சிறுகதை | வரம் வேண்டினேன்‏ | நிவேதா உதயராஜன்

 

இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை மகிழ்வு பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச் சிறை வாழ்க்கை போலத்தான். என்ன விரும்பிய உணவு கணவனின் ஆதரவான விசாரணை பெற்றோரின் தொடர் தொலைபேசி விசாரிப்புக்கள் என்று எத்தனை தான் இருந்தாலும் கணவன் அருகே இல்லையே என்னும் குறையும் பெரிதாகத்தான் தெரிந்தது.

இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சுதாகரன் கூறினாலும் அவன் தன்னிடம் வந்து சேரும் வரை சுசீலாவுக்கு நின்மதி இருக்கப் போவதில்லை. யார் என்ன ஆறுதல் கூறினாலும் கணவன் அருகிருப்பதே பெரிய பலம். நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையை விட்டுவிட்டு வரமுடியாததால் தாய் இவளுடன் வந்து நிற்கவில்லை. என்னதான் வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பயம் எந்நேரமும் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை சுசீலாவால்.

ஒரு வருடத்திற்கு முன்புவரை விரக்தியின் விளிம்பில் நின்று யாரையும் பார்க்கப் பிடிக்காது தொலைபேசியில் யார் அழைத்தாலும் பேசப்பிடிக்காது இருந்த எனக்கு இப்ப எல்லோருடனும் பேசவேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்ற முடியாது என் நிலை தடுக்கிறது. இரண்டு மாதங்களில் எல்லோரையும் வீட்டுக்குக் கூப்பிட்டு விருந்து வைத்து என் மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

திருமணமாகி எட்டு வருடங்கள் அவள் பட்ட பாடு சொல்லி முடியாது. காண்பவர் எல்லாம் என்ன விசேடம் ஒன்றும் இல்லையா என்று அறிவற்றுக் கேட்கும் போது திடீரென மனதில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களுக்கு பதில் கூறியதை நினைக்க இப்ப சிரிப்பாக இருந்தது அவளுக்கு. இந்தச் சனங்கள் வாயை வச்சுக்கொண்டு பேசாமல் இருக்காமல் ஏனப்பா எங்கள் குடும்ப விசயங்களில் தலியிடுதுகள் என்று எரிச்சலுடன் இவள் கூறும்போதில் அதுதான் உலகமப்பா அவர்களை மாற்ற முடியாது என்று கணவன் கூறுவான்.

அதன் பின் அவள் பொது நிகழ்வுகளில் திருமண வீடுகளுக்குக் கூடச் செல்லாது வீட்டுக்குள்ளேயே ஒடுங்கப் பழகிவிட்டாள். ஏன் திருமணத்துக்கு வரவில்லை என்று யாராவது தொலைபேசியில் கேட்டாலும் ஏதாவது சாட்டுகள் கூறித் தப்பிக் கொண்டாள்.

எத்தனை வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு எத்தனை பேரிடம் தலை குனிந்து எத்தனை தரம் இவளுக்கும் கணவனுக்கும் பரிசோதனை செய்து எத்தனையோ ஊசிகள் மருந்துகள் ஏற்றி கிட்டத்தட்டச் சித்திரவதைதான். எல்லாவற்றையும் இருவரும் தாங்கினார்கள்தான். ஆனாலும் எந்தப் பயனும் அற்றுப் போய் வாழ்வில் பிடிப்பே அற்று இருவரும் இருந்தபோதுதான் அவள் ஆனந்த விகடனில் வந்திருந்த ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதை கணவனையும் வாசிக்கச் செய்து இருவரும் நீண்டநேரம் அதுபற்றிக் கலந்து கதைத்து ஒரு முடிவுக்கு வந்தனர். அடிமனதில் ஒளிந்துகொண்ட ஆசை மீண்டும் இருவருக்கும் விஸ்வரூபம் எடுக்க ஒருவரை ஒருவர் நீண்டநாளின் பின் நம்பிக்கையோடும் ஆசையோடும் பார்த்து மகிழ்ந்தனர்.

*******************************************************************************************************

கணவனுடன் இந்தியா வந்து அந்தப் பெரிய மருத்துவமனையில் எல்லா டெஸ்ட் உம் செய்து தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி எல்லாம் சரியாக இருக்கிறது. அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம் என்றதும் இருவர் மனதிலும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமற் போனது. சுதாகரன் இன்னும் மூன்று வாரங்கள்தான் அவளுடன் நிற்கலாம். அதன் பின் அவன் வேலைக்குத் திரும்பவேண்டும். அந்த மருத்துவரிடமே ஆலோசனை கேட்டனர். எல்லாமாக எனக்கு நீங்கள் மூன்று மருத்துவச் செலவுக்குத் இலட்சம் தந்துவிட வேண்டும் . நீங்கள் இங்கே பக்கத்தில் தங்குவதற்கு நான் ஒழுங்கு செய்கிறேன். அது உங்கள் செலவு. ஒரு பெண்ணை வேண்டுமென்றால் சமைக்கவும் துணைக்கும் ஒழுங்கு செய்கிறேன் என்றுவிட்டார்.

