Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வாழும்போதே பலராலும் கொண்டாடப்பட்ட ஆளுமை கி.ரா! | முருகபூபதி

வாழும்போதே பலராலும் கொண்டாடப்பட்ட ஆளுமை கி.ரா! | முருகபூபதி

24 minutes read

மழைக்கும்   பாடசாலைப்பக்கம்   ஒதுங்காதிருந்து       பல்கலைக்கழக விரிவுரையாளரானவர் !!

                                                                                முருகபூபதி

கலை, இலக்கிய, சினிமா, அரசியல் துறைகளைச்சேர்ந்தவர்களாலும்  வாசகர்கள், இலக்கிய மாணவர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட  கி. ரா என்ற  கி. ராஜநாராயணன்  மறைந்தார் என்ற செய்தி கவலையை தந்தாலும்,  அவர் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, நூறாண்டுகளை அடைவதற்கு இன்னமும் ஒருவருடம் இருக்கும் நிலையில் தமது 99 வயதில் எம்மிடமிருந்து விடைபெற்றிருப்பது சற்று தேறுதலைத்தருகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் அவரது பிறந்த தினத்தின்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்கூறியபோது, அவரது அருமை மனைவி கணவதி அம்மாவும் இருந்தார்கள். அந்த அம்மையாரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்.

இருவரையும் முதல் முதலில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் ஒரு கோடை காலத்தில்தான் அவர்களின் இடைசெவல் கிராமத்து இல்லத்தில் சந்தித்தேன். 

அவரது கிடை குறுநாவலை 1970 களில்  ஶ்ரீமதி லக்‌ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தமது வாசகர் வட்டத்தின் வெளியீடாக வரவாக்கிய  அறுசுவை நூலில் படித்திருந்தேன்.

அன்று முதல் எனது பிரியத்திற்குரிய படைப்பாளியானவர் கி.ரா.  அவர்களைத் தேடிச்சென்ற அனுபவம் பசுமையானது.

சிலவருடங்களுக்கு முன்னர் பிறந்ததின வாழ்த்துக்கூறியவாறு பேசியபோது,  “  உங்கள் வயசு என்ன..?  “ என்று கேட்டார்.

சொன்னேன்.

உடனே அவர், “  சரிதான் இன்னுமொரு திருமணம் செய்யிற வயசுதான் “   என்றார். இவ்வாறு கேலியும் கிண்டலுமாக பேசவல்லவர் அவர்.  திருநெல்வேலி பிராந்திய எழுத்தாளர்கள் அனைவருக்கும் மட்டுமல்ல பொதுவாக அனைத்து எழுத்தாளர்களுக்குமுரியது இந்த இயல்பு. 

நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில்  அவரது             “ கிடை  “ யைத் தொடர்ந்து,  தாமரை இதழில்  அமெரிக்கா   மேற்கொண்ட   ஆக்கிரமிப்பு  தொடர்பாக   வியட்நாம்  என்ற  தலைப்பில்  அவர் கிராமப்புற    விவசாயியின் பார்வையில் எழுதிய  கட்டுரையை   வாசித்தேன்.    

 தமிழகம்   சென்றால்     கி.ரா.    என்று இலக்கியவட்டாரத்தில்   அறியப்பட்ட  இந்த கரிசல்  இலக்கியவாதியை     சந்திக்கவேண்டும்  என்று   விரும்பியிருந்தேன். 

எனது     விருப்பம் 1984   இல்தான்   நிறைவேறியது.  அவர்  திருநெல்வேலிக்கு அருகாமையில்    கோவில்பட்டி      என்ற     ஊரில்  இடைசெவல்  விவசாய   கிராமத்தில்    வசிப்பதாக  அறிந்து  எனது  ஆவலை      திருநெல்வேலியில்   வசித்த எமது  தந்தைவழி     உறவினரும்     மூத்த    படைப்பாளியும்     பாரதி இயல்   ஆய்வாளருமான   சிதம்பர  ரகுநாதனின் துணைவியார்      ரஞ்சிதம்  அவர்களிடம்     தெரிவித்தேன்.

