செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இலண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா | ஒரு இலக்கிய ஆளுமையின் வரலாற்று நிகழ்வு

இலண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா | ஒரு இலக்கிய ஆளுமையின் வரலாற்று நிகழ்வு

3 minutes read

ஈழத்து எழுத்தாளர் அகஸ்தியரின் 100ஆவது நூற்றாண்டு விழாவும் அவர்பற்றிய நினைவுகள் குறித்த ‘இலங்கையின் குறுமுனி தரிசனங்கள் (1926-2026) என்ற நூல் வெளியீடும் இலண்டன் சென் அன்ருஸ் கோயில் மண்டபத்தில் இம்மாதம் 12 ஆம் திகதி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் மத்தியில், அகஸ்தியருக்குப்; பக்க துணையாகச் செயற்பட்ட அவரது மனைவி நவமணி அவர்களை அங்கு கௌரவித்தமை மிகுந்த கவனிப்புக்குரியதாகியது.

‘இலங்கையின் குறுமுனி தரிசனங்கள்; அகஸ்தியர் நூற்றாண்டு நினைவுகள்’ நூலில் நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்), என்.செல்வராஜா(லண்டன்), மு. நித்தியானந்தன்(லண்டன்), எஸ்.எஸ்.குகநாதன்(இலங்கை), ரா.நித்தியானந்தன் (இலங்கை), அம்பலவாணர் சிவராசா(இலங்கை), இரா.அ.இராமன்(கண்டி), என்.கே.துரைசிங்கம்(பாரிஸ்), முல்லை அமுதன்(லண்டன்), இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்(லண்டன்), வி.சிவலிங்கம்(லண்டன்), மனோ சின்னத்துரை(பிரான்ஸ்), வ.ந.கிரிதரன்(கனடா), ஷோபாசக்தி (பாரிஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), ஐங்கரன் விக்னேஸ்வரா(அவுஸ்திரேலியா, வி.ரி.இளங்கோவன்(பிரான்ஸ்), மு.சி.கந்தையா (தமிழ்நாடு), ஹெக்கிராவ ஸ_லைஹா(இலங்கை), பேராசிரியர் துரை. மனோகரன்(இலங்கை), இக்பால்அலி(இலங்கை), திருமகள் சிறீபத்மநாதன் (பிரித்தானியா), எஸ்.கே.காசிலிங்கம்(பாரிஸ்), நடராசா சுசீந்திரன்(ஜேர்மனி), எஸ்.கே.ராஜன்(லண்டன்), ஜெயா பத்மநாதன்(பிரான்ஸ்), டாக்டர் ரி. விக்னேசன் (பிரான்ஸ்), லெ.முருகபூபதி(அவஸ்திரேலியா) ஆகிய இருபத்தியெட்டு பல்துறை ஆளுமைகளின் நினைவுக்குறிப்புகள் வரலாற்றுப் பதிவாகியுள்ளமை சிறப்புமிக்கது.

வருகை தந்திருந்த பல்வேறு துறைகள் சார்ந்த பெண்களின் மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பித்த விழாவில் வரவேற்புப் பாடலைப்பாடி வரவேற்றிருந்தார் செல்வி.சுஜீறா நவஜீவா. வரவேற்புரையை திரு.எஸ்.பி.ஜோகரட்னம் வழங்கியிருந்தார்.

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் எஸ்.கே. ராஜன் அவர்கள் பேசும்போது: பாரிசில் அகஸ்தியர் வாழ்ந்த காலத்தில் தனக்கும் அவருக்குமான நெருங்கிய உறவை விவரித்திருந்தார். இறுதிவரை அவர் சோர்வின்றி ஒரு இளைஞன் போல் எழுத்துலகில் உற்சாகமாக இயங்கியதைத் தான் நேரடியாக பார்த்ததாக விபரித்திருந்தார்.

தலைமை உரையை வழங்கிய ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் ‘அவரது நாவல்கள் குறித்து பல கருத்துக்களை குறிப்பிட்டுப் பேசினார். அகஸ்தியரின் எழுத்துக்களில் தெரியும் பண்பாடும் நிலமும் மொழியும் அசலானது. சற்றேனும் நகலோ போலியோ இல்லாதது. யாழ்ப்பாணச் சமூகத்தின் கிலிசகேடுகளையும் பரிசுகேடுகளையும் அவரது எழுதுகோல் அசூசையோடு புழுப்போல் தூக்கிப் பிரதியில் பகிரங்கமாகப் போடுகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆய்வாளர் வி.சிவலிங்கம் அவர்கள் பேசும்போது: ‘அகஸ்தியரின் எழுத்துக்கள் எழுபதுகளில் மிகவும் காத்திரமான சமூக மாற்றத்தினைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தன. அக்காலப்பகுதியில் இலங்கையில் பாரிய அரசியல் மாற்றம் தோற்றம் பெற்றிருந்தது. இடது சாரிகள் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்கள். அங்கு நிலவும் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவும் சமூக மாற்றத்தைத் தூண்டும் வகையிலான அகஸ்தியர் போன்ற இலக்கிய கர்த்தாக்கள் தோற்றம் பெறக் காரணியாக அமைந்தது. வாழ்விலிருந்தே மனித ஆற்லை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டுமென அகஸ்தியர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார் என்று குறிப்பிட்டுப் பேசினார். அவர் தொடர்ந்து பேசுகையில்…

