Tuesday, September 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கவுண்டமணி டு சந்தானம், வழி வடிவேலு! – சுந்தர்.சி படங்களின் காமெடி காட்சிகள் ரீவைண்ட்

கவுண்டமணி டு சந்தானம், வழி வடிவேலு! – சுந்தர்.சி படங்களின் காமெடி காட்சிகள் ரீவைண்ட்

7 minutes read

சுந்தர்.சி-யின் காமெடியன்கள்

கொடுவா மீசை, அருவா கிருதா என டெரர் லுக்கில் காமெடி பண்ணும் காமெடியன்கள், உருட்டுக்கட்டையில் அடித்தவுடன் வரும் மயக்கம், க்ளைமாக்ஸில் பெரிய ரேஸிங், சேஸிங் என சுந்தர்.சி படங்களின் காமெடி காட்சிகள் தனித்துவம் வாய்ந்தவை.

சுந்தர்.சி-யின் காமெடியன்கள்

கொடுவா மீசை, அருவா கிருதா என டெரர் லுக்கில் காமெடி செய்யும் காமெடியன்கள், உருட்டுக்கட்டையில் அடித்தவுடன் வரும் மயக்கம், க்ளைமாக்ஸில் பெரிய ரேஸிங், சேஸிங் என சுந்தர்.சி படங்களின் காமெடி காட்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. இன்று ஹேப்பி பர்த்டே கொண்டாடும் சுந்தர்.சி -யின், சிறந்த காமெடிக் காட்சிகளை ரீவைண்டு அடித்து நாமும் ஹேப்பியாவோம் மக்களே…

சுந்தர்.சி & வடிவேலு
சுந்தர்.சி & வடிவேலு

`வின்னர்’ கைப்புள்ள இன்ட்ரோ :

வின்னர்
வின்னர்

`தல வெளிய வா தல…’ என்பதில் தொடங்கி, `ஐயோ அம்மா காலு, என் காலு’ என்பது வரை முழுக் காட்சியையும் அப்படியே ஒப்புவிப்பவர்கள் அநேகம். `வேணாம்… வலிக்குது, அழுதுருவேன்’, `அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்’, `சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு’ என அந்த பச்சை சட்டையை அணிந்துகொண்டு வடிவேலு பேசிய அத்தனை வசனங்களும் இன்றும் பச்சக் என மனதில் ஒட்டியிருக்கிறது. பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவும் கிச்சுகிச்சு மூட்டியிருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நிரந்தர தலைவர் கைப்புள்ள கதாபாத்திரம், தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாதது.

`ரெண்டு’ கிரிகாலன் காதல் வகுப்புகள் :

ரெண்டு
ரெண்டு

`ஆபத்துக்கு உதவுணும், அநியாயத்தை கண்டா பொங்கணும், அடிமனசை டச் பண்ணணும்’ என லவ்வை டெவலப் பண்ணும் முயற்சியில் இறங்கி, செமத்தியாய் வாங்கி கட்டிக்கொள்வார் கிரிகாலன். அதிலும், கிரேன் மனோகரின் கேமியோ உச்சக்கட்டம்! `ஆத்தா சூடத்தோட சூடுதாங்க முடியலை’, `கேட்குறாங்கள்ள சொல்லாதீங்கய்யா’, `எங்கிட்ட சரசம் பண்றதுக்குனே வருவீங்களாடா’ என முழு காட்சியும் அதகளம். `தேல்பத்ரிசிங்’கில் இமானும் தன் வேலையைக் காட்டியிருப்பார்.

`உள்ளத்தை அள்ளித்தா’ கடத்தல் காட்சி :

உள்ளத்தை அள்ளித்தா
உள்ளத்தை அள்ளித்தா

படத்தில் மணிவண்ணனைக் கடத்த நடக்கும் நாடகத்தை எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு கேரண்டி. ஐந்து லட்சத்திற்கு ஆரம்பிக்கும் பிணையத் தொகை, 400 ரூபாய் வரை இறங்குவது, `டேய், கிட்னா நாயே’ என கவுண்டமணிஅடிக்கும் கவுன்டர்கள் எல்லாம் வேற லெவல். காமெடியை டெம்ப்போவில் அல்ல, புல்லட் ரெயிலில் வைத்து கடத்தியிருப்பார்கள்.