இடைசெவல்     என்றதும்  “  யார்… கி. ராஜநாராயணனையா…? முன்பே  தெரியுமா?”    எனக்கேட்டார்.

 “தெரியாது.   அவரது   எழுத்துக்கள்     எனக்குப்      பிரியமானது.      இவ்வளவு  தூரம்       வந்திருக்கின்றேன்.   அவரையும்   பார்க்கவிரும்புகின்றேன்”  எனச்சொன்னேன்.

ரஞ்சிதம்    என்னை  திருநெல்வேலியில்   பஸ்  ஏற்றிவிட்டார்.     

வாய்  இருந்தால்  வங்காளமும்  போகலாம்தானே?

பஸ் நடத்துனரிடம்  என்னை  இடைசெவலில் இறக்கிவிடுங்கள்  எனச்சொல்லிவிட்டு      அடிக்கடி      அவரிடம்      இடைசெவல்     வந்துவிட்டதா?  எனக்கேட்டபடி      இருந்தேன்.

“ ஊருக்குப்புதுசு”     என்று    நடத்துனருக்குத்தெரிந்துவிட்டது. 

“ சிலோனிலிருந்து வர்ரீங்களா? உங்கட பேச்சுத்தமிழ்  சொல்லுது.”  என்றார். இலங்கையில்     1983 இல் இனக்கலவரம்  நடந்த பின்னர்  இலங்கைத்தமிழர்கள் மீது   தமிழகத்தில்  ஆழ்ந்த      அனுதாபம் இருந்தகாலம்.

நல்லவேளையாக அந்த  நடத்துனருக்கும் ராஜநாராயணனைத்   தெரிந்திருக்கிறது. ஒரு கிராமத்துக்குச்செல்லும்  பாதையை  காண்பித்து என்னை      இறக்கிவிட்டார்.

“வழியில்    எவரைக்கேட்டாலும்      கி.ரா.வின்      வீட்டைக்காண்பிப்பார்கள்  சார்” என்றார்     முகம்மறந்துபோன  பெயர்                 தெரியாத     அந்த  பஸ் நடத்துனர்.

கருங்கல்  பதித்து     தார்போடாத      மண்வீதியில்   நடந்தேன்.     வழியில்  தென்பட்டவர்களிடம்   கேட்டேன். கி.ரா.வின்  சின்னஞ்சிறிய      அந்த  வீட்டைக்கண்டுபிடிப்பதில்      சிரமம்      இருக்கவில்லை.

வீட்டின்      கதவு     திறந்திருந்தது.       மெதுவாகத்தட்டினேன்.      உள்ளே  வாழைக்காய்   பஜ்ஜியின்      வாசம்      வந்தது.  வீட்டின்  உட்புறச்சுவரில்  இரசிகமணி    டி.கே.  சிதம்பரநாதரின்   பெரிய      உருவப்படம்  காட்சியளித்தது.      ஒரு      அம்மா                          எட்டிப்பார்த்தார்கள்.

 “கி.ராஜநாரயாணன்       அவர்களை      பார்க்கவந்திருக்கிறேன்”    என்றேன்.

 “உங்களைத்தான்      பார்க்க     யாரோ      வந்திருக்காங்க…”                என்று    அந்த அம்மா     குரல்   கொடுத்தார்கள்.

அரைக்கைச்சேர்ட்டை     அவசரமாக    அணிந்துகொண்டு                வந்து வரவேற்றவர்   –  தான்தான்      ராஜநாராயணன்    என்று அறிமுகப்படுத்திக்கொண்டு      உள்ளே     அழைத்தார்.

இலங்கையிலிருந்து  நான்  திடுதிப்பெனஅவரைப்பார்க்க 

வந்ததையிட்டு    வியந்தார்.

 முன்னறிவிப்பின்றி வந்துவிட்டேன் அதற்குமுதலில்                               மன்னிப்புக்கோருகின்றேன்.      எனச்சொன்னேன்.

