Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் எனது பார்வையில் ‘எரிநட்சதிரங்கள்’ சிறுகதைத்தொகுப்பு | முல்லை அமுதன்

எனது பார்வையில் ‘எரிநட்சதிரங்கள்’ சிறுகதைத்தொகுப்பு | முல்லை அமுதன்

9 minutes read

சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் பற்றியது ஒரு சிறு சம்பவம் ஒரு மனோநிலை ஆகிய இவற்றை எடுத்து எழுதுவது, சிறுகதையில் முக்கிய சம்பவமோ நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ, அது ஒன்றாக இருக்க வேண்டும்.

புதுமைப்பித்தன்.

ஈழத்து எழுத்துலகில் இனமோதல்களுக்கு, யுத்தம், இடப்பெயர்வு, குடும்பச்கூழல், இராணுவக்கெடுபிடிகள், கைதுகள், காணாமல் போதல்  என இன்னோரன்ன பிற காரணிகளுக்கு முகம் கொடுக்காதவர் இல்லை என்றே சொல்லிவிடமுடியும். இத்தகைய நோவுகளை, சமூகத்தில் புறையோடிப்போயுள்ளவற்றை நேரடியாகவே முகங்கொடுக்கின்ற ஒவ்வொரு மனிதனும் ஒன்றில் எதிர்த்து நிற்கின்றான் அல்லது தூர ஓடிச்சென்றுவிடுகின்றான. இது உண்மையே. இவைகள் படைப்பாளியை மேலும் அசைத்துப்பார்க்கிறது. விலகி ஓடிவிடமுடியாதபடி முகம் கொடுத்தபடி வாழ்க்கையை நகர்த்துவதுடன்,முடியாது போக விலகி ஓடிய பலருள் படைப்பாளர்களும் அடங்கிவிடுவதான் இன்றைய யதார்த்தம். வாழும் இடத்தை மாற்றிக்கொண்டாலும் வாழ்க்கையையை, அதன் கட்டமைப்பை மாற்றிவிட அவனால் முடிவதில்லை. அப்படித்தான் மயில் மகாலிங்கம் அவர்களும் தன் வாழ்வியற் களத்தை மாற்றிக்கொண்டாலும் தன் படைப்பின் ஊடாக தான் இன்னமும் களத்திலிருந்து அகன்றுவிடவில்லை என்றே எம்மைப் போல ஊர்ஜீதம் செய்கிறார். நிறைய அனுபவங்களுக்குச் சொந்தக்காரர். அவருக்கு வாய்த்த நண்பர்கள் படைப்பாளர்களாகவும்,ஆசிரியர்களாகவும் இருந்தமையும் அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதமுமாகும். வாழ்வியல் அனுபவங்களிலிருந்தே தன் படைப்புக்களை படைக்கின்றார் எனலாம். சிறுகதைகளை இயல்பாக எழுதியுள்ளார்.சமகால அனுபவங்களாயிருப்பினும் எக் காலத்திற்கும் பொருந்தியே கதைகள் நகர்கின்றன.

மிகநீண்டதொரு இடைவேளைக்குபிறகு உற்சாகமாக எழுத்தத் தொடங்கியதோடல்லாமல் ஒரு சிறுகதைத்தொகுதியொன்றை(எரிநட்சத்திரங்கள்)வெளியிடுள்ளமை அவரின் புத்துணர்ச்சியைக்காணமுடிகிறது.பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுதியில்  காற்றுவெளி(மின்னிதழ்/இங்கிலாந்து),தீபம்(மின்னிதழ்/கனடா)வீரகேசரி,மித்திரன்,தினக்குரல் ஆகிய இலங்கைப்பத்திரிகைகளிலும் வெளிவந்து பலரும் வாசிக்கும்படியாக அமைந்த கதைகளுக்குச் சொந்தக்காரராக மிளிர்கிறார்.திருகோணமலை ஆலங்கேணியை பிறந்தவரான திரு மயில் மகாலிங்கம் அவர்கள் கேணிச்சுடர்,தேமதுரம் ஆகிய இலக்கியக்கையேடுகளில் பல படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுமுள்ளதோடு சுடர்,ஞானம்,,சிரித்திரன்,சுடர் போன்ற அச்சு ஊடகங்களிலும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கதைக்களம் வெவ்வேறு சூழலைத் தொட்டுச் சென்றாலும் கதைக்கரு,எடுத்துக்கொண்ட கருப்பொருள் சிதையாமல் தெளிந்த நீரோடைபோல வாசகர்களின் மனத்தில் ஆழமாகப் பதியும் வண்ணம் ஆசிரியரின் எழுத்துக்கள் அமைந்துள்ளது.

