Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சிறுகதை | மனப்பாரம் | கனக செந்தூர் பாரதி

சிறுகதை | மனப்பாரம் | கனக செந்தூர் பாரதி

7 minutes read
ரத்தினத்தார் காலையில் எழுந்ததுமே சாமியைக் கும்பிடமாட்டார் முதல் நாள் சாமிக்கு வைத்த பூக்களைச் சேகரித்து பூக்கூடையில் போட்டுவிட்டு சிறு செம்பில் வைத்த நீருமாக வெளியிற் கொண்டு சென்று காற்தடங்கள் படாத பூமரங்களில் ஊற்றுவார். மனைவி பிள்ளைகள் கேட்டால் கடவுளுக்குப் படைத்த நிவேதனப் பொருட்கள் கால்களில் படக்கூடாது என்பார். கூடவே “அப்பனே முருகா” என்பது அவர் திருவாசகம். வழமை போல கடவுளுக்கான அர்ச்சனைகளை முடித்துவிட்டு மனைவியின் கைகளால் ரீயைக் குடித்துவிட்டு தனது பென்ஷனில் எடுத்த ஜீன்ஸ்ஸை மாட்டிக்கொண்டார்.

“என்னென்ன வாங்கோணும் லிஸ்ட்டைக் கொண்டுவா”

மனைவி வசந்தாவும் ரத்தினத்தாரின் அவசரத்தையும் அக்கறையையும் உணர்ந்தவளாய் “காலைலயே எழுதி வச்சிட்டன்,இந்தாங்க” என்று தனது பாற்பொன்னிப் பற்களைக் காட்டிச் சிரித்தவாறே ரத்தினத்தாரின் கைகளில் கொடுத்தாள். லிஸ்டைப் பார்த்த ரத்தினத்தார் நேற்றுத்தானே சம்போ,சோப் எல்லாம் வாங்கின்னான் இண்டைக்கு என்ன திரும்ப எழுதியிருக்கிறாய்” சீறிவிழுந்தார். பெருசாக் கத்தாதீங்க, நேற்று வாங்கேல போன வெள்ளி வாங்கினது.” இல்லாளின் இறைமையை ரத்தினத்தாருக்கு இடித்துரைத்தாள். எடுக்கிற பென்சன் குளிப்பு முழுக்குக்கே குத்துயிரும் கொல உயிருமாப் போயிரும் போல கிடக்கு என்று மனதிற்குள் வேர்த்துக்கொண்டு வெளியில் கிளம்பினார்.

ரத்தினத்தார் ஒன்றும் கருமியல்ல ஆனால் கணக்குவழக்கு தன் கைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாகக் கொண்டவர்.பாவம் அவர் ஒருவரின் பென்ஷனில்த் தான் இந்தக் குடும்பம் நகர்கிறது . அரசாங்க உத்தியோகம் தானே கொஞ்ச நஞ்சமாச்சும் சீதனம் வாங்கி கல்யாணம் கட்டியிருக்கலாம் ஆனால் வசந்தாவின் வசீகரத்தில் வனவாசம் போன இராமனைப் பின் தொடர்ந்த சீதை போல ரத்தினத்தாரைக் கைப்பிடித்து வாழத்தொடங்கியவள் தான் வசந்தாவும். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் புத்திரன் என வறுமைக்கும் செல்வத்திற்கும் இடையே கிளித்தட்டு விளையாட்டுப் போல அவர்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.

இப்போது அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் தன் இரண்டு பெண் பிள்ளைகளையும் நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுத்துவிட்டேன் என்பதுதான். தன் மகனும் ஏலெவெல் பாஸ் பண்ணி இரண்டு மூன்று ஆண்டுகள் வீட்டோடு இருக்கிறான். தான் ஓய்வு பெறுவதற்குள் அவன் நிரந்தர அரச வேலை ஒன்றில் அமர்ந்துவிட வேண்டும் என்று அடிக்கடி நினைந்து கொள்வார்.

