இங்கிலாந்தின் யோக்ஷயர் வனவிலங்கு பூங்காவில் உள்ள புலி அடைப்புக்குள் நுழைந்த நபரொருவர், புலி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, குறித்த பூங்கா தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
தெற்கு யோக்ஷயரின் டான்காஸ்டர் பகுதிக்கு அருகிலுள்ள இந்த வனவிலங்கு பூங்காவில் சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் நபரொருவர் பார்வையாளர் நடைபாதையில் இருந்து புலி அடைப்புக்குள் இறங்கியதாக அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. புலி தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த எலா போர்ட் என்ற 24 வயதுடைய பெண் விபரிக்கையில், காதுகேட்கும் கருவியை அணிந்திருந்த நபர், புலி அடைப்புக்கு அருகில் பதற்றத்துடன் உலாவிக்கொண்டிருந்ததாகவும், சில நிமிடங்களில் பாதுகாப்புத் தடைகளைத் தாண்டி உள்ளே குதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த நபர், தவழ்ந்து சென்று புலி இருந்த இடத்துக்கு அருகே படுத்துக்கொண்ட வேளையில் புலி அவரைப் பிடித்ததாகவும், அவர் உதவி கோரிக் கத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது அங்கிருந்த சிலர், வேலியைத் தட்டி புலியை விரட்ட முயன்ற போதிலும் அது பலனளிக்கவில்லை எனவும், அங்கு நின்ற 15 முதல் 20 பேர் வரையிலான பார்வையாளர்களை ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றியதாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பூங்காவின் பேச்சாளர், அல்தாய் என்று அழைக்கப்படும் அந்த அமுர் வகைப் புலி தொடர்ந்து அதே அடைப்பிலேயே இருப்பதாகவும், அதற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட பூங்கா ஊழியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், முழுமையான பின்னணியைக் கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தில் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு
இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட தெற்கு யோக்ஷயர் பொலிஸார், அத்தகைய பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இங்கிலாந்து வெளிவிவகார செயலாளரும் டான்காஸ்டர் நோர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான எட் மிலிபான்ட் மற்றும் டான்காஸ்டர் ஈஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் லீ பிட்சர் ஆகியோர் இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் அவசர சேவைப் பிரிவினருக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யோக்ஷயர் வனவிலங்கு பூங்காவில், அமுர் புலிகளுக்கான பிரத்தியேக பகுதி 2011 இல் திறக்கப்பட்டது. அழிந்துவரும் இனமாக கருதப்படும் இந்த அமுர் புலிகள் வனப்பகுதிகளில் சுமார் 500 மாத்திரமே எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.