சிறு கருப்பொருள்தான்.ஆனால் கதையுள் பொதிந்துள்ள ஆழமான சிந்தனை சமகாலத்தில் ஒவ்வொருவரும் முகம்கொடுத்தே உள்ளதை மறுக்கமுடியாது.சாதாரணமாக வளவில் மரமாகிய ஒரு அரசமரம் தான்.ஆனால் இன்றைய சூழலில் அதில் பொதிந்துள்ள அரசியல் பூதாகாரமானது என்பதை விருட்சம்கதையினூடாக நமக்குப் புரியவைக்கிறார்.வெறுமனே மரம்தான்.ஆனால் மாறி மாறி வரும் அரச எந்திரம் பெரும்பான்மைச் சமூகமாய் இருப்பதனால் அவர்களின் சிந்தனையில் அரசமரம் ஒரு அரசியல் பேசுபொருளே.அப்பிரச்சினை ஒருவருக்கானது அல்ல.

இரண்டாவது கதை (அவனொரு பாதி…..)சாதாரண கதைதான்.எனினும் எங்காவது நடந்துகொண்டுதான் இருக்கிறது.எங்கே நடந்திருக்கும் எனச் சுட்டிக்காட்டமுடியாவிட்டாலும் இப்படியான சம்பவங்கள் நடக்காமலுமில்லை.அப்படியொரு கருவை அழகுற தன் பாணியில் லாவகமாக எழுதியுள்ளார்.ஆழ்ந்து வாசிக்கையில் நாமே அப்பாத்திரங்களாகிவிடுவதுமுண்டு.சேகர்,ரேவதி,அமரன் பாத்திரங்கள் உயிருள்ளவையாக அமைந்துவிடுவதால் ஆசிரியரின் அனுபவம் விலாசமானது எனக் கணிக்கலாம். காதல்,ஏமாற்றம்,தியாகம் என கதை நகருகிறது.

சொல்லவந்ததை ஒரு ஒழுங்கமைவிற்குள் தன்னை இருத்தி எழுதுகின்ற முறைமை பாராட்டுதலுக்குரியது.

திறமை இருந்தும் அரசியல் செல்வாக்கினால் ஒருவனுக்கு ஏற்படுகின்ற இழப்பு…அதுவே தான் சார்ந்த கட்சி உறுப்பினர்க்கு ஏற்பட்ட கௌரவச்சிக்கல் எப்படி காய்களை நகர்த்தவைக்கிறது என்பதை ஆண் மருத்துவத்தாதிஎனும் கதையில் வெளிப்படுத்துகிறார். வார்த்தைகள் தடம்புரளாமல் செப்பனிடப்பட்ட வாக்கியங்களூடாக கதையை நகர்த்துகிறார்.

ஆசிரியருக்குள் மருத்துவராகும்  எண்ணம் அதிகமாக இருந்திருக்கிறதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.நாமும் கனவுகளில் மிதந்து அவை கிடைக்கதாபோது கிடைத்ததைக் கொண்டு நிறைவு காண்பது போல அவ்வப்போது கதைகளின் நகர்வு நினைக்கத்தோன்றுகிறது.

வாசகர்கள் முன்னைப்போல் இல்லை.கல்வி,கணினி அறிவு,நவீன தொழிநுட்ப தொடர்பாடல்கள் மூலம் ஆழமான இலக்கியத் தேடலை தங்களைத் தாங்களே நெறிப்படுத்தி,வாசிப்பை மேற்கொள்வதால் இன்னும்,இன்னும் என படைப்புக்களை எதிர்பார்க்கிறார்கள்.அடர்த்தியான சொற்களுடன்,ஆழமான அனுபவச் சிந்தனைகளுடன்,கதைக்குள் என்ன இருக்கிறது எனும் அக்கறையையும் கொண்டுள்ளார்கள்.அதனால் அனுபவங்களைக் கதையாக்கும் மயில் மகாலிங்கம் போன்றவர்களின் கதைகளும் வாசகர்களைச் சென்றடையும் என்பதே உண்மை.

