September 22, 2023 3:37 am

கவிதை எழுதுவது எப்படி? போகன் சங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

Image may contain: 1 person, stripes

நாலு ரூபாய் சில்லறை
நிச்சயமாக உங்களுக்கு தேவைப்படும்
நாளில்தான்
நடத்துனர் உங்களுக்கு
நாலு ரூபாயைத் தராமல் போகிறார்.
நாலு ரூபாய் அவ்வளவு
தேவைப்படாத நாளில் அவர்
நிச்சயமாக உங்களுக்கு தந்துவிடுகிறார்.

வாழ்க்கை இவ்விதமே அமைகிறது.
நீங்கள் நாலு ரூபாயின் முக்கியத்துவம்
அல்லது முக்கியத்துவமின்மை பற்றி
யோசிக்கத் துவங்குகிறீர்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு
நாலு ரூபாய்க்கு
பெட்டிக்கடைகளில் நல்ல முக்கியத்துவம் இருந்தது.
அதற்கு பத்து வருடம் முன்பு
நாலு ரூபாய்க்கு நல்ல காபி கிடைத்தது.
அதற்கும் முன்பு
நாலு ரூபாயில் நீங்கள்
நாகர்கோவில் வரை போக முடிந்தது.
அதற்கும் முன்பு
நாலு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கிடைத்தது.
இந்தியா சுதந்திரம் அடையும்போது
ஒரு சிப்பாயின் சம்பளம் நாலு ரூபாய்தான்.
ஆங்கிலேயர் இங்கு ஆண்டபோது
ஒரு கவர்னரின் சம்பளமே நாலு ரூபாய்தான்.
ஒரு நாலு ரூபாய் இல்லாமல்தான்
ராபர்ட் க்ளைவ் நாலு தற்கொலை முயற்சிகளுக்குப் பின்பு
கப்பலேறி இந்தியா வந்தான்.
அந்தக் கப்பலின் கேப்டன்
ஒரு வேசிக்கு நாலு ரூபாய் கொடுத்தபோது
அவளுக்கு மாரடைப்பு வந்து மரித்துப்போனாள்.
துக்ளக்கின் காலத்தில் நாலு ருபாய் நாணயத்துக்குத் தடை இருந்தது.

இன்றைக்கு நாலு ரூபாயை
பிச்சைக்காரன் கூட மறுக்கிறான்.

ஆனால் ஒரு காலத்தில் டெலிபோன் பூத்தில்
நாலு ரூபாய்ச் சில்லறை இல்லாமல்
நிறைய காதல்கள் சொல்லப்படாமல் போயிருக்கின்றன.

இன்றைக்கு நாலு ரூபாய் வெறும் நாலு ரூபாய்தான்.

இருந்தாலும் அரசாங்கம்
நாலு நாலு ரூபாயாய்
பெட்ரோல் விலையை உயர்த்தும்போது
நாலு ரூபாயின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிடுகிறது.

நாலு ரூபாய் பற்றிய எனது நாலு ரூபாய் இதுதான்.

போகன் சங்கர்

Image may contain: 1 person

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்