Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி அரசியலுக்கு வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்?

அரசியலுக்கு வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்?

5 minutes read
அரசியலுக்கு வந்த தமிழக நடிகர்கள் என்ன ஆனார்கள்!

உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில ரசிகர்கள் கோபமும் அடைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் இதுவரை பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும், அரசியல் கட்சியை தொடங்காமல் தனது பயணத்தை ரஜினி நிறுத்திக்கொண்டார் என்பது ரசிகர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.

ரஜினிக்கு முன்னதாக தமிழக நடிகர்கள் பலரும் அரசியல் களம் கண்டு, ஒரு சில காலத்தில் கட்சியை திராவிட கட்சிகளோடு இணைத்து கொண்ட வரலாறை தமிழகம் கண்டுள்ளது. அரசியல்வாதியாக மாற முற்பட்ட நடிகர்கள் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர்களின் பிளாஷ் பேக்கை பற்றியும் தெரிந்து கொள்ள நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து விரிவாக எழுதி வரும் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமனிடம் பேசினோம்.

டிசம்பர் 3ஆம் தேதியன்று உயிரே போனாலும் அரசியலில் இறங்குவதை தவிர்க்க மாட்டேன் என ரஜினி சூளுரைத்து பேசியது சினிமா வசனமாக மாறிவிட்டது என்கிறார் லட்சுமணன்.

”ரஜினி தனது உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கவில்லை என அறிவித்துவிட்டார். ஆனால் இதுநாள் வரை அரசியல் கட்சி தொடங்குவதற்காக அடிப்படை வேலைகளை பெரியளவில் அவர் செய்யவில்லை என்பது வெளிப்படை. கட்சி தொடங்குபவர்கள் முதலில் உறுதியான கட்டமைப்பை கிராம அளவில் ஏற்படுத்தவேண்டும். ரஜினியை பொறுத்தவரை எந்த கட்டமைப்பையும் அவர் அமைக்கவில்லை. ஒருவேளை எதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக, கட்சி தொடங்குவதாக முன்னர் சொல்லி விட்டு தற்போது விலகிவிட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், அவருக்கு போட வேண்டிய ஓட்டை மக்கள் கமல் ஹாசனுக்கு போடுவார்களா என்பது கேள்விக்குறிதான்,” என்கிறார் லட்சுமணன்.

கட்சி தொடங்கிய கையோடு, நாடாளுமன்ற தேர்தல் ஒன்றையும் சந்தித்து விட்ட கமல்ஹாசனுக்கு சட்டமன்ற தேர்தலில் ஓட்டு கிடைப்பதில் என்ன சிக்கல்கள் இருக்கும் என கேட்டோம்.

”பூத் கமிட்டி அளவில் உறுப்பினர்கள் கட்சியில் சேர வேண்டும். கடந்த தேர்தலில் கமல்ஹாசன் கட்சியின் சார்பாக பல பூத்களில் ஆட்கள் இல்லை. ஆனால் இதுவரை அடித்தள உறுப்பினர்கள் சேர்க்கையை அவர் அதிகரிக்கவில்லை,” என்கிறார் அவர்.

கமல் மட்டுமல்ல, அவருக்கு முன்னதாக கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலை பற்றியும் விளக்கினார் லட்சுமணன்.

”நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தில் தொடர்கதை. ரஜினி, கமலுக்கு முன்னதாக விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், டி ராஜேந்திரன் என பல நடிகர்கள் திமுக, அதிமுக பலமான கட்சிகளாக இருக்கும் நேரத்தில் அரசியலில் பங்கெடுத்தவர்கள். இவர்களில் விஜயகாந்தை தவிர பிற நடிகர்கள் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்கள். அதே காரணத்தால்தான் கமல்ஹாசனுக்கு ஓட்டு கிடைப்பதில் சிக்கல் இருக்கும். அதாவது ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் அரசியல் உணர்வை இந்த நடிகர்கள் பெருமளவு ஏற்படுத்த தவறி விடுகிறார்கள். விஜயகாந்தை பொறுத்தவரை, ரசிகர் மன்றங்களை கட்சியின் உறுப்பினர் மன்றங்களாக மாற்றினார். 2005இல் கட்சி தொடங்கிய அவர், ஜனரஞ்சகமான கொள்கைகளை பேசினார். கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தினார். அடுத்த ஆண்டே தேர்தலை சந்தித்து 10 சதவீத வாக்குகளை பெற்று, எதிர்கட்சியாக தனது பலத்தை நிரூபித்தார். அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த ஆர்வத்தை தக்க வைக்கத் தவறியதால், அவரது கட்சி பலம் இழந்து வீழ்ச்சியை சந்தித்தது. நடிகர்கள் அரசியலில் எப்படி இருந்தால் வெற்றி, எப்படி இருந்தால் தோல்வி என்பதற்கு விஜயகாந்த் சான்று என்றால் அது மிகை இல்லை,” என்கிறார் லட்சுமணன்.

