Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சிவா சின்னப்பொடியின் ‘நினைவழியா வடுக்கள்’ தர்மினியின் ரனைக் குறிப்பு

சிவா சின்னப்பொடியின் ‘நினைவழியா வடுக்கள்’ தர்மினியின் ரனைக் குறிப்பு

4 minutes read

சிலவற்றைப் படித்து முடித்தவுடன் அவற்றைப்பற்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிராமல் இருக்க முடிவதில்லை.

அப்படியொரு நுால் சிவா சின்னப்பொடி அவர்களின்

‘நினைவழியா வடுக்கள்’

இதில் எழுதப்பட்ட சம்பவங்கள் நடந்தது மிகத் தொலைவான ஒரு காலத்திலல்ல.

நாம் அறியாத ஓர் ஊரிலல்ல. நாகரிகமும் அறிவும் வளர்ந்ததாகவும் சொல்லி, பண்பும் கலாசாரமும் எனப் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நம் சனங்களிடம் இருந்த அயோக்கியத்தனங்களை-அழுக்குகளை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது.

1962ம் ஆண்டு.

எட்டு வயதான சிறுவன் தான் பள்ளிக்கூடம் போன நாளை நினைவுக்குக் கொண்டு வருவதோடு தொடங்குகிறது நினைவழியா வடுக்கள்.

ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திரப்பாரம்பரியமும் அதையொட்டிய சாதியக் கட்டமைப்பும்…என்று முதற்பக்கத்திலேயே ஆரம்பமாகிறது இந்தத் தன்வரலாறு.

Image may contain: text that says 'நினைவழியா வடுக்கள் கள் சிவா சின்னப்பொடி'

சாதியவெறி செய்த கொடுமைகள் ஒரு சிறுவனாக மனதைப் பாதித்தவை-

அதை எதிர்கொண்ட துணிச்சல் என சிறுவயதின் சில ஆண்டுகளின் நினைவுப்பதிவு தான் இப்புத்தகம்.

அந்தச் சில ஆண்டுகளில் பட்ட துன்பங்களும் போராட்டங்களும் இன்றும் அவர் மனதை ரணப்படுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தின் மந்திகை என்ற ஊரிலுள்ள பள்ளிக்கூடத்தில் சாதி காரணமாக நிலத்தில் இருத்தப்பட்டுத்தான் படிக்கவேண்டியிருந்தது. புதிய சீருடைகளையணிந்து தான் நிலத்தில் இருத்தப்பட்டால் அழுக்காகக்கூடாது என கீழே விரித்து அமர்வதற்காக, வீட்டில் தந்தை படிக்க வாங்கிய நாளிதழான வீரகேசரியின் ஒரு பக்கத்தை தன் கையில் எடுத்துச்செல்கிறார். அதையும் அனுமதிக்க முடியாத கதிர்காமன் என்ற வாத்தியார் வாழைமட்டையால் அடித்துக் கறைபிடிக்கச் செய்ததை இவ்வாறாக எழுதியிருக்கிறார்…

‘நீங்களே ஊத்தையன்கள். நிலத்தில இருந்தா உங்கடை கால்சட்டை ஊத்தையாப்போயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம் தான்ரா ஊத்தையாப் போகுது’என்றவர் விறுவிறென்று வெளியே போய் பாடசாலைக் கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடலொன்றை வெட்டிக்கொண்டு வந்தார்.அந்த வாழைத்தடலால் எனது உடம்பில் பத்துப்பதினைந்து சாத்தல்கள் விழுந்த பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது’ அவர்களது உடைகள் அழுக்காக வேண்டுமென்று பள்ளிக்கூடப் பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்ய வைக்கப்படுகின்றனர். ஏன் இப்படி என அச்சிறுவன் தனக்குள் பல கேள்விகளைக் கேட்கிறான். பதில் சாதி.பள்ளிக்கூடத்தில் சமமாக இருந்து படிக்கமுடியாது.

தண்ணீர் அள்ள முடியாது. சக மாணவர்கள் சாதிப்பெயர் சொல்லி ஏளனம் செய்வது என ஒரு குழந்தையைக் கூட வதைத்த சாதி பெரியவர்களை என்ன செய்திருக்கும்?

இணுவில் உணவகமொன்றில் தந்தையாருடன் மேசையில் உணவருந்திய காரணத்தால் தந்தைக்கு விழுந்த அடிகளும் ஆடையவிழ்ப்பும் நாள் முழுதும் விறகு கொத்துவதுமாகத் தண்டனை கிடைக்கிறது. அதை உடனிருந்து பார்த்ததுமின்றி நீரின்றி உணவின்றி அந்த விறகுகளை இச்சிறுவன் ஓடியோடி அடுக்கவும் வேண்டும். இதைப் போல பல சம்பவங்களை ஆதிக்கசாதியர்களின் வெறித்தனத்தை எதிர்கொண்ட சம்பவங்கள்.சுயதொழிலும் பொருளாதாரமும் நிலமும் கொண்டவராக வாழ்ந்தாலும் சாதி என்பது அடங்கிப் போகச்சொல்கிறது.

தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆளானதை இன்னுமொருவருக்கு நடந்தது,அறிந்தது என இல்லாமல். தன் வாழ்விலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகியவற்றை எழுதியிருக்கிறார் சிவா சின்னப்பொடி. பொருளாதார ரீதியாகவும் சொந்தக்காலில் நின்ற போதும் சாதி என்பது காரணமாக கோயிலில் நுழையவோ பொதுக்கிணற்றில் நீரள்ளவோ படிக்கவோ கல்வீடு கட்டவோ மேலாடை- காலணி- புதிய ஆடைகளை உடுத்தவோ கூடாது என மிரட்டப்படுவதும் கொல்லப்படுவதும் நடக்கிறது. சாதிய மனிதர்கள் எவ்வளவு குரூரமானவர்கள்!

