Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ‘அழகிய பாடகன்’ ஹரிஷ் ராகவேந்திராவின் இசைப்பயணம் | கானா பிரபா

‘அழகிய பாடகன்’ ஹரிஷ் ராகவேந்திராவின் இசைப்பயணம் | கானா பிரபா

4 minutes read
Singer Harish Raghavendra To Treat His Fans With Suriya's 'S3' - Desimartini

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழின் ஒப்பற்ற கவிஞன் மகாகவி சுப்ரமணிய பாரதியின் வாழ்வைப் பதிவாக்க‌ அடுத்த நூற்றாண்டு வரை செல்ல வேண்டியிருந்தது தமிழ் சினிமா உலகுக்கு. 2000 ஆம் ஆண்டில் தான் அந்த முயற்சி “பாரதி” என்ற திரைப்படத்தின் வழியாகக் கைகூடியது. இதற்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் என்ற உச்ச நட்சத்திரமே தனது கனவுப் பாத்திரமாக பாரதியாக நடிக்க வேண்டும் என்ற முயற்சி கூட எடுபடவில்லை. “கொட்டு முரசே” என்று ஒரு திரைப்படம் நடிகர் சக்ரவர்த்தியை பாரதியாக நடிக்க வைத்து எடுக்கப்பட்டது, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கை கொடுத்தும் எடுபடாமல் போன படம் அது. அந்த வகையில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த பாரதி திரைப்படமே தமிழ்ச் சூழலில் பரவலாக அறியப்பட்ட பாரதியார் குறித்த சினிமாவாக அமைந்து விட்டது. அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்ததில் இசைஞானி இளையராஜாவின் இசைப்பங்களிப்பு உன்னதமானது. கே.ஜே.ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, ராஜ்குமார் பாரதி உள்ளிட்ட இசையுலக ஜாம்பவான்கள் பங்களிப்பில் அமைந்த அந்தப் படத்தின் பாடல்களில் முதன்மையாகக் கவனிக்கப்பட்டது.

அப்போது யாருக்குமே பரிச்சயமில்லாத அறிமுகக்குரல் ஒன்று அதுதான் ஹரிஷ் ராகவேந்திராவின் குரல். ” நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற அந்த ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவலாகப் பிரபலமடைந்தது. இன்றும் பாரதியை நினைவு கொள்ளும் நாட்களில் ஹரிஷ் ராகவேந்திராவின் அந்தப் பாட்டு தவறாமல் உட்கார்ந்து கொள்ளும்.

“பாரதி” திரைப்படத்தின் மூலமாக ஹரிஷ் ராகவேந்திரா பரவலாக அறியப்பட்ட இளையதலைமுறைப் பாடகர் என்ற அந்தஸ்த்தை அடைந்து விட்டாலும் அதற்கு முன்பே “அரசியல்” திரைப்படத்தில் வித்யா சாகர் இசையில் “வா சகி வாசுகி என்ற பாடல் தான் இவருக்கான அறிமுகப்பாடல். இந்தப் பாடலை எழுதியவர் பிரபல பின்னணிப் பாடகர் அருண்மொழி என்பது உபரித் தகவல். ” நிற்பதுவே நடப்பதுவே” பாடலின் வழியாக இளைய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரமாக அமைந்து விட்ட பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் வட்டத்தில் நில்லாமல் அன்றைய காலகட்டத்தில் இன்று வரை பல்வேறு இசையமைப்பாளர்களின் மிகவும் பிரபலமடைந்த பாடல்கள் என்று பட்டியலிடும் போது கண்டிப்பாக இவருடைய பாடல்களும் இருக்குமளவுக்கு உயர்ந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் கேட்போரை வசீகரிக்கும் மென்மையான சாரீரம், கச்சிதமான மொழி உச்சரிப்பு, பாடல்களில் கொடுக்கப்படவேண்டிய பாவங்களை பாவம் செய்யாது அப்படியே கச்சிதமாகக் கொடுப்பது என்பது தான் முன்னிற்கும்.

தமிழ்த் திரையிசையை எடுத்துக் கொண்டால் P. B. ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, கே.ஜே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் என்று நீளும் மென்மையான சாரீரம் படைத்த பாடகர்களுக்கும் தனியிடம் கொடுத்துக் கெளரவித்திருக்கின்றது. அந்த வரிசையில் கச்சிதமாக இடம்பிடித்துக் கொண்டார் ஹரிஷ் ராகவேந்திரா. “மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்” என்று ஷாஜகான் படத்திற்காகவும், “சக்கரை நிலவே சக்கரை நிலவே” என்று யுத் படத்துக்காகவும் தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்கின்ற மணிசர்மா இசையில் பாடினார். இந்த இரண்டு படங்களும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய் நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இயக்குனர் செல்வராகவன் என்ற வெற்றிக் கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக அமைந்த படமான “காதல் கொண்டேன்” படத்தின் உச்ச வெற்றியில் பங்கு போட்டுக் கொண்டது ஹரிஷ் ராகவேந்தர் பாடிய “தேவதையைக் கண்டேன்”, ” தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்” ஆகியபாடல்கள். மீண்டும் அதே வெற்றிக் கூட்டணி இணைந்த 7ஜீ ரெயின்போ காலணி படத்திலும் “கனா காணும் காலங்கள்” என்ற இனிமையான பாடல் இவருக்கு வாய்த்தது.

