Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தெணியானுக்கும் அவர் படைப்புக்களுக்கும் இலங்கையில் சரியான அங்கீகாரம் இல்லை | சிறீதரன் எம்பி

தெணியானுக்கும் அவர் படைப்புக்களுக்கும் இலங்கையில் சரியான அங்கீகாரம் இல்லை | சிறீதரன் எம்பி

2 minutes read

தெணியானுக்கும், அவரது படைப்புக்களுக்கும் இலங்கையில் சரியான அங்கீகாரம் வழங்கப்பட வில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமை தெணியானின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் உரையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவ் அறிக்கை வருமாறு:

ஈழத்து இலக்கியப் பரப்பின் முதுபெரும் ஆளுமையான ‘தெணியான்’ என்று அறியப்படும் ஓய்வுநிலை ஆசிரியர் திரு.கந்தையா நடேசன் அவர்கள் தனது 80 ஆவது அகவையில் மறைந்த செய்தி கலை, இலக்கியப் பரப்பினரிடையேயும், அவரையும், அவரது படைப்புக்களையும் ஆழ நேசித்தவர்களிடையேயும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்.வடமராட்சி, பொலிகண்டிப் பிரதேசத்தின் ‘தெணி’ என்னும் சிற்றூரைப் பூர்வீகமாகவும், வாழ்விடமாகவும் கொண்டிருந்த இவர் 1964 இல் விவேகி என்னும் சிற்றிதழில் வெளியான ‘பிணைப்பு’ சிறுகதை மூலம் தனது எழுத்துலகப் பிரவேசத்தை ஆரம்பிக்கும் போது, ‘தெணி’ என்னும் தன் ஊரின் அடையாளத்தை ‘தெணியான்’ என்னும் தனக்கான அடையாளமாக்கியிருந்தார். ஆனால் ஓரிரு ஆண்டுகளிலேயே அந்த ஊரின் அடையாளமாக தானே மாறி, பின்வந்த நாட்களில் பரந்துவிரிந்த தமிழிலக்கியப் பரப்பின் ஓர் தனித்த அடையாளமாக, தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறிப்போயிருந்தார்.

அக்கால யாழ்ப்பாணச் சமூகத்தோடு பின்னிப்பிணைந்திருந்த சாதிய ஒடுக்குமுறைக்கும், வர்க்க முரண்பாடு களுக்கும் எதிரான முற்போக்கு எழுத்தாளர்களாக யாழ்ப்பாணத்திலிருந்தே முகிழ்ப்புப்பெற்ற கே.டானியல், பேராசிரியர்.கா.சிவத்தம்பி, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா உள்ளிட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் வரிசையில், ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் செல்நெறி வெளிப்பாடுகளை மையப்படுத்தி யாழ்ப்பாணச் சமூகத்தின் வௌ;வேறுபட்ட உணர்திறன்களை, வாழ்வியல் போக்குகளை அடையாளம் காட்டுவனவாக அமைந்திருந்த இவரது படைப்புக்கள் பெரும்பாலும் சாதியத்தின் பிடிக்குள்ளான மனித வாழ்வின் அழுத்தங்களாலும், துடிப்புக்களாலும், போராட்டங்களாலும் கட்டமைக் கப்பட்டிருந்தமையே அவை அடித்தட்டு மக்களையும் சென்றடையக் காரணம்.

வெறுமனே ஓர் கலை இலக்கியப் படைப்பாளியாக அல்லாமல், மானிட விடுதலை நோக்கிய சமூக ஒன்றிணைவின் குரலாகவே அரை நூற்றாண்டுக்கும் மேலான தனது இலக்கியப் பணியை அவர் ஆற்றிச் சென்றிருக்கிறார். இலங்கை அரசின் மதிப்புறு உயர் விருதான சாகித்திய ரத்னா மற்றும் கலாபூஷணம் உள்ளிட்ட பல விருதுகளைத் தனதாக்கிக் கொண்ட தெணியான், 150இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், 30 இற்கும் அதிகமான கவிதைகள், 8 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள் என்பவற்றோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களைப் படைத்தளித்ததனூடு ஈழத்துக் கலை இலக்கியப் பரப்பில் என்றென்றைக்கும் நீங்கா இடம் பிடித்துள்ளமை, ஒரு படைப்பாளியாக அவரது படைப்புக்களுக்குக் கிட்டியிருக்கின்ற வெகுமதியும், அங்கீகாரமுமே!

இருந்தபோதும், ஈழ இலக்கிய வெளிக்கு அப்பால் தமிழக வாசகர்களையும் தனது படைப்புக்களால்;; கவர்ந்திழுத்த தெணியானுக்கும், அவரது படைப்புக்களுக்கும் இலங்கையில் சரியான அங்கீகாரம் வழங்கப்பட வில்லையோ என்ற ஆதங்கமும் எம் நெஞ்சை நெருடாமலில்லை. ஆனால், தனது முனைவர் பட்டப்படிப்புக்காக கலாநிதி அல்லைப்பிட்டி திருநாவுக்;கரசு அவர்களால் ஈழத்து இக்கிய முன்னோடியான டானியலின் படைப்புக்கள் முழுமையாக ஆய்வுசெய்யப்பட்டதைப் போன்று, இனிவரும் காலங்களில் தெணியானின் படைப்புக்களும் ஆய்வுக்குட்படுத்தப்படுவதன் மூலம், அவரும் அவரது படைப்புக்களும் இப்போதிருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக ஆராதிக்கப்படும் என்ற ஆழ்மன நம்பிக்கையோடு, அன்னாரது ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கும் அதேவேளை, இப்பேரிழப்பால் பரிதவித்து நிற்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இலக்கிய உறவுகளுக்கும் என் அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More