ஈழத்தில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கான தமது ஆதரவை தந்துகொண்டே இருப்பர்.சில சமயங்களில் அரச அதிகாரிகள் அல்லது அரச சார்பு உறுப்பினர்களை சார்ந்தோ,தமது எதிர்கால நலன் கருதி தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் தேவைகளைப் பெற்றுக்கொள்ள முனைகிறார்கள்.இதனால் நட்புக்களுக்கிடையே கூட உறவில் பங்கம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறது.அதே போல தன் ஆதவாளனிடம் தான் தோற்றுப்போகக்கூடாதென்கிற கரிசனையும் சில அரசியல்வாதிகளுக்கு உண்டு என்பதையும் மறுக்கமுடியாது.ஆசிரியர் இவற்றுக்கும் முகம்கொடுத்திருக்கிறார் போலும்.அவரின் சொந்த அனுபவமாக இல்லாவிட்டாலும் கதைக்குள் கரு சிதையாமல் புகுத்தி எழுதியுள்ளார்.

கால இடைவெளி என்று சொல்லிக்கொண்டாலும் நீர்த்துப்போகாத எழுத்து தொடர்கிறது.ஆயின் எழுதாமல் இருந்த காலங்களில் தான் வாசிப்பை,தேடலை விட்டுவிடவில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.

சிறுகதையின் அளவு வரையறுக்க முடியாதது.எனினும் இதுவரை நமக்குக் கிடைக்கின்ற ஈழத்துக்கதைகளின் கட்டமைப்பை பார்க்குமிடத்து சிறுகதையின் அளவு,பாத்திர வார்ப்புக்கள்,களச்சூழல் ஒரே மாதிரித் தோன்றினாலும் எழுதுகின்ற முறைமை  மாறுப்பட்டிருக்கக்கூடும்.மயில் மகாலிங்கம் அவர்களின் கதைகள் ஒரே சீரான தளத்தில் பயணிப்பதாகவே காணக்கிடைக்கிறது.வாசிக்கையில் கதைக்குள் ஒன்றிப்போகவைக்கின்ற பாத்திரப்படைப்பு நமக்குள்ளும் ஆயிரம் கதைபேசிகொள்ளவைக்கிறது.

சில கதைகளை கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.ஏற்கனவே நாவலும் எழுதியுள்ளமைனால் சிறுகதைகளை ஒரு பயிற்சிக்களமாக்கிவிடுகிறாரோ என நினைக்கத்தோன்றுகிறது.

அதிகமான மனித மனம் அழுக்குக்களால் ஆனது.அருவருப்புக்கள் நிறைந்தவை.நம்மை அறியாமலேயே அரியண்டங்களைச் செய்துவிடுகிறோம்.பிறர் பார்ப்பது பற்றிய சிந்தனை வருவதுமில்லை.வியர்வை நாற்றத்தை முகர்ந்து பார்ப்பது,மூக்கைத் தோண்டுவது இன்ன பிறவும்..அப்படியிருந்தும் பிறரின் அழுக்கைப்பார்த்ததும் அருவருப்பாய் தூர விலகிவிடுகிறோம்.அதுவும் பிச்சைக்காரர் எனின் இன்னும் அதிகமாய் மூக்கைப் பொத்திக்கொள்கிறோம்.அங்கு சிறுபான்மை,பெரும்பான்மை என்றில்லை..இப்பையிருக்கையில் பயணத்தின் போது சங்கடப்பட்டுவிடுகிறோம்.இயலாதவன் என்று தெரிந்தும் மனம் கறுவிக்கொள்ளவே செய்கிறது.மாறாக,யாரை வெறுத்தொகுக்கிறோமோ அவர்களே பல சமயங்களில் உதவும் மனநிலையில் இருப்பதை பார்க்கும் போது நம்ம சம்மட்டி கொண்டடிப்பது போலாகிவிடும்.அத்தகைய உணர்வைப் பிரதிபலிக்கும் விதமான கதையூடாக நம்மையும் நிமிரவைக்கிறார் ஆசிரியர்.

“…புறத்தோற்றத்தில் அருவருப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்த அந்த கால் ஊனமான யாசகனிடம் இப்படியொரு மனித நேயமா?

என்னுள் ஒளித்து விளையாடியவறட்டு மனித நேயத்திற்கு சுளிரென சாட்டையடி கிடைத்தது போலிருந்தது.அவன் இப்போது,என் பார்வையில் ஓங்கி வளர்ந்த நெடுமரமாய் நிமிர்ந்து நின்றான்…” (ஊனம் உடலிலல்ல..)