மூத்த மகளிற்கு வாங்கிக் கொடுத்து சீதனமாய் மாறாது வீட்டோடு தங்கிவிட்ட லேடீஸ் சைக்கிளில் எதிர்க்காற்றை மிதிக்கிறார். உழைத்துப் பழகிய உடலும் உழக்கிப் பழகிய சைக்கிளுமாய் தார்வீதியில் மீன் நிறைந்த தெப்பம் அலைகளில் வழுக்கி வருமாற் போல பரந்தனை நோக்கிச் சைக்கிளை மிதிக்கிறார். நேராக மோகன் கடைக்குச் சைக்கிள் சென்றதும் “வாங்க, தம்பி, ரத்தினமண்ண கொண்டுவந்த பில்ல வாங்கிச் சாமானப் போட்டுவிடுங்கோ… “ கடைக்கார மோகன் வேலைகாரப் பையனுக்கு குரல் கொடுத்தார்.

“அண்ண,பழைய கணக்கும் இருக்கு கொஞ்சம் சரிபார்த்தால் எனக்கும் பொடியனிட்ட சாமான நிறுக்கச் சொல்ல வசதியா இருக்கும்…

”பழைய கடனை வசூலிக்க மோகன் சொன்ன வார்த்தைகள் ரத்தினத்தாருக்குப் புரியாமலில்லை. “ஓம் தம்ப” .. இந்த மாசப் பென்சனோட உங்கட கணக்க முடிப்பன்.

“நான், என்ன இண்டைக்கு நேற்றைக்கா உங்களிட்ட கடனுக்குச் சாமான் வாங்குறன்.. உங்கட அப்பற்ற காலத்தில இருந்து நான் உழைச்ச பாதிக்காசு இஞ்ச உங்கட கல்லாப்பெட்டிக்க தான் கிடக்குது” என்று மோகனுக்கு பதில் கொடுத்தார். இருந்தாலும் பென்சனில் மூன்றில் ஒரு பங்கைக் கடன்காசு பிடித்துவிட்டது என்று நினைந்து உள்ளுக்குள் வருத்தப்பட்டார்.

“தம்பி நீங்க சாமனைப் போட்டு வையுங்க நான் ஒருக்கா மீன வாங்கிட்டு ஓடியாறன்.. இப்ப போனாத்தான் உடன் மீன் வாங்கலாம் அதுவும் தாளையடி மீன் பிறகு கிடைக்காது” என்று சொல்லிக் கையில் மீனை வைப்பதற்கென்றே கொண்டுவந்த பிரத்தியேகப் பையை சைக்கிள் கரியரில் இருந்து எடுத்துக்கொண்டு பெடலில் இடதுகாலை வைத்து உழக்கி அவ்விடத்தை விட்டு மறைந்தார்.

ஒரு வழியாக மளிகைக்கடை,மீன்சந்தைப் போராட்டமெல்லாம் முடிந்து வீட்டுக் கேற்றைத் திறந்தார்.எங்கோ தன் உடலில் உண்ணிகளைத் தேடித்தேடிக் கடித்துக்கொண்டிருந்த ரத்தினத்தார் வீட்டு நாய் மீன்வாடையை மோப்பம் பிடித்துக்கொண்டு உண்ணிகளைப் பிறகு பார்த்துக்கொள்லாலாம் என்று கேற்றை நோக்கிப் பாய்ந்து வந்தது.வருகின்ற வெய்யில் வெக்கைல மனுசன்,

“வளர்க்கிற நாயா இருந்தாலும் எங்களத்தான் பேசும்” என்பதை இல்லறத்தின் பயனாக உணர்ந்த வசந்தா நாயைத் துரத்தியவாறு கொண்டுவந்த பைகளைச் சிரத்தையோடு தூக்கினாள்.

