Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் போரின் கொடுமைகள் | தாமரைச்செல்வியின் | ‘வன்னியாச்சி’ | அஷ்வினி வையந்தி

போரின் கொடுமைகள் | தாமரைச்செல்வியின் | ‘வன்னியாச்சி’ | அஷ்வினி வையந்தி

4 minutes read

நூல்- வன்னியாச்சி
நூலாசிரியர் – தாமரைச்செல்வி
பக்கம் – 335
ஆண்டு -2017
வெளியீடு -காலச்சுவடு

தாமரைச்செல்வி என அழைக்கப்படும் ரதிதேவி கந்தசாமி வன்னியாச்சி என்னும் நூலுக்கு சொந்தக்காரர் ஆவார். வன்னியாச்சி ஒரு தொகுப்பு நூலாகும். இவர் “ஒரு மழைக்கால இரவு”, “விண்ணில் அல்ல விடிவெள்ளி”, “பச்சை வயல் கனவு” போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய கதைகள் யாவும் ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இவர் தற்போது புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். தாமரைச்செல்வியின் வன்னியாச்சி என்னும் சிறுகதை தொகுப்பு நூலானது 37 சிறுகதைகளையும், 335 பக்கங்களையும் கொண்டதாகும். இந்நூலினை காலச்சுவடு பதிப்பகம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்டது. வன்னியாச்சி என்னும் தொகுப்பு நூலில் உள்ள சிறுகதைகள் யாவும் ஈழநாடு,வீரகேசரி,தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும்,
மல்லிகை, ஞானம், நாற்று, வெளிச்சம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்தவைகளாகும்.

நான் திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் உள்ள கங்குவேலி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவள். இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கு எட்டு வயது இருக்கும். எங்களுடைய ஊருக்குள்ளே அடிக்கடி ஹெலிகாப்டர் பெரிய சத்தத்துடன் வரும். அந்த சத்தத்தை கேட்டதும் என்னுடைய அம்மா சமைத்த சாப்பாடெல்லாம் விட்டு விட்டு என்னையும், அண்ணாவையும் கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றுவிடுவாள். இதுமட்டுமன்றி அடிக்கடி சிலரை கடத்திக் கொண்டு போனார்கள். சிலரை துப்பாக்கியால் சுட்டார்கள். இதுதான் நான் அறிந்த யுத்தம். ஆனால் வன்னியாச்சி நூல் பேசும் யுத்தமோ வேறு விதமாக இருந்தது. சொல்லப்போனால் என் உடம்பெல்லாம் நடுங்கியது.

இந்நூலிலே “இங்கேயும் சில இழப்புக்கள் ” என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதையில் யாரோ அறியாத ஒரு ஈழப்பெண்ணுக்காக பேருந்து ஓட்டுநர் கோபாலன், இராணுவம் தமிழர்களின் வாகனங்களை கொளுத்துகின்றது என அறிந்தும் தன் உயிரையும் துச்சமாகக் கருதி யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வரை செல்கின்றான். இறுதியில் அவனுடைய சிறிய பேருந்தும் தீக்கிரையாகின்றது. கடன் தொல்லை, தங்கையின் திருமணம், நான்கு பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாம் அவனது கண்முன்னே சிதைந்து போகின்றது. உதவி கேட்டு வந்த பெண்ணின் கணவனும் அவள் வரும் முன்னே இறந்து விடுகிறான். இப்படி பல இழப்புக்களின் கோர்வையாகத்தான் வன்னியாச்சி என்னும் சிறுகதை தொகுப்பு நூல் படைக்கப்பட்டுள்ளது.

அடுத்து “விடை இதுதான்” என்னும் சிறுகதையில் கதாநாயகனின் மனைவி மஞ்சு திருமணமாகி பத்து மாதங்கள் கடந்த பின்னர் செல்லுக்கு இரையாகின்றாள். மஞ்சுவின் இறப்பு அவனின் நிம்மதியைக் கெடுக்கின்றது. அவனின் அம்மா, அக்கா, அத்தான் போன்றோரோ அவனை மறு திருமணம் செய்யுமாறு வற்புறுத்துகின்றார்கள். அத்தோடு பெண் வீட்டாரிடம் இருந்து சீதனத்தையும் எதிர்பார்க்கின்றார்கள். கதாநாயகனோ தனக்கு இன்னொரு திருமணம் வேண்டாம் என பிடிவாதம் பிடிக்கின்றான். ஒரு கட்டத்தில் யுத்தத்தினால் கணவனை இழந்த விதவை யாரெனும் இருந்தால் சீதனம் ஏதும் இல்லாமல் தான் திருமணம் புரிவதாக ஒரு காகிதத்தில் எழுதி அதனை பத்திரிக்கைக்கு அனுப்புமாறு தனது அம்மாவிடம் கொடுக்கின்றான். ஒட்டுமொத்தத்தில் யுத்தத்தினால் கணவனை இழந்துவிட்டு பெண்கள் எதிர்நோக்கும் துயரமும், ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் இக்கதையினூடாக சித்திரிக்கப்படுகின்றது.

