆர். பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அத்துடன், அட்டன் பஸ் நிலையத்திற்கு மேல்புறமாக அமைந்துள்ள காமினிபுரா பகுதியில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக அட்டன் மண்டல அலுவலகத்தின் கணக்குப் பிரிவுக்குள்ளும் மழைநீர் கசிந்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மறுபுறம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொலைதூர மாகாணங்களிலிருந்து அட்டன் நகருக்கு வருகை தந்த சில வியாபாரிகள், தங்களது கடைகளிலிருந்து குப்பைப் பைகளை மழைநீர் தேங்கியிருந்த பிரதான வீதியில் வீசியுள்ளனர்.
இதனால் வீதியில் குப்பைகள் தேங்கி பாதையில் போக்குவரத்து தடைபட்டது.
இதேவேளை, கண்டி, கெலி ஒயா பகுதியிலும் கடும் மழை பெய்து வருதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.