“நல்ல விளை மீன் கிலோ நானூறு சொன்னான் நான் முன்னூற்று ஐம்தெண்டால் குடுங்க எண்டு சொல்லி ஒரே பிடியா நிண்டு வாங்கிட்டன்” தம்பிக்கு இதுதானே பிடிச்ச மீன் வடிவாய்க் காச்சித்தா உன்ர கையால” தன் நா வல்லமையை மீன்காரனுக்குக் காட்டியதை வெற்றியாகக் கருதி சைக்கிளை ஸ்டாண்டில் விட்டுவிட்டு கைகால்களை அலம்பக் கிணற்றடிக்குச் சென்றார்.

என்னதான் கறி,சோறைப் பிள்ளைகளுக்கென சமைத்தாலும் முதற்பரிமாறல் எப்பொழுதும் கணவருக்குத்தானே இது தானே பெண்களின் பதிவிரதைத்தனம். வசந்தாவும் இதற்கு விதிவிலக்கல்லவே காலையில் ரத்தினத்தார் துயில் கலைவது இரண்டே இரண்டு நிகழ்விற்காகத்தான் ஒன்று வசந்தாவின் முகத்திலெ முழிப்பதற்காயும் இரண்டாவது அவர் ஊற்றும் பால்த்தேனீருக்காயும். இரண்டையும் மரக்கட்டிலில் விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தையின் மேலிருந்து அனுபவிக்கும் போது தான் அவருக்கு சீதை இராமனுடன் வனத்திற்கு வந்திராவிடில் இராமனின் நிலை என்னவாகியிருக்கும் எனத் தோன்றும்.

வீட்டு வாசலில் தபாற்காரனின் மோட்டார் சைக்கிள் கோர்ன் கேட்டது.

“தம்பி ஒருக்கா கேற்றடியப் பார் யாரோ கோர்ன் அடிக்கிறாங்கள் என்னெண்டு கேள்” வசந்தா மீனைக் கழுவிக்கொண்டே கொடுத்த அரவத்திற்கு அதுவரை அன்ரொயிட் போனை அருட்டிக்கொண்டிருந்த மகன் “இந்தா பார்க்கிறேன்..கத்தாதீங்க.. என்று சொல்லிக்கொண்டே போனை மேசையில் கிடத்திவிட்டு விரைந்து வெளிக்கேற்றிற்கு சென்றான் அங்கே தபாற்காரர் “மயூரன் … நீட்டி முழக்கும் முன்னமே,

“அது நான் தான்” ஒரு அரச பதிவுத்தபாலை நீட்டினார். அஞ்சல் உறையினைப் பிரிக்கப் பொறுமையற்றவனாக “உள்ளே உள்ள கடிதத்திற்கு சேதாரமின்றி” உறையைக் கிழித்து கடிதத்தை விரித்தான். அவனது மீன்குஞ்சுக் கண்கள் இறக்கை கொண்டு துடித்தது..

“அம்மா எனக்கு வேலை கிடைச்சிட்டு..” இருகால் முயலெனத் துள்ளி ஓடி வீட்டிற்குள்ப் புகுந்தான். வெட்டிய மீன் சட்டியை மூடினாளோ தெரியவில்லை வசந்தாவும் மார்புக்கு நேரே தன் கைகளை வைத்து “சன்னதியானே..” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் இறைச்சி படைத்த கண்ணப்பனாரைப் போல. “எங்க காட்டு பார்ப்பம்” ரத்தினத்தார் படிக்கத்தொடங்கினார்.. வாசித்து முடித்ததும் மகனை வாரி அணைத்து வாஞ்சையோடு முத்தாடி ஆனந்தக் கண்ணீரோடு சாமியறை முருகன் படத்தின் முன்னால் கடிதத்தை வைத்து சாமிக்கு விளக்கேற்றினார்.

அது ஒரு திங்கட்கிழமை மகன் மோட்டார் வண்டியை முறுக்கிக்கொண்டு வாத்தியாராக பள்ளிக்கு விரைந்ததைப் பார்த்து இருவருமாய் பூரிப்படைந்தனர்.