 “நான்  என்ன  பெரிய  அரசியல்வாதியா?   முன்னறிவிப்புச் சொல்வதற்கு.  என்ன யோசிக்கின்றேன்    தெரியுமா?   தொலை    தூரத்திலிருந்து  வருகிறீர்கள்.  சிலவேளை  என்னை   சந்திக்கமுடியாதுபோயிருந்தால் ஏமாற்றத்துடன்                                                திரும்பியிருப்பீர்களே……      நல்லவேளை      இன்று     நான்                 வீட்டிலிருக்கின்றேன்.” என்று   சொல்லிவிட்டு      சில                              கணங்கள்     என்னை  ஆச்சரியத்துடன்      நோக்கினார்.

 “உங்கள்      எழுத்துக்கள்     எனக்கு    மிகவும்     விருப்பமானது.    கிடை  குறுநாவல்      படித்த     நாள்     முதலாக     உங்கள்                  படைப்புகளை  தேடித்தேடி     படிப்பது      எனது     வழக்கம் “ 

     என்றேன்.

இலங்கையில்  1983    இல்    நடந்த     வன்செயல்கள்      பற்றிக்கேட்டார்.

அதற்கெல்லாம்   அரசியல்வாதிகளும்      காடையர்களும்தான்     காரணம் என்று       சொன்னவுடன்,  –      என்ன      சொன்னீர்கள் ?     திரும்பவும்  சொல்லுங்கள்                   என்றார்.      மீண்டும்      காடையர்கள்      என்றேன்.

உடனே      உள்ளே     சென்று      ஒரு    காகிதம்     எடுத்துவந்து     காடையர்  என்ற     சொல்லை    எழுதிவிட்டு     அதற்கு  அர்த்தம்  கேட்டார்.

                   “அந்த     வார்த்தை     தமிழ்நாட்டில்    புழக்கத்தில்               இல்லை.  குண்டர்கள்     என்பார்கள்.”

அவர்களுக்கு     எங்கள்      நாட்டில்      தீயசக்திகள் –    வன்முறையாளர்கள்  என்று     நல்ல     தமிழ்    அர்த்தமும்      இருக்கிறது   “   என்றேன்.

தாம்  சொல்அகராதி  தயாரித்துவரும்  தகவலைச்சொன்னார். 

இலங்கையின்  மூத்த    படைப்பாளி   மு. தளையசிங்கம்  பற்றிக்கேட்டுவிட்டு,    மீண்டும் உள்ளே சென்று     சக்தி    என்ற   மாத இதழை     எடுத்துவந்து     காண்பித்தார்.

இலங்கையில்   கைலாசபதி ,  சிவத்தம்பி      என்றெல்லாம்  பல  விமர்சகர்கள்      இருப்பதாக     அறிந்ததுண்டு.    ஆனால்   அவர்களை     நான்  படித்ததில்லை.    இருந்தாலும்  தளையசிங்கம்     என்று      ஒருவர்….. கொஞ்சம்      கண்களை    நுழைச்சுப்பார்த்தேன்.      படிக்கும்போது,  ஒரு சுயம்பான  சிந்தனையாளர், என்று     உணரமுடிந்தது.     அதனால்    அவரது      கட்டுரையை      இந்த     சக்தி     இதழில்     பிரசுரிக்கச்செய்தேன்.  “ என்றார்    கி.ரா.

மனைவியை     அழைத்து      அறிமுகப்படுத்தினார்.  அந்த அம்மா  வாழைக்காய்   பஜ்ஜியும்    காப்பியும்      தந்து                         உபசரித்தார்.     கி.ரா. உற்சாகமாகவே  உரையாடினார்.  தமக்கு   பெண்குழந்தைகள்    இல்லை.  பிறந்தவர்கள்   ஆண்கள்தான்  “     

என்றெல்லாம்   வெளிப்படையாகவே  பேசினார். எனது   முகவரியை      எழுதிக்கேட்டு      வாங்கும்பொழுது  தனக்கு     ஆங்கிலம்     தெரியாது,   அதனால்    முகவரியை ஆங்கிலத்தில்  எழுதும்பொழுது   தனித்தனி     எழுத்துக்களாக      எழுதுங்கள்     என்றார்.

