செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் காஸா போரில் இங்கிலாந்தின் வகிபாகம் குறித்த பொது விசாரணை கோரி மனு: 91,000க்கும் அதிகமானோர் கையெழுத்து!

காஸா போரில் இங்கிலாந்தின் வகிபாகம் குறித்த பொது விசாரணை கோரி மனு: 91,000க்கும் அதிகமானோர் கையெழுத்து!

1 minutes read

இஸ்ரேலினால் காஸா மீது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகளில் இங்கிலாந்தின் வகிபாகம் தொடர்பில் சுயாதீன பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மக்கள் மனுவுக்கு ஆதரவு தீவிரமடைந்துள்ளது. இங்கிலாந்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில் இதுவரை 91,000க்கும் அதிகமான பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளதோடு, இது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மேலும் சுமார் 10,000 கையெழுத்துகளே தேவைப்படுகின்றன.

யுவர் பார்ட்டி (Your Party) அமைப்பின் தலைவி ஜெனிபர் போர்ப்ஸினால் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இந்த மனு உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குதல், கண்காணிப்பு விமானங்களைப் பயன்படுத்துதல் மற்றும் றோயல் விமானப்படைத் தளங்களை அதற்காகப் பயன்படுத்த அனுமதித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இங்கிலாந்தின் பங்களிப்பு குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என இம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகளிடம் அவர்களின் தீர்மானங்கள் குறித்து நேரில் விசாரணை செய்யும் பூரண அதிகாரம் இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இவ்விடயம் தொடர்பில் சுயாதீன பொதுவிசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பின் விடுத்திருந்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நிராகரித்திருந்தது.

இது தொடர்பில் கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி விளக்கமளித்த இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஸ்டீபன் டௌட்டி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளே போதுமானவை என்பதால், தனியான பொது விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பின், இங்கிலாந்தின் ஆயுத விற்பனை, றோயல் விமானப்படைத் தளங்களின் பயன்பாடு, கண்காணிப்பு விமானப் பறப்புகள் மற்றும் சர்வதேச சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் வகிபாகம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால், உரிய பொறுப்புக்கூறல் நடவடிக்கையிலிருந்து விலகிச் செல்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.