Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் எஸ்.பொ எனும் கலகக்காரனுக்குப் பிறந்தநாள்! | ப. தெய்வீகன்

எஸ்.பொ எனும் கலகக்காரனுக்குப் பிறந்தநாள்! | ப. தெய்வீகன்

3 minutes read

யாழ் நிலத்துப்பாணன், எழுத்துலகின் கலகக்காரன், நற்போக்கு இலக்கிய முகாமின் வீரதுரந்தரன் – எஸ்பொவின் 89 ஆவது பிறந்தினம் இன்றாகும். ஈழத்து இலக்கிய வீச்சுக்கென தனிச்சவுக்கொன்றை செய்து, அதன் இனிய வலிகளை தனது எழுத்தெங்கும் தழும்புகளாக பதித்து சென்றுவிட்ட ஆளுமை. இயல்புவாத படைப்பாளுமைகளுக்கான தனியான திமிரை இலக்கிய உலகுக்கு இடித்துக்கூறிவிட்டுப்போன எழுத்தூழியன்.

எஸ்பொவின் படைப்புக்கள் பேசப்படும்போதெல்லாம் அவரது எழுத்துக்களை இந்திரியமானவை என்றொரு குவளையில் போட்டுவைத்துக்கொண்டு கவனப்படுத்துவதும், அதன் ஊடாக அவருடைய வியாபித்த எழுத்தாளுமையை ஒரு குறுகிய – நீக்கலின் – வழியாக பார்க்கத்துணிவதும் எஸ்பொவினை விதந்துரைப்பவர்களுக்கே பழக்கப்பட்டுப்போனதொரு விடயம். அந்தக்குவளைக்குள் எஸ்பொவின் பிற்காலத்துக்கு அரசியல் நிலைப்பாடுகளையும் ஊற்றி நீர்த்துப்போகச்செய்வதும் இன்னும் பலரது விருப்பத்துக்குரிய விமர்சன ஒழுங்குகள். இது குறிப்பாக தறுக்கணித்துக்கிடக்கும் இலக்கிய வட்டங்களில் மிக அதிகம்.

எஸ்பொவின் எழுத்துலகம் இந்திரிய எழுத்தக்களால் நிறைந்ததுதான் என்று முன்னிலைப்படுத்துவதற்கு பலராலும் முன்வைக்கப்படுகின்ற படைப்பு அவரது “சடங்கு”.

நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு குடும்பப்பெண் சுய இன்பம் காண்பதை தனது எழுத்துக்களில் வைத்தவர் என்றும் பிள்ளைகளினால் செறிந்துபோயிருக்கும் குடும்பமொன்றில் தம்பதியினர் கலவிகொள்வதற்கு திருகுப்படுகின்ற பாடுகளையும் எழுதியவர் என்றும் “சடங்கு” தொடர்பில் இன்றுவரைக்கும் பல சேறடிப்புக்கள் நோகடிப்புக்கள் உள்ளன. மறுபக்கத்தில், “அந்தக்காலத்திலேயே அவர் அவற்றையெல்லாம் எழுதினாரே” – என்று வியப்பதின் ஊடாக அந்தப்புள்ளிகளை மாத்திரம் வேறு திசையில் சொல்லிக்காட்டுபவர்களும் பலர்.

ஆனால், சடங்கில் செல்லபாக்கியம் ஆச்சி வழியாக எஸ்பொ உருவாக்கியிருக்கும் பெண் ஆளுமை செறிவின் அளவுக்கு நாற்பது வருடங்களாகியும் இன்றுவரைக்கும் ஒரு பாத்திரம் அந்த மண்ணிலிருந்து அல்லது அந்த மண்ணைச்சார்ந்து உருவாக்கப்படவில்லை என்று அடித்துச்சொல்வேன்.

“சடங்கு” வாசிப்பின்போது செல்லபாக்கியம் ஆச்சி எம்மைப்பின்தொடருகின்ற ஆக்ரோஷமானதொரு நிழல். சடங்கின் முடிவில் அவள்தான் எமக்குள் வாழும் மிகப்பெரிய நிஜம். யாழ்ப்பாண சமூகத்தில் பெண்களின் வகிபாகம் குறித்த நுண்பார்வையுடன் வடித்தெடுக்கப்பட்டவள் செல்லபாக்கியம் ஆச்சி. அவளது ஒற்றைப்பார்வை முதற்கொண்டு ஒழுங்கை நடை வரைக்கும் அனைத்தையும் யாழ்ப்பாணத்தின் பெண் தலைமைத்துவ பண்பாட்டுக்கூறுகளாக “சடங்கு” அப்பட்டமாக அவிழ்த்துவைக்கப்படுகிறது.

பெரும்போர் முகிழ்ந்த பிற்கால கட்டங்களில், யாழ்ப்பாணம் உட்பட வட நிலத்திலிருந்து எத்தனையோ பெண் ஆளுமைகள் வரலாற்றில் தங்களது வகிபாகத்தினை வரைந்து சென்றிருந்தாலும் –

இவற்றுக்கெல்லாம் முன்பே, எஸ்பொ பன்முகப்பார்வைகொண்ட பேராளுமையாக செல்லபாக்கியம் ஆச்சியை எங்களின் முன்னிறுத்தினார்.