அவருடைய   படைப்பிலக்கியத்திலிருந்த  எளிமையை அவரது  பேச்சிலும்     காணமுடிந்தது.     தனது      பிஞ்சுகள்      நாவலை கையொப்பம் வைத்து  தனது      நினைவாக    வைத்திருக்குமாறு    தந்தார். அவருடைய புகைப்படம்  ஒன்றையும்  கேட்டு  வாங்கிக்கொண்டேன். 

என்னை பஸ்  தரிப்பிடம் வரையும் அழைத்துவந்து வழியனுப்பினார். தாயகம் திரும்பியதும் வீரகேசரி வாரவெளியீட்டில், அவர் தந்த படத்துடன் விரிவான கட்டுரையை எழுதினேன். அதன் நறுக்கை இடைசெவலுக்கு தபாலில் அனுப்பினேன். 

அக்காலப்பகுதியில் அவர் தமிழகத்திலும் இலங்கையிலும் பிரபலம் பெற்றிருக்கவில்லை. 

அவரது வாழ்க்கையிலிருந்த எளிமை, அவரது எழுத்திலும் வெளிப்பட்டது.  தொடர்ந்து  எழுதினார்.  வாசகர்கள்,  எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இதழாளர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல் வாதிகள் அனைவரதும் கவனத்தை மாத்திரமின்றி புதுவை பல்கலைக்கழக நிருவாகத்தினதும் கவனத்தை பெற்றார்.

அதனால், புதுவை பல்கலைக்கழகம் அவரை வருகை தரு விரிவுரையாளராக வரவேற்று கொண்டாடியது. 

1990 ஆம் ஆண்டு சென்னையில்  இலக்கிய விமர்சகர் தி. க. சிவசங்கரனை  ( தி. க.சி ) நானும் மல்லிகை ஜீவாவும் சந்தித்தபோது, அவர் சொன்னதுதான் தற்போது நினைவுக்கு வருகிறது. 

 “ அறுபது  வயதில் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவோம். ஆனால், கி.ரா அவர்கள் அறுபதிற்குப்பின்னர்தான் வருகை தரு விரிவுரையாளராகியிருக்கிறார்.

ஆரம்பப்பாடசாலைக்கல்வியையும் முழுமையாக பூர்த்திசெய்யாத கி. ரா.  முன்னர் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒன்று இருக்கிறது.

 “ மழைக்கும் நான் பாடசாலைப்பக்கம் ஒதுங்காதவன். அவ்வாறு ஒதுங்கியிருந்தாலும், மழையைத்தான் ரசித்திருப்பேன். பாடசாலையை அல்ல !  “ 

அன்றைய முதல் சந்திப்பின்போது, அந்தப்பாதையால் வருகையில் கயத்தாறில் நான் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடம் பற்றி குறிப்பிட்டேன்.  அங்கே நின்ற அந்த குறுநில மன்னனின் சிலை  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தோற்றத்திலிருந்தது. 

அந்தச்சிலை அங்கே வந்த கதையை கி.ரா. சொன்னார்.  அன்றுதான் அவர் சிறந்த கதை சொல்லி என்பதையும் அறிந்துகொண்டேன். 

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு, அவனது உடல் அடக்கமானதன்பின்னர்,  கயத்தாறை   கடந்து  செல்வோரும் வருவோரும்  ஒரு     கல்லை எடுத்து   அந்த     இடத்தில்     போட்டுவிட்டு  அஞ்சலி     செலுத்துவார்களாம்.       காலப்போக்கில்      ஒரு     பெரிய     கற்குவியலே அங்கு     தோன்றிவிட்டது.