“என்ன ரத்தினமண்ண மகன் ஸ்கூல் போறார் போல.. முன்வீட்டு நாதன் கேட்க “பின்ன, இது தானே ஒரு அப்பனுக்குப் பெருமை”என்று முரசு தெரியச் சிரித்துக்கொண்டே சொல்லித் திரும்பிப் பார்க்காது வீட்டிற்குட் புகுந்தார்.

“எல்லாற்ற கண்ணும் கண்ணில்ல, இவனுக்கு வர்ர வெள்ளி நல்லாத் துடைச்சு எரி” என்று மனைவிக்கு கட்டளையிட்டார்.

வழக்கம் போல கடிகாரத்தின் முன்பே கண்விழித்த வசந்தா பம்பரமாய் வேலை செய்யத் தொடங்கினார் அந்த வேளைகளில் சில்வர்க் கிண்ணங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது கிண்ணாரமாய் ஒலித்தது. ரத்தினத்தார் கண்விழித்தார், மகன் கிணற்றடியில் முழுகிக் குளித்துக்கொண்டிருப்பது கிணற்று வாளித் தண்ணீரால் விளங்கிக்கொண்டிருந்தது.

“அம்மா, துவாயக் கொண்டாங்க..எடுக்க மறந்திட்டேன் “ உனக்கு இதே வேலையாப்போச்சு

போகேக்குள்ளயே கொண்டு போனா என்ன?

கதிரவன் விழிக்கும் காலையில் கணீரென இருந்தது அவளின் குரல்.

“சரி சரி தேத்தண்ணிய ஊத்துங்க நேரம் போகுது” இடதுகையால் துவாயை வாங்கிக்கொண்டே கிணற்றுப்பக்கமாக மறைந்தான்.

தம்பி, “இந்தா தேத்தண்ணி” ரத்தினத்தாருக்குச் செய்த அதே ராஜமரியாதை. முகம் கழுவிப் பொட்டுவைத்து சிரித்துக்கொண்டே கொடுக்கும் அந்தத் தேனிருக்குத்தான் என்னவொரு கர்வம். அம்மா, ரீ சூப்பர் என்ற வாறே அறைக்குட் திரும்பினான்.

“அப்பா,

“ம்ம்…”

இந்தாங்க தேத்தண்ணி கோப்பையை நீட்டினாள். சுவாரஸ்யமின்றி எழுந்து போர்வையை மடித்து வைத்திவிட்டு வலது கையை நீட்டினார். ரத்தினத்தாரின் ஆட்காட்டி விரல் கைபிடிக்குள் நுழைந்தது தான் தாமதம் வசந்தா சமையற்கட்டுக்கு வேகமெடுத்தார். இப்பொழுதெல்லாம் வசந்தா உழைக்கும் மகனுக்கு முன்னுரிமை கொடுப்பது ரத்தினத்தாருக்கு ஒரு மாதிரியாகப்பட்டது. யாரோ தன் சிம்மாசனத்தை அசைப்பது போல உணர்ந்தார்.

நல்ல பகல் வேளை மகன் வீட்டில் இல்லை அல்பிரட் சித்தப்பா விருந்தாளியாக வந்திருந்தார். அவரோடு மகனது வேலை,மகள்களின் வாழ்வு,மருமக்களது தொழில்கள் எனப் பலதும்பத்துமாய்த் தம்பதியர் சிலாகித்துகொண்டிருந்தனர்.

