செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமது

மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமது

4 minutes read

‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக அவர், ஐந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருப்பார்… அவ்வளவுதான்.  வரலாற்றைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால், அவர் தொடக்கக் காலத்தில் இவ்வாறாக இல்லை. ஆம்…  ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி இருக்கிறார். அப்போது, பல அதிகார மையங்களைத் தாண்டியெல்லாம் இல்லை… வெகு சுலபமாக அவரைச் சந்திக்க முடிந்து இருக்கிறது. அவரும் மனம்விட்டுத் தன் சொந்தப் பிரச்னைகளைக்கூடப் பகிர்ந்து இருக்கிறார். ஏன்? ஒரு வார இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புடவைகள்கூட விற்று இருக்கிறார்!

ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா…?

கோவையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சி நிகழ்வில் மா.பொ.சிவஞானம், “சினிமா நட்சத்திரங்கள் தேச நலன் கருதி கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்தவேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல் தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இதை முன்வைத்து அப்போது ஒரு வார இதழ், கட்டுரை எழுத முடிவு செய்தது. அதாவது, ஒரு பிரபலத்தைப் புடவை விற்கவைத்து, அந்த அனுபவங்களைக்  கட்டுரையாக எழுதுவது. இதற்காக அவர்கள் தேர்வுசெய்த பிரபலம் ஜெயலலிதா…!

இதை ஜெயலலிதாவிடம், அந்த பத்திரிகையின் நிருபர் திரைஞானி சொன்னவுடன், ஜெ. கேட்ட கேள்வி, “சரி நான் வருகிறேன்… ஆனால், எனக்கொரு சந்தேகம். என்னை ஏன் இதற்காகத் தேர்வுசெய்தீர்கள்…?” என்பதுதான்.

இதுதான் காரணமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், திரைஞானி ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து இருக்கிறார். அந்தப் பதில் இதுதான், “ ‘கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்த வேண்டும்’ என்று சொன்னவர் பெயர் சிவஞானம். நீங்கள் குடியிருக்கும் தெருப்பெயர் சிவஞானம் தெரு. அதனால்தான்…!”

ஜெ. சிரித்தப்படி… “சரி… தெருத்தெருவாகத்தான் விற்க வேண்டுமா…” என்று தயக்கத்துடன் கேட்க, அதற்கு திரைஞானி, “தெருத்தெருவாகக் கூவி விற்க வேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்கள் யாருக்காவது விற்றால் போதும்” என்றிருக்கிறார்.

ஜெயலலிதா கைத்தறிப் புடவை உடுத்திக்கொள்ள… ஒரு மூட்டை கைத்தறித் துணிகளுடன், அவர்கள் புடவை விற்கச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடம் அந்தச் சமயத்தில் ஜெ-வுக்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளர் சிவசங்கரி வீடு.

ஏதோ ஒரு கட்டுரைக்காகத்தானே செல்கிறோம் என்றில்லாமல்… புடவைகள் குறித்து முழுவதுமாகத் தெரிந்துகொண்டு, “இது கோயம்புத்தூர் காட்டன்; இது காஞ்சிபுரம்; இது கந்துவால்; இது வெங்கடகிரி…’’ என்று ஒவ்வொரு புடவையின் சிறப்புக் குறித்தும் விளக்கி இருக்கிறார். இதுகுறித்து திரைஞானி, “ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதைப்பற்றி முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு இண்டலெக்ஸுவலாக நடந்துகொள்வார்…” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுபோல இன்னொரு சம்பவமும் இருக்கிறது. பாலா என்ற பத்திரிகையாளர் ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும்போது, ஜெயலலிதாவை பேட்டிகாணச் சென்றிருக்கிறார். இவர் கேட்ட கேள்விகளுக்கு… ஜெ., சுவாரஸ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருக்க… அப்போது அந்தப் படத்தின் கதாநாயகன் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பாலா தயக்கத்துடன் அங்கிருந்து எழ… அதற்கு ஜெயலலிதா, “ஏன் எழுகிறீர்கள்… இப்போது நீங்கள் என் கெஸ்ட்… யாருக்காகவும் எழுந்திருக்கத் தேவையில்லை” என்றிருக்கிறார். இதைப் பின்னாளில் பாலா, தான் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.

