நடிகர் ராம் நிஷாந்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சுடர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடி ராத்தி..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். வி. சிவா சூர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சுடர்’ திரைப்படத்தில் ராம் நிஷாந்த், கிரிஷிகா, ரம்யா முருகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பி .ஹரி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வான் இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியில் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷான்விபா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாண்வி தியாகராஜன் – விபா தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஏலேலோ ஏலேலோ மொத்த உசுர் பொழக்க ஒத்த நொடி சிரிக்க அடி ராத்தி முகம் காட்டேன்..’ என தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் எஸ். வி. சிவா சூர்யா எழுத, பின்னணி பாடகிகள் கண்ணம்மா- ஜோதி கலை -பின்னணி பாடகர் லட்சுமி காந்த் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான உறுதியான பிணைப்பை உணர்வு பூர்வமாக விவரிக்கும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.