 நடிகர்திலகம்  சிவாஜிகணேசன்  வீரபாண்டிய கட்டபொம்மனாக    நடித்த பந்துலு    தயாரித்து     இயக்கிய    படம்     வெளியாகி    வெற்றிகரமாக    ஓடும் வரையில்தான்     அந்த    மக்கள்    எழுப்பிய    கற்குவியல் நினைவுச்சின்னம்      இருந்திருக்கிறது.

 பின்னர், இரவோடிரவாக     யாரோ      லொறிகளில்      வந்து அப்புறப்படுத்திவிட்டார்கள்.

 சில     நாட்களில்     அங்கே      ஒரு     கட்டபொம்மன்      சிலை தோன்றியிருக்கிறது.

 அது     கட்டபொம்மனைப்      போலவா      இருக்கிறது?      அந்த     வேஷம் போட்ட     சிவாஜி     கணேசனைப்    போலத்தான்    இருக்கிறது    என்று          கி. ரா. சொன்னார். 

 இதுவரையில் பல   பதிப்புகளைக்கண்டுவிட்ட  அவரது கரிசல் காட்டுக்கடுதாசி      நூலில் –  வீரனுக்கு   மக்கள்     எழுப்பிய    ஞாபகார்த்தம்…   என்ற  தலைப்பில்    தமது    ஆதங்கத்தை    அவர்    விரிவாகப்பதிவு    செய்துள்ளார்.  இந்த நூல் அனைந்திந்திய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது. 

1799   ஆம்     ஆண்டு      பிரித்தானிய    மேஜர்     பானர்மேனின் உத்தரவுக்கு     அமைய     தனது    கழுத்தில்     தானே தூக்குக்கயிற்றை மாட்டிக்கொண்டு உயிர்துறந்த    அந்த    வீரனுக்கு     அவன்     மறைந்த  பின்னர்      அந்தப்புளியமரமும்      பட்டுப்போனபின்னர்,    ஊர்மக்கள் கற்களைப்போட்டு    குன்று     போன்ற     பெரிய     கற்குவியலையே நினைவுச்சின்னமாக   எழுப்பியிருந்தபோது தமிழ்  சினிமாவில் தோன்றிய     கட்டபொம்மன்      வந்து அள்ளிச்சென்றுவிட்டானே என்பதுதான்   கி. ராஜநாராயணனின்    தார்மீகக்கோபம்.

அவர் – தமது     கரிசல்காட்டு    கடுதாசியில்    இப்படி   எழுதுகிறார்:-

 நடிகர்திலகம்       சிவாஜிகணேசனுக்கு –  கட்டபொம்மனைத்     தூக்கிலிட்ட இடத்தில்     அவனுக்கு     ஞாபகார்த்தமாக      ஒரு     சிலை     எழுப்பவேண்டும்  என்ற    நினைப்பு      வந்தது.     இது ரொம்ப     வரவேற்க     வேண்டிய – பாராட்டப்படவேண்டிய       காரியம்.      ஆனால்  –  மக்கள்    தங்களால்     இயன்ற ஒரு     ஞாபகார்த்தத்தை      ஒவ்வொறு      கல்லாகச்சேர்த்து   வீரபாண்டியனுக்கு      எழுப்பியிருந்தார்களே.   அதை     ஏன்     அழித்தார்கள்…?

 வேறு     ஒரு நாட்டில்      இப்படி     ஒரு காரியம்    நடக்குமா…?    மக்கள்   அதற்குச் சம்மதிப்பார்களா…?

 சத்தம்     காட்டாமல்    நடந்து     முடிந்துவிட்டது    இங்கே… பாஞ்சாலங்குறிச்சி      கோட்டையை     நொறுக்கி      இடித்து      தரைமட்டமாக்கி   அதை      இருந்த      இடம்      தெரியாமல்     ஆக்கிய     வெள்ளைக்காரனுடைய காரியத்துக்கும்       இதற்கும்   ரொம்ப  வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை   எனக்கு.

  ஒரு    சினிமா     நடிகரினதும்     ஒரு    இலக்கியவாதியினதும்     வேறுபட்ட சிந்தனைகளை     ஒரு     கட்டபொம்மனில்     நாம்    பார்க்கின்றோம்.