எப்போது நாம் பலவீனமாக உள்ளோமோ சூழலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.எல்லாத் திசைகளின் தொடர்பும் அறுந்தவையாக மேலும் பலவீனப்படுத்தும்.தன் இயலாமையினால் தாயின் மருத்துவத்திற்காக தன்னையே கேட்கின்ற மருத்துவன்…அதன் தொடர்ச்சியாக அந்தத் தாயின் மகளை தன் காமத்திற்கு இசைவாக்கித் தொடர்கையில்..மேலும் மேலும் பலவீனமக்கிவிடுகின்ற காலச் சூழல் சமூகத்தின் மீதான குறிப்பாக ஆண்களைப் பழிவாங்குவதாக நினைத்து தன்னை நோயாளியாக்கிவிடுவதும்,அவளின் மீதான கரிசனையில் அவளுக்கு ஆலோசகராக வருபவனிடம் தன்கதையைச் சொல்லப்போய் அவனின் தந்தையே அந்த மருத்துவன் என அறிகையில் வாசிக்கும் நம்மையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது.ஆசிரியரின் தமிழ் அச்சொட்டாய் வாரத்தைகளாய் விழுந்து விசித்திரமாய் விளையாடுகிறது. (எரி நட்சத்திரங்கள்)

நாம் புலம்பெயர்ந்த சூழலில் எப்படி வாழமுற்படுகின்றோம்?எப்படி வாழ்கின்றோம்?உடலை வருத்தி குறைந்த ஊதியத்தில் அகதியாக,எழுத்தில் சொல்லமுடியாத அடிமை வாழ்வும் வாழவேண்டியிருக்கிறது.மேலும்,அகதி அந்தஸ்து கோர மனிதமனம் விகாரமாக சிந்திப்பதுண்டு.உடல்,மன சோர்வை அகற்ற குடிக்கவும்,நாம் ஏன் வந்தோம்,எப்படி வந்தோம் என்பதையும் மறந்து போகின்ற நிலையும் உண்டு.தங்களின் சுய நலத்திற்காக உறவைப் பலிக்கடாவாக்குவதும்,விடுதலை நோக்கிய ஒரு பயணத்தைக் கொச்சைப்படுத்துவதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இராணுவத்தின் பக்கமும்,சில சமயம் சிடுதலைப் போராட்டத்தின் பக்கமும் சாய்ந்துகொள்கின்ற சூழலும் உண்டு என்பதை சிறுகதையாக சொல்லுகிறார்.அகதி அந்தஸ்து கோருகின்ற பொழுது உறவுகளே யுத்தத்தில் இறந்ததாகச் சொல்லும் ஒருவனின் குடும்பம் உண்மையிலேயே  செல் வீச்சில் மடிந்து போக அதிர்ச்சியடைவதை அழகுற சொல்லியிருக்கிறார்.(கரி நாக்கு)

ஒரு படைப்பாளி வாசகனைத் தேடிவரும் வண்ணம் அவனின் எழுத்துக்கள் அமையவேண்டும் அப்போதே அவனின் எழுத்து நிலைத்து நிற்கும்.இங்கு ஆசிரியர் சரியாகவே செய்திருக்கிறார்.

மருத்துவம் அது ஆங்கில மருத்துவமென்றாலும்,தமிழ் மருத்துவமென்றாலும் சிலசமயங்களில் சுகயீனமுற்றவரை சுகப்படுத்திவிடும் என்று கூறிவிடமுடியாது.’இயன்றவரை பார்த்துவிட்டோம்.எனி கடவுளிடம் பாரத்தைப் போடுவோம்’ எனக்சொல்லும் மருத்துவர்களையும் பார்த்திருக்கிறோம்.மருத்துவ ஆலோசனையையும் மீறி பார்ட்டியில் நண்பர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக குடிக்கப்போய் ஒருவனின் உடல் நிலை மோசமாகப் போக மருத்துவமும் கைவிட்ட நிலையில்,தமிழ்வைத்தியர் சொன்ன ஆலோசனையின் பேரில் மருத்துவம் பார்க்க,கூடவே அவரின் ஆலோசனையில் மனைவி மூலம் சில செயல்பாடுகளையும் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும் நிலையை அழகுற சொல்கிறார்.ஆசிரியரின் நேரடி அனுபவமாக இருக்கலாம்.நம்பமுடியாவிட்டாலும் எங்கோ ஒரு மூலையில் சில அதிசயங்கள் நிகழ்ந்துதான் ஆகும்.சிந்திக்கவும் வைக்கிறது.(காலனை ஏமாற்றிய காதல்..)

