ஆட்டுக்குடல் குழம்பை எப்போதும் ஒரே மாதிரியாக செய்து சலித்து விட்டீர்களா? அப்படியானால் இனி கவலை வேண்டாம். உணவுக்கே புகழ்பெற்ற மதுரையில் பிரபலமான கோனார் கடை ஸ்டைலில் ஆட்டுக்குடல் குழம்பை வீட்டிலேயே செய்து பார்க்கலாம். இந்த குழம்பு அடுப்பில் கொதிக்க ஆரம்பித்தாலே வீடு முழுவதும் வாசனை பரவி, அனைவரையும் சமையலறைக்கே இழுத்து வரும்.
குறிப்பாக குழந்தைகள் இன்னொரு முறை கேட்டு வாங்கி சாப்பிடும் அளவுக்கு சுவை இருக்கும். பலருக்கும் தெரியாத இந்த ரகசிய ரெசிபியை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
முதலில் ஆட்டுக்குடலை இறைச்சிக் கடையிலேயே நன்றாக பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், புதினா, கல்பாசி, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், ஆட்டுக்குடல், குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தண்ணீர்.
வதக்கி அரைக்க தேவையானவை
எண்ணெய், முந்திரி, கிராம்பு, கல்பாசி, பட்டை, பூண்டு, இஞ்சி, சோம்பு, கசகசா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தேங்காய், சோம்பு, தண்ணீர்.
ஆட்டுக்குடல் சுத்தம் செய்வது
ஆட்டுக்குடலை பொடியாக நறுக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுடுநீரில் 2–3 முறை நன்றாக கழுவ வேண்டும்.
இதனால் வாசனை குறைந்து சுவை அதிகரிக்கும்.
அரைப்பு தயாரிப்பு
சட்டியில் எண்ணெய் ஊற்றி முந்திரி, கிராம்பு, கல்பாசி, பட்டை, பூண்டு, இஞ்சி, சோம்பு, கசகசா சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்க வேண்டும்.
சூடு ஆறியதும் தேங்காய் மற்றும் சோம்புடன் சேர்த்து மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பு செய்வது
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், புதினா, கல்பாசி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
ஆட்டுக்குடல் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, மிளகாய் தூள்களை சேர்க்க வேண்டும்.
அரைத்த விழுது மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குக்கரை மூடி 7–8 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
அவ்வளவுதான். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய, சுவையும் மணமும் நிறைந்த மதுரை கோனார் ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு தயாராகிவிடும்.
இந்த குழம்பு இட்லி, தோசை, சாதம் அனைத்துக்கும் அருமையாக பொருந்தும். வீட்டிலேயே ஹோட்டல் சுவையை அனுபவிக்க விரும்புபவர்கள் இந்த ரெசிபியை கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம்.