பணம் என்ன பெரிதா?? பிள்ளை வரம் வேண்டி நொந்து நூலாகிப்போன எங்களுக்கு கடவுள் இப்பதான் ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். அதை எள்ளளவேனும் பிசக விடாது காப்பது எமது கடமை என்று இருவருமே எண்ணி அவர் கூறிய படியே செய்ய ஆயத்தமாயினர்.

அடுத்த வாரம் இருவருக்கும் மீண்டும்  விந்து முட்டை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மருந்துகள் ஏற்றப்பட்டுத் தயாராக்கி மூன்றாவது வாரம் இருவரிடமும் இருந்து விந்தும் முட்டையும் பெறப்பட்டு சோதனைக் குழாயில் செலுத்துவதாகக் கூறினார்கள்.

இவர்கள் இருவரும் வேண்டாத தெய்வம் இல்லை. முன்பு சுவிசிலும் இதுபோல் இரு தடவைகள் செய்ததுதான். ஆனாலும் சரிவரத்தான் இல்லை. இம்முறை சுசீலாவுக்கு ஏனோ அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மனம் முழுவதும் ஏற்படும் ஒரு எல்லையில்லா உணர்வை  அடக்கு என மனதுக்குக் கட்டளையிட்டுவிட்டுக் காத்திருந்தாள்.

பதினைந்து நாட்களின் பின்னர் சரிவரும் போல இருக்கு. இன்னும் பதினைந்து நாட்கள் பார்க்கவேண்டும் என்று வைத்தியர் கூறியதும் இன்னும் பதினைந்து நாட்களா என்று இருவருக்கும் ஒரு சலிப்பும் ஏற்பட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மெடிக்கல் லீவு கொடுத்துவிட்டு சுதாகரன் மனைவியுடனேயே நின்றான். இரண்டு வாரங்களின் பின்னர் உருவான கரு சுசீலாவுக்குச் செலுத்தப்பட்டது. வலிகளும் வேதனைகளும் கூட அவளது எதிர்பார்ப்புகளின் முன்னால் ஒன்றுமில்லாது போயின.

சுதாகரனுக்கும் இம்முறை எல்லாம் நன்றாக நடப்பதாக மனம் சொல்லியதில் நின்மதியாக மனைவியை விட்டுவிட்டு சுவிஸ் வந்துவிட்டான். முன்பே பலருடன் தொடர்புகள் விட்டுப் போனதில் மற்றவர்களின் கேள்விகள் கூட இன்றி நின்மதியானான் அவன். தன் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட அவனோ சுசீலாவோ இதுபற்றிக் கூறவே இல்லை.

A1நீங்கள் இரண்டு மாதங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான். இவள் தேவை இல்லாமல் வெளியே கூடச் செல்வதில்லை. இவள் தங்கியிருந்த விடுதி போன்ற ஒரு இடத்தில் இவளைப் போன்றே வெளிநாடுகளில் எல்லாம் இருந்து பல பெண்கள் குழந்தைக்காக வந்து காத்திருந்தனர். சிலருக்கு எத்தனை தடவைகள் முயன்றும் முடியாமல் திரும்பி ஏமாற்றம் சுமந்து அழுகையுடன் சென்றிருக்கின்றனர். அவர்கள் அழும்போது இவளுக்குக் கழிவிரக்கம் தோன்றும். தன்னால் முடிந்த ஆறுதலைக் கூறுவாள்.

இவளுடன் அந்த விடுதியில் இருந்த மற்றைய பெண்கள் நடக்காதே குனியாதே அது செய்யாதே என்று கூறுவதைக் கேட்க இவளுக்குப் பயமாகவும் இருக்கும். மாலையில் கணவன் கதைக்கும் போது தன் கணவனிடம் இவைகளைக் கூற அவனோ சனம் எல்லாம் சொல்லும். நீர் கவனமா இரும். என்ன எண்டாலும் வைத்தியரிடம் கேட்டு அவர் சொல்கிற படி நடவும் என்பான். இருந்தாலும் குழந்தை வளர வளர அதைக் கவனமாகப் பாதுகாத்துப் பெற்றெடுக்க வேண்டுமே என்ற அவாவிலும் பயத்திலும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டும் நடக்கவாரம்பித்தாள். அதனால் நடைப் பயிற்சி இல்லாது உடல் ஊதியது.

மூன்றாம் மாதம் இவளைப் பரீட்சித்துவிட்டு இரட்டைப் பிள்ளைகள் உனக்கு என்றார். இவளுக்குச் சந்தோசத்தில் நெஞ்சை அடைத்து. சுதாகரனின் களிப்பைச் சொல்லி மாளாது. கடவுள் கருணை காட்டிவிட்டார். ஒன்றுமே இல்லாமல் இருந்த எமக்கு இரண்டா என கடவுளுக்குப் பலதடவைகள் நன்றி கூறிக் கொண்டான் அவன் .

