அங்காடித்தெரு – ஒரு யதார்த்தமான சினிமா அங்காடித்தெரு – ஒரு யதார்த்தமான சினிமா

aa
பல வருடங்களுக்கு முன் வெளிவந்து தமிழ் பேசும் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சினிமா. அண்மையில் மீண்டுமொரு தடவை பார்க்கக் கிடைத்தது. வர்த்தக நோக்கோடு மாயைகளை பிரமாண்டமாக காட்டும் பொழுதுபோக்கு சினிமாக்கள்தான் இப்போது வெளிவருகின்றன என நினைப்பதுக்கும் இல்லை. காலத்தின் நிதர்சனத்துக்கு ஏற்ப உள்ளது உள்ளபடி கதையை அமைத்துள்ளார்கள். வலி நிறைந்த வாழ்கையை வெட்டித் துண்டுபோட்டு படம்பிடித்துள்ளார் வசந்தபாலன்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம்பிடித்துள்ள இயக்குனர் வசந்தபாலனின் மிகச்சிறந்த படைப்பு. தமிழ் இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகனின் கதைவசனத்தில் திரைவிரிகின்றது. தொடக்கம்முதல் இறுதிவரை மனதை இறுக்கமாக வைத்திருக்க வேண்டி உள்ளது, அப்பப்போது கதையில் ஏற்படும் சிறு சிறு மகிழ்ச்சி எமக்கும் பெருமகிழ்ச்சியாக தொற்றிக்கொள்கின்றது. சன நெரிசல் மிகுந்த நகர வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தமது வாழ்வாதாரத்துக்காக எவ்வாறு போராடுகின்றார்கள். அடிமட்ட மக்களின் தினசரி போராட்டம் ஒவ்வொரு காட்சியிலும் தென்படுகின்றது.

a1
சினிமா என்றால் காதல் எனக் கருத்தோட்டம் இருக்கும்போது அந்தக் காதலை ஒரு நூல் இழைமூலம் சொல்லியிருப்பது கதைக்கு பலமாக அமைகின்றது. ஆர்ப்பாட்டமில்லாத காதல் காட்சிகள் இருந்தாலும் மூடிய கடைக்குள் பாடல் காட்சியை காட்டுவதும் அதுவும் கடையில் விற்பனைக்கு வைத்துள்ள ஆடைகளை உடுத்தி பாடல்க் காட்சிகளை அமைத்ததும் சற்று மிகைப்படுத்தலாக தோன்றினாலும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும்படி காட்சிகளை அமைத்துள்ளார்கள்.

திரையில் வரும் கிளைக்கதைகள் எல்லாம் ஒன்றோடு ஓன்று சேர்ந்து இயக்குனர் சொல்லவந்த விடையத்தை பலப்படுத்துகின்றன. எல்லோருக்கும் அறிமுகமான ஒரு களத்தில் கதை நகர்வதும் ஒவொருவரும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் ஆடைகள் வாங்கிய அனுபவமும் ஏதோவொரு விதத்தில் இத் திரைக்கதையுடன் இணைக்கப்படுவது போன்ற உணர்வு.

a2

நடந்துகொண்டு இருக்கும் மிகப்பெரிய அவலத்தை சினிமா என்ற ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்திய இயக்குனர் வசந்தபாலனின் திறமையையும் துணிச்சலையும் வணக்கம் லண்டன் இணையம் பாராட்டுகின்றது. இத் திரைப்படத்தின் வெற்றி என்பதற்கு, இக்கதை ஏற்படுத்திய தாக்கத்தினால் பல வர்த்தக நிறுவனங்களில் பின் நாட்களில் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சி.

ஆசிரியர்