நமது வாழ்வில் தன்னம்பிக்கை வைக்காது பிறரிடமோ,கடவுளிடமோ பழியைப்போட்டுவிட்டு தப்பிவிடுகிறோம்.சில சமயங்களில் யாராவது நம்பிக்கையூட்டினால் நம்பி புளகாங்கிதம் அடைவதும் ,அவை இழந்து போகையில் தூற்றுவதும் மனித இயல்பானது.இங்கு கதையில்சித்திவிநாயகர் கோயில் அர்ச்சகர் தன்னிடம் வரும் இரண்டு அரசியல்வாதிகளிடமும் தனியாக தேர்தலில் வெற்றிபெறுவீர்கள் என நம்பிக்கையூட்டுகிறார்.தேர்தலில் தோற்ற அரச சார்புடைய அரசியல்வாதி வந்து அர்ச்சகரை திட்டிச்செல்ல,வென்ற தமிழர் தரப்பு அரசியல்வாதியை தன் அரச சார்பு நிலயை சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றிக்கொண்ட அர்ச்சகரும் தமிழர்களை கடவுள் காப்பாற்றுவார் என்று வாழ்த்தவும் செய்கிறார்.இது எங்கும் பொதுவானதாகவே பார்க்கப்படுகிறது.அருமையான கதை..இது நமக்கான நேரடியான அனுபவமுமாக இருப்பதால் ரசிக்கும்படியாக உள்ளது. (சித்திவிநாயகர்)

மேலும்,

ஆசிரியர் தான் வாழ்ந்த கிராமத்து அழகையும்,அங்கு வாழ்ந்து ரசித்த பொழுதுகளையும்,குறும்புகளையும் மறந்துவிடவில்லை..புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் மறக்கவியலா அழியா நினைவுகளையும் அவ்வப்போது ஞாபகமாய் எழுதுகிறார்.நமது நினைவுகளையும் கிளறிவிடுகிறார்.

புலம்பெயர் வாழ்வியல் சூழலுக்கான அத்திவாரத்தை பலமாக ஊன்றிக்கொள்ள நமது போராட்டம்,இனமுரண்பாடு என காரணங்களாய் அமைந்தன.அதுவே சொகுசான வாழ்விற்குள்ளும் பழகிக்கொள்ளும்படி கட்டமைத்துக்கொள்ளுகின்ற சமூகத்தின் மன முரண்பாடுகளை அழகாகச் சொல்லும் கதை இது.(நிலை மாறும் உலகில்..)தங்களின் கௌரவம் விட்டுப்போய்விடக்கூடாது என்பதில் கவனமாகவும் இருக்கவே செய்கிறார்கள்>அதனால் உறவுகள் இரண்டாம் பட்சம்தான்.பெற்றவர்களேயாயினும்..பூப்புனித நீராட்டு/திருமணவிழாக்களை டாம்பீகமாகவும் கொண்டாடுவதும்,பிறந்த நாள் விழாக்களை இன்ப அதிர்ச்சிக் கொண்டாடமாக நடத்துவதும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது என்பதையும் மறக்கமுடியாது.இக் கொண்டாட்ட முனைப்பில் வேண்டுமென்றே ஊரில் தாயின் மரணமும் மறைக்கப்படுவதும்,பின்ன்னர் அம்மரணம் சாதாரண நிகழ்வாக்கிவிடுவதும் மனிதமங்களின் கொடூரமாய்த் தெரிகிறது.தெரிந்தோ தெரியாமலோ வக்கிரங்கள் வெளிப்பட்டுவிடுவதும்,நாகரிகச் சாயலுக்குள் மழுங்கடிக்கப்பட்டுவிடுவதும் புலம்பெயர்வாழ்வியல் யதார்த்தமாகிப் போனதை அனுபவபூர்வமாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கது.

கதைகளுக்கான பாத்திரத்தேர்வுகள் மீதான கரிசனை அதிகமிருக்கிறது.கதையின் கரு சிதையாமல் சொல்ல வந்ததை தெளிவுற சொல்லிவிடும் ஆற்றல் ஆசிரியரின் தமிழ் மீதான செறிவான பற்றும் இருந்திருக்கிறது.