இதையெல்லாம் படிக்கப்படிக்க உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்ட ஜெயலலிதாவா இது…? 2001-ம் ஆண்டு பத்திரிகையாளர்களை ஓடஓட விரட்டித் தாக்கிய ஜெயலலிதாவா இது…?

ஹூம்… பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான். காலமும், அது தந்த பதவியும்… பதவி தந்த அதிகாரமும் ஒரு மனிதனை இவ்வளவு இறுக்கமாகவா ஆக்கும்…? ஆம்… இவரை ஆக்கி இருக்கிறது! இப்போது புடவை எல்லாம் விற்க வேண்டாம்தான். அது ஒரு முதல்வரின் வேலையும் இல்லைதான். ஆனால், தமிழகத்தின் தலையாயப் பிரச்னைகளின் போதாவது, ஊடகவியலாளர்களைச் சந்தித்து இருக்கலாம்.

சந்தியாவுடனான சண்டை!

சரி வாருங்கள்… விட்டஇடத்துக்கே செல்வோம்….! ஆறாவது அத்தியாத்தில், இனி நடிப்புத்தான் தன் எதிர்காலம் என்று அம்மு முடிவு செய்துவிட்டார் என்று பார்த்தோம்தானே? என்னதான் நடிப்பு என்று முடிவு செய்துவிட்டாலும், படிப்பின் மீதான காதல் அவரது ஒவ்வோர் அணுவிலும் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதை அவரால் கைவிட முடியவில்லை. அந்தச் சமயத்தில், அவருக்கு வடிகாலாக இருந்தது, ஆங்கில இலக்கியங்கள்தான். ஆம், படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதாவை மேக்கப் இல்லாமல்கூட பார்க்க முடியும். ஆனால், அவரது கரங்களில் புத்தகம் இல்லாமல் பார்க்க முடியாது.

பள்ளியும், அவர் படித்த ஆங்கில இலக்கியங்களும் அந்தச் சமயத்தில் அவருக்கு இன்னொன்றையும் கற்றுத் தந்து இருந்தது. அது, தேவையற்ற போலி மரியாதைகளைத் துறப்பது…! ஆனால், வெற்று மரியாதைகளால் கட்டமைக்கப்பட்டத் திரைத்தொழிலுக்கு இது உதவாதுதானே…?

‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு. ஜெயலலிதா தன்னுடைய பகுதி படப்பிடிப்பு முடிந்ததும், தளத்தில் அமைதியாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து புத்தகம் படித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் வந்ததைக்கூட அவர் கவனிக்காமல், மொத்த கவனத்தையும் புத்தகத்தில் குவித்து இருக்கிறார். இதைப் பார்த்தவுடன் தளத்தில் இருந்த மூத்த கலைஞர்களுக்குச் சங்கடமாக ஆகிவிட்டது. அவர்கள் சந்தியாவை அழைத்து, “சந்தியா… அம்முவுக்குப் படப்பிடிப்புத் தளத்தில் சீனியர்கள் முன்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடு…” என்று கடிந்துகொண்டிருக்கிறார்கள்.

சந்தியா, அம்முவிடம் இதைச் சொன்னவுடன்… அம்மு கொதித்து எழுந்துவிட்டார். “ஏன் இந்த வெற்று மரியாதைகள் எல்லாம்…? என்னால் இதுபோன்ற வெற்றுச் சட்டங்களுக்குக் கீழ்படிய முடியாது. அதற்குக் கீழ்படிய வேண்டுமென்றால், என்னால் இனி படப்பிடிப்புக்குச் செல்ல முடியாது” என்று கடிந்திருக்கிறார். சந்தியா நிகழ்த்திய ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பின்பே அம்மு இதற்குச் சம்மதித்து இருக்கிறார்…!

இதைப் படிக்கும்போது, ஜெயலலிதா வாகனத்தின் முன்பு சாஷ்டாங்கமாகப் படுத்துவணங்கும் அமைச்சர்கள்  உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல…!

 

(தொடரும்)

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.