இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், நேற்று வெள்ளிக்கிழமை (27) மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.
இலண்டனில் உள்ள Excell மாநாட்டு மண்டபத்திலும் பெருமளவிலான மக்கள் ஒன்றுகூடி, முதலாவது மாவீரர் வீரச்சாவடைந்த நேரத்தை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றினர். அதேவேளை, ஒக்ஸ்போர்டில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லறைகளுக்கு மத்தியில் நின்று மக்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
இலண்டன் Excell மண்டபம்
இலண்டன் Excell மையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், முதலில் இங்கிலாந்து தேசியக்கொடி தமிழர் இளையோர் அமைப்பின் (TYO UK) தலைவி ஜென்சியா நியூட்டனால் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடியை விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுத்தைப் படையணியின் முன்னாள் தளபதி அரபி மணியரசன் ஏற்றிவைத்தார்.
12.35 மணிக்கு ஏற்றப்பட்ட ஈகைச்சுடர்
1982ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரராக வீரச்சாவடைந்த லெப்டினன்ட் சங்கரின் நினைவாக, இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 12.35 மணிக்கு (தாயக நேரம் மாலை 6.05) ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அதே நேரத்தில் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தத்தமது ஈகைச்சுடர்களை ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தாயகத்தின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதே நேரத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.
வீரச்சாவடைந்த மாவீரர்களின் உறவினர்கள், நிகழ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கற்களுக்கு முன்பாக மலர் தூவி, தமது உறவுகளின் புகைப்படங்களுக்கு முன்னால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான மாவீரர்களின் புகைப்படங்களும் நினைவாக வைக்கப்பட்டிருந்தன.

ஒக்ஸ்போர்டில் கல்லறைகளுக்கு மத்தியில் அஞ்சலி
ஒக்ஸ்போர்டிலும் ஈழத்தமிழர்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை அனுஷ்டித்தனர்.
தாயகத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் பதிலாக, ஒக்ஸ்போர்டில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லறைகளுக்கு மத்தியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் நின்று அஞ்சலி செலுத்தினர்.
புல்வெளியில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கற்கள், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அலங்காரங்கள், தேசியக் கொடிகள் ஆகியவற்றுடன் அந்தப் பகுதி ஒரு துயிலும் இல்லத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் முழுவதும் பெருமளவிலான இங்கிலாந்து வாழ் தமிழர்கள் அங்கு திரண்டு, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்கள் தூவி, தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
‘மாவீரர்’ என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை ஈழத்தமிழர்கள் போற்றிக் குறிப்பிடும் பெயராகும். ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்பட்டு, உயிர்நீத்தவர்களின் நினைவுகள் போற்றப்படுகின்றன.