சமகால நடிகர்களால் அரசியல் களத்தில் நீடிக்க முடியாது எனக் கூறும் லட்சுமணன் அதற்கான உதாரணங்களை பட்டியலிடுகிறார்.

”சரத்குமாரை எடுத்துக்கொள்வோம். விஜயகாந்தை போல தனது ரசிகர் மன்றங்களை ஊக்குவிக்க முடியவில்லை என்பதால்தான் இன்று வரை அவரது கட்சி கவனம் பெறவில்லை. 2007இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினர் சரத் குமார். அப்துல் கலாம், காமராஜ் ஆகியோரின் சிந்தனைகளை தனது கட்சி முன்னெடுக்கும் என்றார். ஆனால் அரசியல் ஆர்வத்தை அவர் ரசிகர்களிடம் வளர்க்கவில்லை. அதனால், திமுக அல்லது அதிமுகவை நம்பித்தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது. விஜயகாந்த் கட்சி மூன்றாவது அணியாக உருவெடுக்கும் அளவுக்கு வளர்ந்ததற்கு ரசிகர் மன்றங்களை தொடர்ந்து அரசியல் ஈடுபாட்டோடு வைத்திருந்ததுதான் காரணம். எல்லா கிரமங்களிலும் திமுக, அதிமுக போல தனது கட்சிக் கொடியை விஜயகாந்த் பறக்கவிட்டார் என்பதுதான் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம்.”

“பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதோடு சரி, அவருடைய திரை பாணியை ரசித்த மக்கள், அரசியல் தலைவராக அவரை பார்க்கவில்லை. அவர் கட்சியின் கொள்கை என்ன என்பது பற்றி கூட அவர் தெளிவாகப் பேசவில்லை. ஒரு கட்டத்தில் அவரது கட்சியை திமுகவோடு இணைத்துவிட்டார். எம்ஜிஆரின் சினிமா வாரிசு என்ற பிம்பம் அவருக்கு உதவவில்லை. அதிமுகவில் இருந்தவர்கள் கூட, அவருக்கு ஆதரவாக பேசவில்லை,” என்கிறார் லட்சுமணன்.

”டி.ராஜேந்தருக்கு பல திறமைகள் இருந்தாலும், அரசியல் களம் அவருக்கு சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2005இல் திமுகவில் இருந்து பிரிந்து வந்த அவர், அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால், அவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த வரலாறை மட்டும்தான் மக்கள் மனத்தில் வைத்திருக்கிறார்கள். அவரது கட்சி எழுச்சி பெறவில்லை,”என்று லட்சுமணன் சுட்டிக்காட்டுகிறார்.

திமுக, அதிமுக பலம் பொருந்திய கட்சிகளாக நீடிப்பதால், நடிகர்கள் கட்சி தொடங்கி தங்களது அடையாளத்தை தக்கவைக்க பன்மடங்கு உழைக்க வேண்டும் என்பது லட்சுமணன் வழங்கும் அறிவுரை.

”நடிகர் கார்த்திக் சாதி அரசியல் பக்கம் சென்றார். அவர் கட்டமைப்பு பற்றி கவலைப்படவில்லை. 2006இல் அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அவர் அரசியல்வாதியாக வலம் வந்ததார். அரசியல் கட்சிக்கான கட்டமைப்பை அவர் ஏற்படுத்தவில்லை. அதன் அவசியத்தை அவர் உணரவும் இல்லை. ஒருவேளை அந்த வளர்ச்சி பற்றி அவர் கவலை கூடப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 2009ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கியதோடு அவரது அரசியல் பயணம் நின்றுவிட்டது.”

பல நடிகர்கள், திரைத்துறையில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு ஒன்றை மட்டுமே நம்பி அரசியலில் இறங்கினால் என்ன நிலை ஏற்படும் என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது என்று கூறிய அவர், ”1989ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் சிவாஜி, அரசியல் கணக்கில் சூழலுக்கு ஏற்ற முடிவை எடுக்கவில்லை. எம்ஜிஆர் மறைவால் அதிமுகவில் உருவான பிளவில், ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார். ஜெயலலிதா அணியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார்.”

“ஆனால் ஜெயலலிதா அணி தேர்தலில் வெற்றி பெற்றது. அதனால் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய அதே ஆண்டு அதை கலைத்துவிட்டார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதோடு, தனது கட்சியை ஜனதா தளத்துடன் இணைத்துவிட்டு அரசியலில் இருந்தே விலகி விட்டார். இப்போதும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்ற வாய்ப்பை தமிழக அரசியல் களம் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் திரை செல்வாக்கு என்பது அரசியல் செல்வாக்காக மாறுவதற்கு திரை பிரபலம் என்ற அடையாளத்தை தாண்டி கடுமையான உழைப்பு தேவை என்பதைத்தான் நடிகர்களின் வீழ்ச்சி உணர்த்துகிறது,” என்கிறார் லட்சுமணன்.

  • பிரமிளா கிருஷ்ணன்
  • நன்றி – பிபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More