24
கழுமரங்கள் பூக்கள் பூத்திருக்க
குருவிகள் கூடு கட்டியிருக்கின்றன.
கொலைக்கயிறு தொழிலகங்கள்
உணவுக் கூடங்களாய்
உருமாறி விட்டன.
மனிதக் குருதி படிந்த ஆன்மாக்களின்
மேனியெங்கும்
அன்பின் வண்ணச்சாயங்களால்
மிளிரும் அழகு ஒளிர்கின்றது.
புதினத்தில் கரைந்து போன
பாக்தாத் நகரமாய்
சிதிலமடைந்த வெளியில்
பேரழகு மிக்க மாய உலகம்.
உயிர்களை நாவு நீட்டி
உறிஞ்சிக் குடித்த காற்று
நறுமணம் கொண்டலைகிறது.
நேச ஈர மேகங்களின்
கண்களிலிருந்து
களிப்பு மழை
பூமியெங்கும் பொழிந்திட
குளிர்ச்சியின் கருணை பரவுகிறது.
வேதனை சாறு பொங்கிய
இதயக் கோப்பைகளில்
இன்பக் கனவுகள்
தளும்புகின்றன.
கசப்பையும் வெறுப்பையும்
சுவைத்த மானுடம்
சந்தோஷங்களை
ருசிக்கின்றது.
வாழ்விலிருந்து
கிளர்ந்தெழுந்த
சூறைப்புயலின் ஓலம்
எங்கோ அணைந்து போனது.
படுகளமின்று
ஆனந்தத்தின் கூடமாய்…
மெய் கரைக்கும் இசையரங்காய்..
கேளிக்கைகள் பீறிட்டுப் பாயும்
மலர் வனமாய் மாறிப் போனது
கனவுகளில்.
வசந்ததீபன்