செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு ஜே.வி.பி-க்கு வெளியே திரளும் தொழிற்சங்க சக்திகள்! | அ .நிக்ஸன்

ஜே.வி.பி-க்கு வெளியே திரளும் தொழிற்சங்க சக்திகள்! | அ .நிக்ஸன்

3 minutes read

* ஆட்சிக்கு வரப் பயன்படுத்திய ஆயுதம் இப்போது அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்புகிறதா?

* 25,000 ரூபாய் கோரிக்கையும் அரச ஊழியர்களின் வாழ்வாதார நெருக்கடியும்

* மக்கள் செல்வாக்கை இழந்த 76 வருட அரசியல் முகாம்களுக்குக் கிடைத்த புதிய களம்

— —- —-

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக, சென்ற திங்கட்கிழமை இலங்கைத்தீவு தழுவிய ரீதியில் ‘தேசிய எதிர்ப்பு தினம்’ அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட முழு இலங்கைத் தீவிலும் உள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், அரச வைத்தியசாலைகள் மற்றும் பெரும்பாலான பாடசாலைகளுக்கு முன்பாக அரச ஊழியர்கள் மதிய உணவு இடைவேளையின் போதும், கறுப்புப் பட்டி அணிந்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்ற  12ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த பதினொரு நாட்களாகப் பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் தனித்தனியாகவும் இணைந்தும் முன்னெடுத்து வரும் போராட்டங்களின் அதி உச்சகட்டமாகவே இன்றைய எதிர்ப்பு நடவடிக்கைகளை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, சென்ற வெள்ளிக்கிழமை 20 நிறைவேற்று அதிகாரிகள் சேவைகளைச் சேர்ந்த 18,000 இற்கும் மேற்பட்டோர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை மூடி பாரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர், அதிபர் மற்றும் சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இப்போராட்டங்களின் பின்னணியை ஆராயும்போது, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அரச சேவையில் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சலுகைகளை வழங்கிவிட்டுப் பெரும்பான்மையான ஊழியர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இங்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இலங்கையின் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆளும் ஜேவிபி வசம் உள்ள நிலையிலும், இன்றைய போராட்டங்கள் வீரியம் பெற்றுள்ளமையாகும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான இலங்கை ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் சங்கம் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் ‘உழைப்பாளர் போராட்ட நிலையம்’ போன்ற ஜே.வி.பி என்ற கட்டமைப்புக் கட்சிக்கு வெளியே உள்ள சுயாதீன தொழிற்சங்கங்களே இதனை ஒருங்கிணைத்துள்ளன.

ஜே.வி.பி ஆதரவு தொழிற்சங்கங்கள் மற்றும் ‘இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்’ போன்றவை இதிலிருந்து விலகியிருந்த போதிலும், அரச ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உண்மையான பொருளாதார அதிருப்தியே இப்போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது இங்கே பகிரங்கமாகிறது.

அரசியல் ரீதியாக நோக்கும்போது, இன்றைய போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் நேரடியாகத் தலைமை தாங்கி நடத்தவில்லை.  அதாவது மகிந்த – ரணில் – சஜித் தரப்பு இப் போராட்டங்களை நடத்தவில்லை.

அதாவது கட்சி அரசியல் பின்னணி இன்றி, தொழிற்சங்கங்களால் இயல்பாக முன்னெடுக்கப்பட்டவை.

ஆனால், நாடாளுமன்றத்தில் பலவீனமடைந்து, மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து நின்ற எதிர்க்கட்சிகள், தற்போது அரசாங்கத்திற்கு எதிராக உருவாகியுள்ள இந்த மக்கள் மற்றும் தொழிற்சங்க அதிருப்தியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனையக் கூடும்.

குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்படுவதையும், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் பலமடைந்ததால் இப்போராட்டம் வெடிக்கவில்லை; மாறாக, வரவு செலவுத் திட்டத்தின் மீதான அரச ஊழியர்களின் அதிருப்தியால் வெடித்துள்ள இப்போராட்டம், பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்கும், தம்மை மீளக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு புதிய அரசியல் களத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

கடந்த காலங்களில் நடத்திய தொழிற்சங்கப் போராட்டங்களின் ஊடாகவே ஆட்சிக்கு வந்த தற்போதைய  அரசாங்கத்திற்கு எதிராக, வழமைக்கு மாறாக ஜே.வி.பி அல்லாத தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிர்வாகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

ஒருபுறம் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயமும், மறுபுறம் மாறிவரும் உலக புவிசார் அரசியல் சூழலில் இந்தோ-பசுபிக் பிராந்தியப் போட்டிகளை மிகவும் சாதுரியமாகக் கையாண்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டிய பாரிய பொறுப்பும் ஜனாதிபதிக்கு முன்னால் உள்ளன.

இவ்வாறானதொரு இக்கட்டான சூழலில், உள்நாட்டில் வேலைநிறுத்தங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் தீவிரமடைவது பொருளாதார ஸ்திரத்தன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

எனவே, கட்சி அரசியல் பின்னணி இன்றி எழுந்துள்ள இந்தத் தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தமது அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாகக் களமிறங்க வேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்வது அல்லது போராட்டங்களை அடக்குவது போன்ற அணுகுமுறைகளைத் தவிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுயாதீன தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி நேரடியாகவும் வெளிப்படையாகவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கைத்தீவின் உண்மையான நிதி நிலைமையைத் தரவுகளுடன் அவர்களுக்கு விளக்கி, 25,000 ரூபாய் கொடுப்பனவு சாத்தியமில்லை எனில், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மாற்றுச் சலுகைகள் அல்லது கட்டம் கட்டமாகச் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான கால அட்டவணை ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

உள்ளக ரீதியாக எழுந்துள்ள இந்தப் பொருளாதார மற்றும் தொழிற்சங்க நெருக்கடிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இராஜதந்திர ரீதியாகக் கையாண்டு வெற்றி கொள்வாரா, அல்லது இச் சவால்கள் பலவீனமடைந்து விழுந்து போயுள்ள எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்து அவர்களுக்குச் சாதகமாக அமையுமா என்பதே தற்போதைய இலங்கை அரசியலின் பிரதான கேள்வியாக மாறியுள்ளது.

அதுவும் மாறி வரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக ஏற்கனவே அமெரிக்க, இந்திய மற்றும் சீன அரசுகளுடன் நீண்டகால அரசியல் – இராஜதந்திர உறவுகளைப் பேணிய பிரதான அரசியல் தலைவர்கள் அதுவும் முன்னனாள் ஜனாதிபதிகள் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள், தற்போதைய தொழிற்சங்க போராட்டங்களை மேலும் வேறு பாதைக்கு இட்டுச் செல்லக் கூடிய ஏது நிலை உருவாகலாம்.

அல்லது போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள், எதிர்கட்சிகளை நாடிச் செல்லக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

ஆகவே, சிந்திக்க வேண்டியது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பதை விடவும், அரசாங்கத்தை வழி நடத்திக் கொண்டிருக்கும் மையக் கருவியான ஜேவிபி தான்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.