தந்தையாரின் பெயர் தான் சின்னப்பொடியன். பிறப்புச் சான்றில் பெயர்களை எழுதுவதும் திட்டமிட்ட வகை. அதைப்போல சாதி என்ற இடத்தில் 1957ல் பாராளுமன்றத்தில் சமூகக்குறைபாடுகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு அது இனம் என மாற்றப்படுகிறது. அப்போது இலங்கைத் தமிழர் எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆனால் சாதியப்படியைப் பொறுத்து இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ், இலங்கைத் தமிழன் என்று வேறுபடுத்தி எழுதி வித்தியாசப்படுத்தியதும் நடந்தது. பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் இவ்வாறான இழிவுகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையாவின் தீண்டாமைக்கு எதிரான செயற்பாடுகளும் சமூக முன்னேற்ற வேலைகளும் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது இவர் போன்றவர்களை எமக்கு ஏன் யாரும் சொல்லித்தரவில்லை என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இந்நுாலாசிரியர் மூன்று மாதங்கள் பயின்ற திண்ணைப்பள்ளிக்கூடமும் அதன் ஆசிரியர் கந்தமுருகேசனார் கற்பித்த முறையும் மிகுந்த ஈர்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. முதல் நாள் அழுத சிறுவனை துாக்கி மடியில் வைத்த காரணத்தால் வெள்ளாளர்கள் அடுத்த நாள் தங்களது பிள்ளைகளை அங்கு படிக்க அனுப்பவில்லை. ஆனால் இவருக்கு அடுத்த நாளும் தனியாக இருத்தி வைத்துக் கற்பிக்கிறார்.

கந்த முருகேசனாரின் கேள்விகளும் அணுகுமுறைகளும் இயற்கையோடிணைந்த வாழ்வு முறையும் தொடர்ந்து ஏன் நம்மிடமில்லாமல் போனது? இவரைப் போன்றவர்கள் பற்றிப் பரவலாக எம் காலத்தில் அறியமுடியவில்லை. யாழ்ப்பாணத்துப் புலவர்களையும் சைவப் சமயப்பெருமைகளையும் படிப்பித்தது போல, சமுதாய மாற்றத்திற்காக உழைத்தவர்களைப் பற்றிய பாடங்கள் வேண்டும். இக்கொடுமைகளும் போராட்டங்களும் இலக்கியத்தின் வழியாகவே வெளிக்கொண்டு வரப்படுகின்றன. நினைவழியா வடுக்கள், அகாலம் (சி.புஷ்பராணி), தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் (யோகரட்ணம்) போன்ற புத்தகங்களும் கே.டானியல்,டோமினிக் ஜீவா போன்றவர்களது எழுத்துகளுமாக வரலாறில் பதிவாகின்றன.

யாழ்ப்பாணச் சாதியடுக்கு முறைகள்,1961 லிருந்து 1964 வரை இங்கு நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப்போராட்டங்களும் அவற்றின் பலன்களும் எனப் பல சம்பவங்களும் அவை தொடர்பான பெயர்களுமென ஒரு பதிவாக இதுவொரு கவனிக்கப்படவேண்டிய புத்தகம். மேலும் சாதிய ஒடுக்குமுறைகளுடன்; சிவாசின்னப்பொடியவர்களது அவதானிப்பில் அப்போதைய அரசியல் நிலமைகள், மொழிப்போராட்டங்கள், இனக்கலவரம், பற்றிய விடயங்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதங்களோடு துணிச்சலாக நின்று சண்டை போடுவதும் போராடுவதும் கல்வியில் கவனங்கொள்வதுமான அதே வேளையில் மெதுமெதுவாகச் சில சட்டங்களும் வருகின்றன. ஆனாலும் அவை இன்றுவரை வெவ்வேறு வடிவங்களாக மறைந்து கிடக்கின்றன. தீண்டாமை என்பது வேறுவேறு வழிகளாக; தேர் இழுக்கவும் காணி-நிலங்கள் வாங்கவும் கல்யாணத்திற்குமாக… எனப் பல விதமாகவும் தொடர்கின்றது.

கம்யூனிஸ்ட் தோழர்களும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்களும் ஏற்படுத்திய மாற்றங்களும் பொன்.கந்தையா பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகளும் ஓரளவுக்குச் சாதியக் கொடுமைகளை ஒழித்ததைப் பதிவு செய்துள்ளார்.

ஆனாலும் உண்மையாகவே மக்கள் மனந்திருந்தினார்களா?

சாதிய ஏற்றத்தாழ்வின் அநாகரிகம் பற்றிய பிரக்ஞையுடன் தான் தமிழீழப்போராட்டத்தைச் செய்தனரா?
சாதிப்பெயர் சொன்னாலே பச்சை மட்டையடி என்ற பயம் இருந்ததேயொழிய மனதளவில் அது உள்ளே பதுங்கியிருந்தது.

இல்லையென்றால் இப்போது இன்னும் அது இளையவர்களிடம் கூட எப்படி நிலை கொண்டிருக்கிறது?

புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த நாடுகளிலும் ஃபேஸ்புக்கில் கூட சாதிப்பெயர் சொல்லித் திட்ட எப்படி முடிகிறது?

கேள்விகளுக்கும் சுயவிசாரணைகளுக்கும் ’நினைவழியா வடுக்கள்’ போன்ற புத்தகங்கள் இன்னுமின்னும் வரவேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More