செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பத்தா | திரைவிமர்சனம்

பத்தா | திரைவிமர்சனம்

4 minutes read

தயாரிப்பு : ஸ்டார் ஸ்டுடியோ 18 –  ஏ ஃபார் அப்பிள் ஸ்டுடியோ – சினி 1 ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : விஜய் சேதுபதி, லிஜோ மோள் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட், மாஸ்டர் சாய் பிருத்வி ராஜ் மற்றும் பலர்.

இயக்கம் : பாலாஜி தரணிதரன்

மதிப்பீடு : 3/5

விஜய் சேதுபதி- பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது படைப்பு…. இயக்குநர் அட்லியின் பங்களிப்பு… விண்டேஜ் பாணியிலான படத்தின் டிசைன்… சாய் அபயங்கரின் இசை… என பல அம்சங்களை கொண்டிருப்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் வார விடுமுறை தருணத்தில் படமாளிகைக்கு சென்றனர். அவர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது..? என்பதை தொடர்ந்து காண்போம்.

படத்தின் டைட்டிலில் 1966 ஆம் ஆண்டு என ஓர் ஆண்டை குறிப்பிட்டு.. அந்த காலகட்டத்திய தொழில்நுட்பத்துடன் மிக நேர்த்தியாக ஒரு கதவு வடிவமைக்கப்படுகிறது. இந்த கதவு படத்தை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு… கதையில் விவரிக்கப்பட உள்ள முதன்மையான கதாபாத்திரத்தின் சுய பரிசோதனைக்கான குறியீட்டை உணர்த்துகிறது. இப்படி ஒரு கதவின் மூலமாக படைப்பை தீவிரமாக நேசிக்கும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கதாசிரியரும், இயக்குநரும் உருவாக்குகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த கதை இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு அதாவது 1986 ஆம் ஆண்டில் வட சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு பகுதியில் நடைபெறுகிறது. அப்பகுதியில் சட்ட விரோத காரியங்களை செய்து மக்களுக்கு தன் மீதான பயத்தை பொதுவெளியில் ஏற்படுத்தி போக்கிரியாக வலம் வருகிறார் பத்தா( விஜய் சேதுபதி) .

இவருக்கு கன்னிமா ( லிஜோ மோள் ஜோஸ்) என்ற மனைவியும் தேன்மொழி( சஹஸ்ரா)  என்ற பெண் பிள்ளையும் இருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் குடும்ப தலைவருக்கே உரிய ஆணாதிக்க சிந்தனையுடன் இருக்கும் பத்தா.. மற்றவர்கள் தன் மீது பயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அடிதடி, வன்முறைகளில் ஈடுபடுகிறார். இதனை ஒரு முறை அரசாங்க பாடசாலையில் மூன்றாம் நிலை கல்வி பயிலும் சபரி ( சாய் பிருத்வி ராஜ்) எனும் மாணவன் நடு வீதியில் பார்த்து மனரீதியாக அச்சமடைகிறான். பாடசாலையில் அவனுடன் பயிலும் மாணவர்களும் பத்தா பற்றிய பல அச்சுறுத்தும் பிம்பங்களை கட்டமைக்கிறார்கள். இதனால் பத்தா என்ற பெயரை கேட்டாலே உடல் நடுங்கும் அளவிற்கு மாறுகிறான் சபரி.

ஊர் முழுவதும் எதிரிகள் இருப்பதால் தன் கணவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ..! என கன்னிமா பயப்படுகிறார். அவர் வீட்டிற்கு சற்று தாமதமாக வருகை தந்தாலும் அதற்குள் பதட்டமடைகிறார். இந்நிலையில் பத்தா வீட்டிற்கு வரவில்லை. ஒரு நாள்… இரண்டு நாள்… என எட்டு நாள் கடந்து செல்கிறது. இதற்குள் அவருடைய மனைவி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். காவல்துறையும்.. பத்தாவின் சகாக்களும்… பத்தாவை தீவிரமாக தேடுகிறார்கள். இந்நிலையில் சபரி தன்னுடைய பெற்றோரிடம் பிடிவாதம் பிடித்து வாங்கி மகிழ்ந்து விளையாடும் ஒரு பொம்மையை பாடசாலைக்கும் எடுத்துச் சென்று ஓய்வு கிடைக்கும் தருணங்களில் எல்லாம் அதனை வைத்து விளையாடி மகிழ்கிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த வகுப்பு ஆசிரியை அந்த பொம்மையை பாடசாலையில் உள்ள ஒரு பீரோவில் வைத்து விடுகிறார். ஆண்டு விடுமுறை என்பதால் பாடசாலைக்கு ஆசிரியர்களோ… மாணவர்களோ… ஊழியர்களோ… வருவதில்லை. இந்த தருணத்தில் ஒரு நாள் அதிகாலையில் எழுந்து பாடசாலைக்குச் சென்று பிரத்யேக ஆசிரியர் அறையில் உள்ள பீரோவில் இருந்து தன் விருப்பத்திற்குரிய விளையாட்டு பொருளை எடுக்கும் சபரி.. இயற்கை உபாதையை கழிப்பதற்காக கழிவறையை பாவிக்கிறார். அதன் பிறகு அந்த கழிவறை கதவை மீண்டும் பூட்ட வேண்டும் என்பதற்காக திரும்ப வந்து தாழ்ப்பாள் போடுகிறார். அதற்குள் உள்ளிருந்து பத்தாவின் குரல் கேட்கிறது. அந்தக் குரல்.. பத்தாவின் குரல் என அடையாளம் காணும் சபரி, பதட்டத்திலும்.. அச்சத்திலும்.. அதனை திறக்க மறுத்து அங்கிருந்து சென்று விடுகிறார். அதன் பிறகு மற்றவர்கள் பத்தாவை காணவில்லை என தேடிக் கொண்டிருக்க… பத்தா தன்னுடைய பாடசாலையில் கழிவறையில் பூட்டப்பட்டு இருக்கிறார் என்ற உண்மையை சொல்ல முடியாமல் சபரி தவிக்க… இதனை தொடர்ந்து என்ன நடந்தது? என்பதுதான் இப்படத்தின் கதை.