எப்படி பாரதி திரைப்படத்தில் இளையராஜா என்ற மிகப்பெரும் இசையமைப்பாளரின் வழியாகப் பரவலானதொரு அறிமுகத்தை ஹரிஷ் ராகவேந்திரா பெற்றாரோ அதற்கு இன்னொரு திசையில் ஹாரிஷ் ஜெயராஜ் என்ற இன்றைய தமிழின் முக்கிய இசையமைப்பாளரின் அறிமுகத்துக்கு வழிகோலியது அவரின் “மின்னலே” படத்தில் கொடுத்த அதியற்புதமான பாடல்கள். அவற்றில் “ஏ அழகிய தீயே” என்ற மேற்கத்தேய இசை கலந்த துள்ளிசைப்பாடலிலும் தன் இருப்பைக் காட்டி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ஹரிஷ் ராகவேந்திரா.

ஹாரிஸ் ஜெயராஜுக்கு நல்லதொரு அறிமுகமாக “ஏ அழகிய தீயே” போன்ற பாடல்கள் வாய்த்ததாலோ என்னமோ, அவரின் இசையில் ஹரிஷ் ராகவேந்திராவுக்குக் கிடைத்த எல்லாப் பாடும் வாய்ப்புகளுமே பிரபலமான பாடல்களாக அமைந்து விட்டன. குறிப்பாக மஜ்னு படத்தில் வந்த “முதற்கனவே முதற்கனவே”, 12B படத்தில் “பூவே வாய் பேசும் போது”, “நெஞ்சே நெஞ்சே” (அயன்), ” நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ” (என்றென்றும் காதல்) என்று தொடரும்.

இளையராஜாவின் இசையில் சொல்ல மறந்த கதை படத்தில் வரும் ” குண்டு மல்லி குண்டு மல்லி” எப்போது கேட்டாலும் இனிய உணர்வைத் தருவதற்கு இசை மட்டுமல்ல, சேர்ந்து பாடிய ஹரிஷ் ராகவேந்திராவும் தான் காரணம். கார்த்திக் ராஜா அரிதாக ஆனால்

அருமையாக

இசைமைத்த படங்களில் ஒன்று டும் டும் டும் அந்தப் படத்தில் “தேசிங்கு ராஜா” , “கிருக்ஷ்ணா கிருஷ்ணா” ஆகிய இரண்டு முத்துகள் ஹரிஷ் இற்குக் கிட்டியிருக்கின்றன.

“தோழியா என் காதலியா” என்று விஜய் ஆன்டனியின் இசையில் பாடிய போதும் “மழை பெய்யும் போது” என்று கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடியபோதும் இசையமைப்பாளர் யார் என்ற பரிச்சயம் இல்லாத போதும் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றவை அவை.

ஆட்டோகிராப் திரைப்படம் வெற்றி கண்டபோது அந்தப் படத்தின் பாடல்களும் பிரபலமடைந்தன. “மனசுக்குள்ளே தாகம் வந்தல்லோ” என்று ஹரிஷ் ராகவேந்திரா ஜோடி கட்டிய பாடல், பரத்வாஜ் இசையில் வந்ததை யாரும் சுலபமாக மறந்துவிடமாட்டார்கள். ஸ்ரீகாந்த் தேவாவுக்கு வெற்றியைச் சமைத்துக் கொடுத்த M.குமரன் S/O மகாலட்சுமி படத்தில் “சென்னைச் செந்தமிழ் மறந்தேன்”, “களவாணி திரைப்படம் வெற்றி வாகை சூடியபோது அறிமுக இசைமைப்பாளர் S.S.குமரனின் இனிய இசையில் வந்த “ஒரு முறை” என்று ஹரிஷ் ராகவேந்திரா பாடிய இசைமைப்பாளர் பட்டியல் நீளும்.

இன்றைய தமிழ்த்திரையிசை உலகில் ஒரு பாடலோடு திருப்திப்பட்டுக் கொள்ளும் பாடகர்களோடு தசாப்தம் கடந்து தமிழின் முக்கியமானதொரு பாடகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்ற ஹரிஷ் ராகவேந்திராவின் இருப்பு இன்னும் தொடரும் என்பதை அவர் கொடுத்த பாடல்களும், கொடுக்கப்போகும் பாடல்களும் மெய்ப்பிக்கும்.

இனிய பிறந்த நாள்

வாழ்த்துகள்

ஹரிஷ் ராகவேந்திராவுக்கு ♥️

கானா பிரபா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More