“வசந்தாக்காட ரீயோடு பசியில்லாமல் இருக்கலாம்” ஒருவாய் குடித்துமுடித்து மகுடம் சூட்டினார். “காலைல இதக்குடிச்சுத்தானே அண்ண இப்பிடி உசாரா இருக்கிறார்” மேலும் கூற

“இப்பயெல்லாம் மகனுக்குத்தான் தம்பி முதல் ரீ.., உழைப்புக்கும் பென்சனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்து” ரத்தினத்தார் இலைமறை காயாய்ப் போட்டுடைத்தார். அதுவரையில் கிள்ளிய தேயிலைத் தளிராய் துளிர்த்திருந்த அவளின் முகம் “விதரியில் நசிபடும் தளிர்போலானது” அல்பிரட்டுக்கு அது விளங்கவில்லை. அதன் பிறகு அவர்கள் பேச்சில் சுவார்ஸ்யம் இருக்கவில்லைப் போல வசந்தா சமயற்கட்டோடு பேசத்தொடங்கிவிட்டாள். அல்பிரட்டார் வெளிக்கேற்றைத் தாண்டியதும்

“ஏன் அப்டிச் சொன்னீங்க…

“எதைக் கேக்கிற, விளங்காதவர் போல ரத்தினத்தார் பாவனை செய்தார்

“உழைக்கிறதுக்கும் பென்சனுக்கும் வித்தியாசம் இருக்குமெண்டு, ஏன்? சொன்னீங்க”

“அது…. ….”

கதிரையில் சாய்ந்திருந்த ரத்தினத்தார் இரு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தி தலையை நோக்கி மடித்துக்கொண்டே..

“இப்பெல்லாம் முதல் ரீ அவனுக்குத்தானே கொடுக்கிற அதுதான் சொன்னான” என்றார். கண்ணீர் அவர் கண்களில் ஓடுபாதையைத் தேடிக்கொண்டிருந்தது.

சில நிமிசங்கள் நிசப்தம் நிலவியிருக்க..

தாலிக்கொடிக்கும் தொப்புட்கொடிக்கும் இடையில பாவம் நீ என்ன செய்வாய்..?

“ஏனப்பா… கேட்கும் முன்னமே அறுபது வயது ஆண்மகன் அழத்தொடங்கியது வசந்தாவை அடித்து நொருக்கியது.

தப்புச் செய்துவிடவில்லையே ஆனாலும் கைதவறிய கண்ணாடிக் கோப்பை சீமந்து நிலத்தில் வீழ்ந்து நொருங்குவதைப் போல சுக்கு நூறானாள்.

ஏனப்பா? , “அவன் நேரத்துக்குப் போறவன் அவனத்தானே முதல்ல கவனிக்கணும் அதுதான் தேத்தண்ணிய இப்ப அவனுக்கும் முதல்க் கொடுக்கிறனான்.” தன்னை நியாயப்படுத்தினாள்.

“எங்கட ஒரே ஒரு மகன் தானே அவனுக்கு கொடுக்கிறதில என்னப்பா இருக்கு” வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேட்டாள்…

“அது என்னமோ தெரியா உன் கையால் வரும் முதல் தேத்தண்ணி எனக்காகத் தான் இருக்க வேண்டும். எனக்கு அது பழகிப்போச்சு… சொல்லிக்கொண்டே எழுந்து நடந்தார். அதில் காதலும் எதிர்பார்ப்பும் கலந்திருந்ததை வசந்தா கவனிக்க மறக்கவில்லை.

மகனுக்கு முதற் சம்பளம் வந்தது பென்சனின் இரு மடங்கென வசந்தா எண்ணிக்கொண்டாள். தந்தை தாய்க்கு உடைகள் என அமர்க்களப் படுத்தினான். அப்பாவும் மகனுமாய் அருகிலுள்ள அம்மாளாச்சி கோவிலுக்கு பைக்கில் சென்று வந்தனர். இரவு உணவு இந்திரலோகத்து இதத்தைக் கொடுத்தது. “தம்பி, ரெண்டு நாளைக்கு முதல் அம்மாவோட சின்னதாய் ஒரு மனக்கசப்பு” அம்மாட்டயே கேள் , சொல்லிகொண்டே சம்பளத்தில் மகன் வாங்கிக்கொடுத்த சாராய வாடை வீசும்படி கட்டிலில் படுத்துக்கொண்டார்.