அவரது கிடை      குறுநாவலைத்தொடர்ந்து    பிஞ்சுகள் –   கோபல்ல  கிராமம் – கோபல்லகிராமத்து  மக்கள் –    கதவு –    வேட்டி –    அப்பாபிள்ளை  அம்மாபிள்ளை –     கொத்தைப்பருத்தி  –    தாத்தா    சொன்ன    கதைகள் – கிராமியக்கதைகள் –     தமிழ்நாட்டு      நாடோடிக்கதைகள் –     வட்டாரச்சொல்  அகராதி –     மாந்தருள்     அன்னப்பறவை     (இரசிகமணி  டி.கே.சி  பற்றியது) கரிசல்காட்டு     கடுதாசி –      கி. ராஜநாரயணன்  கடிதங்கள்    முதலான  நூல்களையும் படித்தேன்.       

கழனியூரானுடன்   கி.ரா.  இணைந்து  எழுதிய மறைவாய்ச்சொன்ன  கதைகள்     நூலை  படித்தால்       வாய்விட்டுச்சிரிக்கலாம்.  பாலியல்      சார்ந்த      கதைகளை               இப்படியும்      பக்குவமாகச்சொல்ல முடியும்    என்று நிரூபித்தவர். 

 புதுவை பல்கலைக்கழகத்தில் நாட்டார்      இலக்கியத்தின்      விரிவுரையாளராக    பல ஆண்டுகள்      பணியாற்றிய கி.ரா, குறித்து மற்றும் ஒரு தகவலையும் இங்கே பதிவுசெய்கின்றேன். 

பொதுவாக       இதழ்கள்    –   வெகுஜன  அமைப்புகள்     படைப்பாளிகளுக்கு     தனிநபர்களுக்கு      விருதுகள்   – பணப்பரிசில்கள்    வழங்கி    பாராட்டி  கௌரவிப்பது     பற்றி     அறிந்திருக்கின்றோம்.      ஆனால்     ஒரு  இலக்கியவாதி      ஒரு      இலக்கிய      இதழின்     சேவையை  கவனத்தில்கொண்டு      விருது     வழங்கியதை     அறிந்திருக்கின்றோமா?

கி.ரா.    குமுதம்      குழுமத்தின்     தீராநதி     மாத     இதழுக்கு     விருதுவழங்கி  அந்த     இதழைப்பாராட்டி      கௌரவித்தார்.     இலங்கை  இலக்கிய  உலகத்தின் மீதும்     அவருக்கு     அக்கறை    இருந்தது.

இலங்கை     மலையக    படைப்பாளி    மு. சிவலிங்கத்தின்    ஒப்பாரிக்கோச்சி      என்ற      சிறந்த      சிறுகதையை     படித்திருந்த    கி.ரா. அதனை     தீராநதியில் தனது     விசேட    குறிப்புடன்     பிரசுரிக்க  ஆவன செய்தார்.

அவுஸ்திரேலியா     மெல்பனில்   கடந்த ஆண்டு இதே மே  மாதம் மறைந்த    எனது    நண்பர்  சண்முகம்  சபேசனும்     தீவிரமான     வாசகர்.  அவருக்கும்  கி.ரா   வின்    படைப்புகளில் ஆர்வம்.         புதுச்சேரியில்  கி.ரா.வை  அவரும் அவரது மனைவி மலரும்   நேரில்   சந்தித்து   உரையாடித்திரும்பினர்.

அந்தச்சந்திப்பு   பற்றியும்  கி.ரா.  திராநதியில்   எழுதியிருக்கிறார்.