1970களின் அரசியல் மாற்றம் எவ்வாறு 2024இல் எப்படி அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியதோ! அதாவது தேசிய ஜனநாயக மாற்றத்தை நோக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில் அகஸ்தியர் அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால் அன்றைய அவரது கனவுகளை நகர்த்தும் புரட்சிகர சிந்தனைகளை உருவாக்கியிருப்பார் என்று மேலும் குறிப்பிட்டிருந்தார். இன்று உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அகஸ்தியர் அவர்களின் கனவுகளோடு இன்றும் பொருத்தமானதாக இருக்கின்றன என்பதை நீங்கள் அவருடைய எழுத்துக்களை மீண்டும் மீளாய்வு செய்தால் உணர்வீர்கள்….‘ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

‘அகஸ்தியர் என்றொரு அணையா விளக்கு’ என்ற தலைப்பில் கவிஞர் அருண் வேணுகோபால் அவர்கள் ‘தமிழீழ வரலாற்றில் மாறுபட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து நின்று, புரட்சிக் கருத்துக்களுக்கு உரிமைக் குரலெழுப்பிய ஒரு மூத்த படைப்பாளனின் நூறாவதாண்டின் எழுச்சி விழா’ எனக் கவிதைக் குரல் எழுப்பியிருந்தார்.

திருமதி ஜெயமதி செல்வராஜா(அமுதுப் புலவரின் மகள்) ‘இளவாலைக் கன்னியர் மடத்தில் நவஜோதி கல்வி பயின்ற காலத்தில் அங்கு அகஸ்தியர் அதிபரின் அழைப்பில் வருகைதந்து மாணவிகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டு பயிற்சியளித்து மகிழ்ந்த காலங்களை நினைவு கூர்ந்து பாராட்டிப்’ பேசியிருந்தார்.

திருமதி பூங்கோதை சிறீகரன் அவர்கள் பேசுகையில் :‘மனிதநேயம், சமத்துவம், சமூகசீர்திருத்தம், பெண்ணியம் என அவரது படைப்புகளில் கருப்பொருளாக்கி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் எஸ் அகஸ்தியர். அன்றைய காலகட்டத்தில் நடந்த மனிதர்களின் வாழ்க்கையையும், அவரது உணர்வுகளையும் சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் எளிதான அழகான மொழிநடையில் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்’ என்று குறிப்பிட்டார்.

புனிதா ரகுராஜ் அவர்கள் ‘அகஸ்தியரின் சிறுகதைகள் குறித்துப் பல கருத்துக்களை வைத்ததுடன் அவ்விழாவில் பல இளைஞர்களும் யுவதிகளும் மிகுந்க ஆர்வத்துடன் செயற்பட்ட விதம் அவரைப் பிரமிக்க வைத்ததாகவும், தன்னில் பல புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியதாகவும், அகஸ்தியரின் படைப்புக்கள் பல நூற்றாண்டு தொடர்ந்தும் கொண்டாடப்படும்’ எனவும் தெரிவித்திருந்தார்.

விமர்சகர் மு. நித்தியானந்தன் சிறப்புரை ஆற்றுகையில் : ‘யாழ்ப்பாணச் சமூகத்தின்பல்வேறு இனக்குழுமங்களின் பேச்சு வழக்கினை இலக்கியத்தில் கொண்டுவந்த சாதனை எழுத்தாளர் அகஸ்தியருடையது. இன்று அந்தக் பேச்சு வழக்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. சில வழக்குகள் இன்று அழிந்துவிட்டன. உழைப்போரின் பேச்சு வழக்கினை ‘இழிந்தோர் வழக்கு’ என்று பண்டிதர்கள் அறிக்கை விடுத்தபோது. அதற்கெதிராக மக்கள் இலக்கியம் படைப்பதற்கு மார்க்சிய சிந்தனை அடிப்படையிலான முற்போக்கு இலக்கியம் வழி வகுத்தது. முற்போக்கு இலக்கியத்தின் முன் அணியில் நின்றவர் அகஸ்தியர் ஆவார். அவர் மறைந்த பின்னர் அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்’, ‘சுவடுகள்’ ஆகிய இரண்டு நூல் வெளிவந்துள்ளன. அவரின் நூற்றாண்டினைக் கொண்டாடும் இந்நாளில் அவரின் முழுச்சிறுகதைகளையும் தொகுக்கும் பணி நம் முன்னாலுள்ளது. புதுமைப்பித்தன் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரேயே அவரது அனைத்துக் கதைகளும் தொகுக்கப்பட்டன. அகஸ்தியர் எழுதிய 42 சிறுகதைகளே நம் கையில் கிடைக்கின்றன. 1983ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர் எழுதிய சிறுகதைகளைத் தேடித் திரட்டும் பணி முக்கிய பணியாகும்’ என்று அகஸ்தியர் நூற்றாண்டு விழாவில் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

செல்வி தாரணி சண்முகநாதன், அகஸ்ரி ஜோகரட்னம், சுஜீறா நவஜீவா, சுஜி நவஜீவா ஆகியோர் அவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இளையவர்;கள் முன்னின்று அகஸ்தியர் விழாவை ஆர்வத்துடன் கொண்டாடியமை சிறப்பாக இருந்தது.

அகஸ்தியரின் புதல்வி நவஜோதி ஜோகரட்னம் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்திருந்தார். மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரும் அகஸ்தியர் நூற்றாண்டு விழாவை மகிழ்ச்சிகரமான ஒரு மாலைப் பொழுதாக்கிக் கொண்டாடி மகிழ்ந்ததை அவதானிக்க முடிந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.