பயணத்தின் போது பெண்கள் இராணுவத்தினால் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து “அவன் அவள் ஒரு சம்பவம்” என்னும் தலைப்பில் அமைந்த சிறுகதையும்,
தொட்டிலில் தூங்கிய பிள்ளையை செல் விழுந்து அழித்தது குறித்து “சாம்பல் மேடு” என்னும் தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதையும் பேசுகின்றது. இவை மட்டுமின்றி
யுத்தம் காரணமாக திருமணம் முடிக்காமல் இருக்கும் முதிர்கன்னிகள், தகப்பனை இழந்த பிள்ளைகள், சீதனக் கொடுமைகள், உணவுப் பிரச்சினைகள், பெயர் அறியாத நபர்களின் வீட்டில் தங்கி வாழ்தல், தங்கி வாழும் இடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீண்டும் தமது சொந்த ஊரிலே குடிபெயர நினைத்து தமது ஊருக்கு சென்று களிமண்வீடு கட்டி வாழும் போது மீண்டும் செல் விழுந்து வீடு நாசமாக்கப்படல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை கண்முன்னே கொண்டுவருகின்றது வன்னியாச்சி.

இவ்வாறான கொடுமைகள் எல்லாம் எமது நாட்டிலேதான் நடைபெற்றதா? என்ற எண்ண ஓட்டம் எனக்குள்ளே ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போதும் ஓடிக்கொண்டே இருந்தது. எல்லோராலும் அவ்வளவு இலகுவாக தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் எழுத்தில் கொண்டு வர முடியாது. தாமரைச்செல்வி இதற்கு எதிர்மறை. தான் கண்டவற்றை, கேட்டவற்றை தத்ரூபமாக தனது எழுத்துக்களினூடாக கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
தாமரைச்செல்வி பின்வரும் பல உத்திகளைக் கையாண்டு தனது சிறுகதைகளை எழுதியுள்ளார்.

1.யாழ்ப்பாண பேச்சு வழக்கு சொற்களைக் கையாளல்.

உதாரணம்: “அய்யோ… அவை என்ன நினைப்பினம்?”

“ஒண்டும் நினைக்க மாட்டினம். அவைக்கு விஷயம் தெரியும்தானே…”
(அவன் அவள் ஒரு சம்பவம்)

2.பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்த்தல்.

உதாரணம்:”…அப்போதெல்லாம் பஸ்களும் லொறிகளும் கார்களுமாய் ஒரே வாகனங்கள் இரவு பகலாய்ப் போய் வந்தபடி இருக்கும். சிறுவனாய் இருந்த காலத்தில் தன் தோழர்களுடன் இந்தப் பாலத்தில் அமர்ந்துகொண்டு வாகனங்களை வேடிக்கை பார்ப்பான்.” (பாலம்)

3.ஆங்கிலச் சொற்களைக் கையாளல்.

உதாரணம்: பஸ் ஸ்டாண்ட், சி.ரி.ரி. பஸ், சீற், ஹெலி, குட் மார்ணிங் சேர் போன்ற ஆங்கிலச் சொற்களை கையாண்டுள்ளார்.

இவை தவிர யதார்த்தத்தைப் பேசுதல், அணிகளை கையாளுதல், இலகுவான சொற்களையும், சொற்றொடர்களையும் கையாளுதல் போன்ற சிறுகதை உத்திகளையும் கையாண்டு சாதாரண மக்களுக்கும் விளங்கும் வகையில் தனது சிறுகதைகளை எழுதியுள்ளார்.

தாமரைச்செல்வியின் எழுத்துக்கள் ஈழத்து வரலாறு பற்றிப் பேசும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவரைப் போன்ற பல எழுத்தாளர்கள் உருவாகவும் அவருடைய எழுத்துக்கள் வழிசமைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. தாமரைச்செல்வியின் எழுத்துப்பணி தொடர வேண்டும். தாமரைச்செல்வியின் எழுத்துக்களை நாமும் வாசிப்போம். அவரை உற்சாகப்படுத்துவோம். அத்துடன் அவரை எழுதவும் தூண்டுவோம்.

அஷ்வினி வையந்தி
கிழக்குப் பல்கலைக்கழகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More