இளம் வயதில் அங்கீகாரத்திற்காக ஏங்கும் சிறுவன் சக சகாக்களால் அவமானப்படுத்தப்படுகிறார். ‘நீ சுயம்புவான திறமைசாலியல்ல.. ஆனால் பயிற்சி பெற்றால் .. சாதனையாளராக திகழலாம்..’ என உளவியல் ரீதியிலான ஆலோசனையும், ஆறுதலையும் அந்த  மாணவனை வழிநடத்த வேண்டிய ஆசிரியையும் வழங்க தவறுவதால்… அவன் சமூகத்தின் மீது இரக்கமற்ற தன்மையை மேற்கொண்டு, தன்னை பற்றிய அச்சம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். இதனை சாதாரண பாடசாலையில் பயிலும் மாணவன் ஒருவன் சந்தர்ப்ப சூழலால் இது தவறு என அவனை சுய பரிசோதனைக்கு உட்படுத்துகிறான். தனிமை- பசி -உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை உடைத்து, வாழ்வின் எதார்த்தத்தை உணர்த்தும் போது… ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் மனிதமும், மனித நேயமும் பீறிட்டு எழும் என்பதை பத்தா கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்தியிருக்கும் இயக்குநரை கரம் வலிக்க கைகுலுக்கி பாராட்டலாம்.

இந்தப் படத்தின் கதையும் , திரைக்கதையும் நேர்க்கோட்டில் பயணித்தாலும்… ரசிகர்களுக்கான திரையரங்க அனுபவ தருணங்கள் என்பது குறைவுதான். ஆனால் விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘மகாராஜா’ போன்ற அழுத்தமான கதை அம்சங்களை ரசித்து கொண்டாடிய மக்களுக்கு அதற்கு இணையாக பத்தாவையும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய நவரச பாவனைகளை காட்சிப்படுத்தி.. ரசிகர்களை எளிதாக வசீகரிக்கிறார். அதிலும் அவருடைய எனண்பது காலகட்டத்திய தோற்றம் சற்று நெருடலாக இருந்தாலும்  ரசிக்க முடிகிறது.

விஜய் சேதுபதிக்கு நிகராக அற்புதமான நடிப்பை சபரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பிருதிவிராஜ் திரையில் வழங்கி, ரசிகர்களை தன் மீது கவனத்தை திருப்பி இருக்கிறார். இவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு . இந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்குரிய தனியார் அமைப்புகள் வழங்கும் விருது உறுதி.

கன்னிமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிஜோ மோல் ஜோஸ் பாந்தமான- பொருத்தமான- திரை தோற்றத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார். உச்சகட்ட காட்சியில் அவர்கள் வீட்டு சுப நிகழ்வில் சபரியை சந்தித்து அவரது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடும் காட்சி… ஆயிரம் அர்த்தங்களை கொண்டது. முத்தக் காட்சியிலும் உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்த முடியும் என்பதை லிஜோ மோள் ஜோஸ் நிரூபித்திருக்கிறார்.

‘செல்லமே’ பாடலில் இசையமைப்பாளரின் ஜீவனுள்ள இசை வெளிப்படுகிறது. பின்னணி இசையிலும் சாய் அபயங்கர் தன் முத்திரையை பிரத்யேகமாக பதித்திருக்கிறார். குடும்பம் என்ற அமைப்பின் கோணத்திலிருந்து சமூகத்தை உற்று நோக்க வேண்டும். அப்போதுதான் மனித மனங்களில் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற உணர்வு எழும் என்பதையும் இயக்குநர் உணர்த்தி இருப்பதை பாராட்டலாம்.

திருமணம் ஆகி பெண் பிள்ளையுடன் வாழும் ரவுடியை.. சிறுவன் ஒருவன் தன் சிந்தனை எல்லைக்கு எட்டிய வகையில் அடைத்து வைத்து, அவனுக்கு வாழ்க்கை பற்றிய பாடத்தை புகட்டுகிறான் என்ற சிந்தனை சிறப்பு என்றாலும்.. அதனை வெகுஜன ரசனைக்கு ஏற்ப நெருக்கமான தியேட்டரிக்கல் மொமெண்ட்ஸ் உடன் விவரிக்கப்பட்டிருந்தால்… இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்திருக்கும். ஆனாலும் கதையும், திரைக்கதையும் புதிதாகவும் சுவராசியும் மிக்கதாகவும்  இருப்பதால் இதனையும் மக்கள் வரவேற்கலாம்.

பத்தா – இன்னும் இருக்கலாம் கெத்தா..!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.