2008  ஆம்  ஆண்டு  ஜனவரியில் தமிழகம்    சென்றபொழுது   சென்னையில்  நடந்த      புத்தகச்சந்தைக்கு    வந்தேன்.   அன்றுதான்    இறுதிநாள்.  முதல்நாள்   நள்ளிரவுதான்      சென்னையை  வந்தடைந்தேன்.     அன்னம்  பதிப்பகத்தின்    ஸ்டோலுக்குச்சென்று  கி.ரா.வை   விசாரித்தேன்.  அவர் அச்சமயம் அங்கில்லை.  அன்று மாலை      இராமேஸ்வரம்    செல்லும்      பயண      ஒழுங்கிருந்தமையால் ஒரு  காகிதத்தில்   எனது   வருகையையும்  குறிப்பிட்டு 

கைத்தொலைபேசி      இலக்கத்தையும்     எழுதி      அன்னம் புத்தக ஸ்டோலிலிருந்தவரிடம்     கொடுத்துவிட்டுப்     புறப்பட்டேன்.

எமது  வாகனம் இராமேஸ்வரத்துக்கு  மாலை நான்கு  மணிக்குப்புறப்பட்டது.

செங்கல்பட்டை      கடக்கும்   வேளையில்      கி.ரா.     தொடர்புகொண்டு  உரையாடினார்.     இயலுமானால்      புதுச்சேரிக்கு     வருமாறும்  கேட்டுக்கொண்டார்.     ஆனால்     நேர     அவகாசம்    இல்லாதமையால்   அவரை மீண்டும்     சந்திக்க   முடியவில்லை.

மீண்டும் என்றாவது     ஒருநாள்   அவரைச்சந்திப்பேன்     என்ற    நம்பிக்கை  அவரது மறைவுடன் அற்றுப்போய்விட்டது.

இந்தப்பதிவில்  நான்  முக்கியமில்லை.   நாம்  வாழ்ந்த காலத்தில்  இப்படியும் ஒரு      எளிமையான  மூத்த     இலக்கியவாதி     கரிசல் மண்ணை      ஆழமாக     நேசித்த      ஒருவரைப்பற்றி     தெரியாதவர்கள்  தெரிந்துகொள்ளவேண்டும்      என்பதற்காகத்தான்     மீண்டும்    மீண்டும்  பதிவுசெய்கின்றேன்.     

 ஒருசந்தர்ப்பத்தில் ஏழை விவசாயிகளுக்கான போராட்டத்தில்  ஈடுபட்டு  சிறைவாசமும்    அனுபவித்தவர்தான்  கி.ரா.

தொழிலாள, விவாசாய ,  பாட்டாளி     மக்களின்     உரிமைகளுக்காக    அவர்  குரல்கொடுத்த    போதிலும்     தனது    படைப்புகளில்     பிரசாரவாடையே  வந்துவிடாமல்      அழகியலைப்பேணியவர்.      

அவரது     எழுத்துநடை   யதார்த்தமானது.      எங்கள்     நெஞ்சோடு    உறவாடுவது.

அவுஸ்திரேலியா     குவின்ஸ்லாந்து      மாநிலத்தில்     வதியும்     ஒரு  ஈழத்துப்பெண்மணி      கி.ரா.     எழுதிய     வேலை  – வேலையே  வாழ்க்கை  என்ற     சிறுகதையை      தன்னால்      இன்றளவும்      மறக்கமுடியவில்லை  எனச்சொன்னார்.

என்னால்       அவரது     கதவு     கதையை      மறக்க                     முடியவில்லை.     இப்படி  பல     வாசகர்களினால்             மறக்கமுடியாத     படைப்பாளி.

கி.ரா.வின்      கிடை  குறுநாவல்       அமஷன்குமாரின்       இயக்கத்தில்      ஒருத்தி      என்ற    பெயரில்  திரைப்படமாகியுள்ளது. இந்திய சாகித்திய அகதாமி விருது,  தமிழக அரசின் விருது, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 

அவர் வாழ்ந்த காலத்தில்  எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய மாணவர்கள் மட்டுமின்றி,  கலை இலக்கிய அரசியல் பிரபலங்களும்   அவரைத்தேடிச்செல்வது வழக்கம்.

இவ்வாறு பலதரப்பட்டவர்களாலும் தொடர்ந்து கொண்டாடப்பட்ட கி. ரா. அவர்களுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன். 

—0—

letchumananm@gmail.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More