குலைந்துபோன குடும்பமொன்றில் படித்திருக்கும் செந்தில்நாதனை – எல்லோரும் வெறுத்து ஒதுக்கிப்போகும்போதும் அவனை – தூரநோக்கத்தோடு தனது மகளுக்கு கட்டிக்கொடுக்கிறாள் செல்லபாக்கியம் ஆச்சி. எழுபதுகளின் தமிழ் சமூக அமைப்பு முறையில் ஒரு பெண் எப்பேற்பட்ட தீவிர முடிவை லாவகமாக கையிலெடுக்கிறாள் என்று காண்பிக்கத்தொடங்கும் எஸ்பொவின் கதை கமரா, அதன் பின்னர் செல்லபாக்கியம் ஆச்சியின் வழியாகவே நாவல் முழுவதும் ஒளி பாய்ச்சுகிறது. மருமகன் செந்தில்நாதன் குடும்பத்தலைவன்தான் என்றாலும் அவனுக்கான முடிவெடுக்கும் மூளையாக செல்லபாக்கியமே அவனின் அனைத்து செல்களிலும் நொதித்துக்கிடக்கிறாள். அவன் கொழும்பிலிருந்து விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தால் அவன் என்னென்ன செய்யவேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பவற்றை உணர்த்தும் அசரீரியாக செல்லபாக்கியம் செந்தில்நாதனுக்குள் இருக்கிறாள். ஒரு குடும்பமாக தன் மகளையும் குழுந்தைகளையும் கைபிடித்துக்கொண்டு எங்கெங்கு போகவேண்டும். எவ்வளது தூரத்துக்கு போகவேண்டும் என்பதை வழிகாட்டுவதற்கும் செல்லபாக்கியம் ஆச்சியே செந்தில்நாதனுக்குள் ஒரு ஆவிபோல இயங்குகிறாள். ஆனால், மருமகனை அவள் முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கவில்லை. அவர் ஊருக்கு வருகின்றபோது கள்ளும் குடிப்பார். சீட்டுமாடுவார். இப்படியெல்லாம் கிழவியால் நீளக்கயிற்றில் மேய விடப்பட்ட மாடுபோல குடும்பத்துடனேயே அவர் லயித்திருப்பார்.

பாத்திரங்களை மாத்திரம் இயக்குபவளாக இல்லாமல், தன்னளவிலும் ஒரு இயந்திரமாகவே செல்லபாக்கியத்தை எஸ்பொ உருவாக்கியிருப்பார். செல்லபாக்கியம் ஆச்சியின் உடல், நாவலில் ஒருபோதும் ஓய்ந்திருக்காது. நித்திரைக்குப்போன பின்னரும் அவளது மூளை சிந்தித்தபடியிருக்கும். மகள் – மருமகள் தாண்டி பேரப்பிள்ளைகளை சுற்றி வட்டமிட்டபடியிருக்கும். அவளது முடிவுகள்தான் குடும்பமெங்கும் நிறைந்திருக்கும். இன்னும் இறுக்கமாக சொல்லப்போனால், மகளும் மருமகனும் கலவி கொள்வதுகூட ஆச்சியின் முடிவில்தான் தங்கியிருக்கும்.

இதுதான் யதார்த்தம். பெண் என்பவள் சமூக கட்டமைப்புக்குள் – ஒரு கட்டத்துக்கு பிறகு – அல்லது துணிச்சலாக தன்னை கொண்டுநடத்துகின்றபோது – எவ்வளவுதூரம் முடிவெடுக்கும் – அதிகார தரப்பாக மறைமுகமாக நிறைந்திருக்கிறாள் என்பதையும், அது யாழ் சமூகக்கட்டமைப்பில் எவ்வளவு யதார்த்தபூர்வமானது என்பதையும் செல்லபாக்கியம் ஆச்சியின் வழி எஸ்பொ வரைந்திருப்பார். ஆச்சியின் மகளிலும் அது சாதுவாக படரத்தொடங்கியிருப்பதை லேசாக காண்பித்திருப்பார்.

சம கால படைப்புக்களில் ஒரு பெண் பாத்திரத்தை மனதில் ஒட்டவைப்பதற்கு எவ்வளவோ கரணங்கள் எல்லாம் அடிக்கவேண்டியுள்ள நிலையில், எஸ்பொவின் செல்லபாக்கியம் ஆச்சி ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் என்றைக்கும் அழியாத தனிப்பெரும் கிழவி. சடங்கில் அவளைப்படிப்பதும் யாழ்ப்பாண சமூகத்தின் கலப்படமற்ற பெண் ஆளுமைகளின் மேன்மைகளை படிப்பதும் ஒன்றுதான். தாபத்தில் கிடந்துழலும் தம்பதியினரை வழிநெடுகக்காட்டிவிட்டு, நாவலின் முடிவில் அது வெறும்புள்ளிதானே ஒழிய. இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படவுள்ள வரலாறு வேறொன்று என எஸ்பொவினால் படைக்கப்பட்டவள் செல்லபாக்கியம்.

ப.தெய்வீகன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More