“அம்மா, என்ன பிரச்சனை…? சாதரணமாகத்தான் கேட்டான்.

“ஒண்டுமில்ல..

“சொல்லுங்க கேக்கிறனல்லா…”

வேலை கிடைச்சதில இருந்து கொஞ்ச நாளா உனக்குத்தானே முதல் தேத்தண்ணி தாறனான் , அதை ஏன்? தனக்குத் தாறதில்ல எண்டு கேட்டு முந்த நாள்க் கண் கலங்கிட்டார்.

“நானும் அழுதிட்டன்…”

“அது சரிதானே அம்மா, நாளைல இருந்து முன்னப் போல நீங்க அப்பாக்கு குடுத்திட்டுத்தான் எனக்குத் தாங்க.. தராட்டிக் கூடப் பறவாயில்ல”

இதெல்லாம் ஒரு பிரச்சனையெண்டு ..அலுத்துகொண்டே அறைக்குட் சென்று போனை நோண்டத் தொடங்கினான்.

காலையில் முகம் கழுவிப் பொட்டுவைத்து பரபரப்போடு அடுப்பை மூட்டி அதிக சாயம் போட்டு ஒரு முதலிரவுப் பால் போல வெட்கம் கலந்த வயோதிபக் காதலோடு அறைக்குட் புகுந்தாள்.

“அப்பா… எழும்புங்கள்

தேனீர் கொண்டந்திருக்கிறேன் “ குரல் வைத்தாள். அசுமாத்தம் இல்லை

ஒரு கையில் தேனீர்க் கோப்பையோடு மறுகையால் தொடைகளில் தட்டினாள் அரவமில்லை. உடல் குளிர்ந்திருந்தது

“அப்பா .., அப்பா… பரபரத்தாள்

தம்பி,இங்க வாடா அப்பாவ எழுப்பு என்றார்

உடல் ஆறப்போட்ட தேனீர் போல சூடிறங்கிக் கிடந்தது……

தலையில் அடித்துக்கொண்டு ஓலமிடத் தொடங்கினாள். செய்வதறியாது திகைத்து நின்றான் மயூரன்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து படையெடுத்தனர். உள்ளே சென்று வந்த குமார் அண்ணன், “ரத்தினம் அண்ணர் முடிஞ்சுது..” என்றார்.

ஐயோ..! அப்பா தேத்தண்ணி கொண்டந்திருக்கிறேன் எழும்புங்கப்பா என்று கதறினாள். ஊர்ப் பெண்கள் எல்லோரும் சுற்றிவளைத்து ஒப்புச் சொல்ல ஆரம்பித்தனர். ஒப்பு முகட்டைக் முட்டிக்கொண்டு வான் நோக்கி நகர்ந்தது.

பந்தல் எழுந்தது சொந்த பந்தம்,அயலவர்கள் , தெரிந்தவர்கள் என அனைவரும் ஒன்று கூட மயூரனை அணைத்தவாறு அக்காமார்கள் அழுது வடித்தனர். வசந்தா கால்மாட்டில் கசிந்துருகிக்கொண்டிருந்தார். ரத்தினத்தாரின் இறுதிக் கிரியைகள் முடிந்தது. எல்லோரும் தலை முழுகி வீட்டையும் கழுவினர். அவரது உடல் இருந்த இடத்தில் ஒரு தகர லாம்பு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.

“அண்ணி, இந்தாங்க இந்தத் தேத்தண்ணிய தலைமாட்டில வையுங்க “ சில்வர்க் கிண்ணத்தில் வாங்கிய தேனீரையும் மகனையும் வசந்தா மாறி மாறிப் பார்த்தாள். மயூரன் அம்மாவைக் கட்டியணைக்க ஓடிவந்தான்.

 

-கனக செந்தூர் பாரதி

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More