சேகர்,அமரன்,ரேவதி பாத்திரங்களை நம் கண்முன் வாழும் பாத்திரங்களாக்கியிருப்பது வரவேற்கத்தது.ஆங்காங்கே வாசிக்கவும்,காட்சி ஊடகங்களூடாக காணாவும் முடிந்திருக்கிற பாத்திரங்கள்தான் எனினும் சொல்லும் முறையில் இன்னமும் வாழும் பாத்திரங்களாக்கிவிடுகிறார் ஆசிரியர்.உடல் உறுப்புக்களை இழந்தவனுக்கு மனிதநேயத்துடன் தன் உறுப்புக்களிலொன்றை வழங்கிவனை சந்தேகக்கண்கொண்டு பார்க்கின்ற ஒருவன் எப்படி துயருற்று,தன்னை அழித்துக்கொள்கிறான் என்பதுவும்,அதனால் ஒரு பெண்ணின் அவலத்தைப் போக்க தானே அப்பெண்ணை ஏற்றுக்கொள்ளுகின்ற முடிவினையும் வாசிக்கையில் நாமும் விக்கித்து நிற்கிறோம்.ஏற்கனவே இத்தொகுப்பில் வரும் கதையின் தொடர்ச்சியாகவே காணமுடிகிறது.இரண்டையும் இணைத்து நெடுங்கதையாகவும் ஆக்கியிருக்கலாமே என நினைக்கவும் தோன்றுகிறது.(நெஞ்சில் நீ ஒரு பாதி…).

தங்கள் காணிகளுக்குள் இருக்கும் பனை,தென்னை மரங்களை கள்ளிறக்க கொடுக்கையில் பயனாளி பலனடைய விடாமால் பேராசை கொண்ட மனிதர்கள் களவாக கள்ளை இறக்கிக் குடிப்பதும்,அதனை அறிந்தபின் கள்ளுப்பானையில் நஞ்சைக் கலப்பதும்,இது தெரியாமல் களவாகக் குடித்தவர் இழப்பைச் சந்திப்பதும்,இச் செய்தி வேறு சிலருக்கு படிப்பினையாகவும் ஆகிவிடுவதை அழகாகச் சொல்கிறார்.பேராசை பெரும் நஸ்டம் என்பதும் சொல்லாமல் சொல்லப்பட்டிருகிறது.நான் ரசித்த கதைகளுள் இதுவும் ஒன்று.செவி வழி கேட்ட கதையும் கூடத் தான்..(பொறியில் சிக்காத எலிகள்..)

ஒவ்வொரு மனிதனின் முடிவும் சில சமயங்களில் எதிர்பாராதவைகளாக அமைந்துவிடுவதுமுண்டு.யுத்தம்,வறுமை எல்லாம் வாட்ட இராணுவக் கெடுபிடிகளுக்கிடையேயும்,வாழும் வழி தெரியாமல் பசியுடன் வாழ் நேர்கிற சமயங்களில் வல்லூறுகளின் இடைமறித்தல்களும் நிகழவே செய்யும்.அதன் தாக்கம் அதிகம் நோவுகளைத் தந்துவிடும்.இந்திய இராணுவ காலங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஆயுதக் குழுக்களிடமிருந்து காப்பாற்ற தங்கள் பிள்ளைகளை விடுதலையை விரும்பும் இயக்கத்திடம் ஒப்படைத்த சம்பவங்களுமுண்டு.அதை மையப்படுத்தி எழுதிய கதையாக இருக்கிறது.ஒவ்வொரு காலகட்ட அவலங்கள்,அச்சுறுத்தல்களிடமிருந்து வில்கிப் போபவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதும்,பலர் விடுதலையை நோக்கிய பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டதும் கண்கூடு.எழுத்தாளனும் பாதிப்புற்றிருப்பதனால் அவனின் எழுத்தும் ஒரு கட்ட வரலாற்றைச் சொல்ல முற்படவே செய்கிறது.(மெய்ப்படும் கனவு)

ஒட்டுமொத்தமாக தொகுப்பில் நல்ல கதைகளை ஆர்வம் குன்றிவிடாமல் வாசித்த திருப்தியே ஏற்படுகிறது.

அந்த வகையில் எரி நட்சத்திரங்கள் அநேக வாசகர்களைச் சென்றடையும் என நம்பலாம்.

புகழ் பூத்த ஆலங்கேணிக் கிராமம் பல கலைஞர்களையும்,படைப்பாளர்களையும்,படிப்பாளர்களையும் கொண்டுள்ளமை அக் கிராமத்திற்குக் கிடைத்த பேறாகும்.

மயில் மகாலிங்கம் அவர்களும் நிறைய எழுதுவதற்காக காலம் அவருக்காகக் காத்திருக்கும் என நாமும்  எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,

முல்லைஅமுதன்

29/03/2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More