*******************************************************************************************************

இன்னும் இரண்டு வாரங்கள்தான். சுதாகரனும் சுவிசிலிருந்து வந்துவிட்டான். சாதாரண பிரசவமாக இருக்காது என்று வைத்தியர் கூறிவிட்டார். சாதாரணமாகப் பிறக்கும் என்றாலும் கூடப் பணத்துக்காக வைத்தியர்கள் சத்திரசிகிச்சை செய்வது பற்றியும் கதை ஓடித்திரிந்ததுதான். ஆனாலும் அவர்களுக்கு இருந்த பயத்தில் குழந்தைகள் இரண்டும் சுகமாக வெளியே வந்தால் சரி என்ற நிலையில் மருத்துவர் கூறியதை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கவே இல்லை.

அன்று அவளைப் பிரசவ அறையுள் அழைத்துக்கொண்டு சென்றபோது சுதாகரனும் தானும் வருகிறேன் என்று கூறினான். மருத்துவர் மறுத்துவிட்டார். இவனால் எதிர்த்தும் கதைக்க முடியவில்லை. உள்ள கடவுள்களை வேண்டியபடியே வெளியே காவல் இருந்தான்.

ஒரு மணி நேரத்தில் சத்திரசிகிச்சை முடிந்ததாகக் கூறி  அவனை உள்ளே அழைக்க மனம் முட்டிய மகிழ்வில் உள்ளே சென்றவன் தாய்க்குப் பக்கத்தில் பிள்ளைகளைக் காணாது மனதில் ஒரு திடுக்கிடலோடு தாதியைப் பார்த்து எங்கே பிள்ளைகள் என்றான்??? கால் கைகளில் நடுக்கம் பரவத் தொடங்கியது. மனைவி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். பிள்ளைகளை இன்னும் கொஞ்ச நேரத்தில் கொண்டு வருவார்கள் என்று அவள் கூறியதும் மனது ஒருநிலைப்பட்டது. நெஞ்சுக்கூடு மீண்டும் தன் இடத்தில் அமர்ந்தது போன்ற நினைப்பு வர நின்மதிப் பெருமூச்சொன்று வெளிவந்தது.

சுசீலாவுக்கும் ஒருவாறு நினைவு திரும்ப பக்கத்தில் பார்த்துவிட்டு அவள் கண்களும் வேதனையை மீறி எங்கே குழந்தைகள் என்று கேட்டன. இவன் கண்கள் கூறிய சமாதானத்துடன் மட்டும் நின்றுவிடாது இப்ப கொண்டு வருவினம் என்று அவளுக்குச் சொல்லிவிட்டு வெளியே சென்று தாதியிடம் மனைவி கண் விழித்துவிட்டார். பிள்ளைகளைத் தேடுகிறார். எப்ப கொண்டுவருகிறீர்கள் என்றான். நீங்கள் அறைக்குப் போங்கள் இப்ப கொண்டுவருவார்கள் என்றதும் இவன் சுசீலாவுக்கு அருகில் சென்று கொண்டு வருகிறார்கள் என்று கூறிவிட்டு அவளின் தலையைத் தடவி நெற்றியில் முத்தமிட்டு கை ஒன்றை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுத்தான்.

A3கதவு திறக்கப்பட இரண்டு தாதிகள் தொட்டில்களைத் தள்ளிவர மனம் முழுவதும் மகிழ்வு பொங்க உடனே எழுந்த சுதாகரன் பக்கத்தில் சென்று பார்த்ததும் அதிர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்த்த சுசீலாவின் மனம் திடுக்கிட்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தாதியர் வெளியே சென்றதும் இருவரும் கேள்விக் குறியுடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிள்ளைகள் இரண்டும் பச்சைக் கண்களுடன் வெள்ளைக்காரக் குழந்தைகள் போல் இருந்தன. மாறி வேற ஆட்களின் பிள்ளைகளைக் கொண்டுவந்துவிட்டனரோ என்ற பதைப்பில் வைத்தியரின் அறையைத் தேடி ஓடினான் சுதாகரன். இவன் கூறியவற்றைக் கேட்டபின் முகத்தில் எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் இப்பிடியான விசயங்களில ஒண்டு இரண்டு மாறி நடக்கிறதுதான். சொறி. பரிசோதனைக் குழாயுள் செலுத்தும்போது ஏதோ தவறு நேர்ந்துவிட்டது.

உங்களுக்கு பிள்ளைகளை வைத்திருக்க விருப்பம் இல்லை என்றால் கூறுங்கள். பிள்ளைக்காக எத்தனையோபேர் காத்திருக்கிறார்கள். நீங்கள் சம்மதித்தால் அவர்களுக்குக் கொடுப்போம் என்று கூறிவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்தாள் வைத்தியர்.

உடலும் மனமும் சோர்ந்துபோக வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு எழுந்து நடந்தவன் அறையுள் சென்றதும் மனைவி இரண்டு குழந்தைகளையும் இரு கைகளாலும் அணைத்தபடி முகமெங்கும் பூரிப்புடன் இருப்பதைக் கண்டு தானும் அவளருகில் சென்று பெண் குழந்தையைத் தன் கைகளில் வாரி எடுத்துக் கொண்டான்.

 

 

 

Nivetha   நிவேதா உதயராஜன்

ஆசிரியர்