`மேட்டுக்குடி’ காதல் கடிதம் :

மேட்டுக்குடி
மேட்டுக்குடி

`என் மனசில இருக்குற காதலை நானே லெட்டர் மூலமா சொல்லிடுறேன்’ என முடிவெடுத்து, `யெக்கா மகளே இந்து’ என கவுண்டமனி சொல்லிக்கொண்டே எழுதும் ரொமாண்டிக் கடிதமும் காதல் ரசம் சொட்டும் ரொமாண்டிக் லுக்கும் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். அப்படி என்ன இத்தனை நேரம் அமுக்கி அமுக்கி எழுதியிருப்பார் என கார்த்திக் படித்துக்காட்டச் சொல்ல, `என் அக்கா மகள் இந்துவுக்கு, உன் தாய்மாமன் ஆயிரம் கோடி ஆசீர்வாதங்களுடன் வரையும் மடல்…’ என குபீர் கிளப்புவார் கவுண்டமணி.

`கலகலப்பு’ ஐஸ்பாய்ஸ் சேஸிங் :

கலகலப்பு
கலகலப்பு

பேய், திமிங்கலம், மண்ட கஷாயம் எனும் அடாவடி அடியாட்களுடன் அஞ்சலியைக் காப்பாற்ற சந்தானம் செய்யும் சேஸிங், செம ரகளை! சேஸிங்குக்கு இடையில் மூன்று அடியாட்களும் எழுப்பும் அப்பாவித்தன கேள்விகளும், அதற்கு சந்தானத்தின் முரட்டு கவுன்டர்களும் என கலகலப்பு மூட்டியிருப்பார்கள். இதற்கு இடையில், மனோபாலா வைக்கப்போரில் ஒளிந்துகொண்டு ஆடும் ஐஸ்பாய்ஸ் ஆட்டம்தான், பங்கம்!

`உனக்காக எல்லாம் உனக்காக’ டெரரிஸ்ட் :

உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக

டெரரிஸ்ட் வேடமணிந்து, ரம்பாவை துரத்தும் காட்சியில் சோலோவாக ஸ்கோர் செய்திருப்பார் கவுண்டமணி. அந்தக் காட்சியில், கவுண்டமணியின் டயலாக் மாடுலேஷன், பாடி லாங்வேஜ், அந்த கிளிமூக்கு கெட்டப், பறந்து பறந்து அடிக்க முயலும் ஸ்டன்டுகள் என ஒவ்வொரு இன்ச்சும் நமக்கு சிரிப்பு மூட்டும். கடைசியில், அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு கெத்தாக நடந்துவருவார் கவுண்டமணி.

`நகரம் மறுபக்கம்’ ஏரியாவுக்கு வாடா :

நகரம் மறுபக்கம்
நகரம் மறுபக்கம்

இதுவும் `வின்னர்’ காமெடியைப் போலதான், வடிவேலு ஷேர் ஆட்டோவில் தொங்கிக்கொண்டு வருவதில் தொடங்கி, கடைசியில் சுந்தர்.சி-யின் காலைப் பிடித்துக் கதறுவது வரை அப்படியே மனப்பாடமாய் ஒப்புவிக்கச் சொன்னால், பலரும் செய்வார்கள். `மணி என்ன?’ என கேட்பதற்கு முன், வடிவேலு ஒரு சிரிப்பு சிரிப்பாரே, நம்மால் எவ்வளவு முயன்றாலும் அப்படி சிரிக்க முடியாது!

`கிரி’ கட்டாயக் கல்யாணம் :

கிரி
கிரி

ரீமாசென் கழுத்தில் வடிவேலு வலுகட்டாயமாக தாலி கட்ட முயன்று, முயற்சியெல்லாம் வீணாகப்போவது முரட்டு காமெடி. அதிலும் ஒவ்வொரு முறை வடிவேலு தூக்கியெறிப்படும்போதும், மதன்பாப்பின் மீது விழுவதோ தனி லேயர். `ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்மா’ கதையும், `டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது’ கதையும் பாட்டி வடை சுட்ட கதைபோல், க்ளாஸிக் கதையாகிவிட்டது.

`முறைமாமன்’ சமையல் காட்சி :

முறைமாமன்
முறைமாமன்

கவுண்டமணியும் ஜெயராமும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குப் பஞ்சமே இருக்காது. அம்மா, அக்காவுடன் சண்டை போட்டுவிட்டு, தாங்களே சமைத்துக்கொண்டு பாசமழை பொழியும் காட்சி, பட்டாஸ்! இப்படி, தன் படங்களின் காமெடி மூலம் தமிழர்களைக் கவலை மறந்து சிரிக்கவைத்த சுந்தர்.சி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More