Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் முருகபூபதியின் கணங்கள் – விமர்சனக் குறிப்பு: கலாநிதி செல்லத்துரை சுதர்சன்

முருகபூபதியின் கணங்கள் – விமர்சனக் குறிப்பு: கலாநிதி செல்லத்துரை சுதர்சன்

3 minutes read

——————————————

ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் முகத்தாற் சொல்கிறது, முருகபூபதியின் கணங்கள் என்ற சிறுகதை. இதில், கணவன் அரச ஆயுததாரிகளால் காணாமலாக்கப்படுகிறான். கணவனை இழந்த குடும்பப்பெண், தன் கதையைச் சொல்கிறாள். கணவன் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாது,  உளத் தேய்வுற்று, பின்னர் இறந்ததாக எண்ணி, கணவனை மகனில் கண்டு, அவனை வளர்க்கவே வாழ்வை ஓட்டுகிறாள் அவள்.  சொந்த உறவுகள் நிழல் தராதுபோக, மகனைத் தனக்கு அரண் ஆக்குகிறாள். மகனுக்காக வாழ்வுத் துயர் சுமந்து பயணிக்கிறாள். உறவுகளற்ற தன் மகனுக்கு, அப்பாவை இழந்த சிங்களச் சிறுவன் ஒருவன் உறுதுணையாக, அவள் மகிழ்கிறாள். அந்தச் சிங்களச் சிறுவனுக்கும் இவளே தாயாகிறாள். அவனும் அதை ஏற்கிறான். இதுதான் ‘கணங்கள்’ கதைச் சுருக்கம்.

இக்கதையில் மூன்று கருத்தியல்கள் முக்கியமானவை. ஒன்று:  ‘திவச நாள்’ என்பது ஈழத்துச் சைவத்தமிழ்ப் புலத்தில் அடைந்த மாறுதல். ஒருவர் இறந்த திகதி தெரிந்தால் திதி இருக்கும். கணவன் காணாமலாக்கப்பட்டு, எப்போது சாகடிக்கப்பட்டார்? இன்னும் இருக்கிறாரா? இல்லையா? என்ற வினாக்களுக்கு விடை இல்லை. எனினும், இனிமேல் ‘அவர்’ வரார் என்பதை உணர்ந்துகொண்ட மனைவி, ”அவர் காணாமல் போன தினம்தான் எனக்கு அவருக்கான திவச நாள்” என்கிறாள். ”அவரை அழைத்துச்சென்ற தினம் வரும்போது விரதம் இருந்து, சுவாமி அறையிலிருக்கும் அவரது படத்துக்குப் படையல் போட்டு, மகன் வரும்வரையில் காத்திருந்து, அவனையும் படத்துக்கு முன்னால் நின்று வணங்கச்செய்துவிட்டுத்தான் அந்தப் படையலை இருவரும் சாப்பிடுவோம். அன்று வடை, பாயாசம் எல்லாம் செய்வேன். வருடம் ஒருமுறை வரும் திவச நாள்” என்கிறாள். தனது சமய நம்பிக்கையால் திவசம் கொடுக்கிறாள் என்பதை வெளிப்படையாகக் கதை காட்டுகிறதெனினும், திதிக்காகப் பஞ்சாங்கங்களை வைத்து வம்புக்கு வாய்ப் பத்திரிகைப் பட்டிமன்றம் பேசும் மூட நம்பிக்கையாளர் தலையில் மறைமுகமாக அடிக்கப்பட்டிருக்கிறது, முதலாவது முற்போக்கு ஆணி.

இரண்டு, போருக்குப் பிந்தைய ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் மறுமணம் பற்றிய கருத்து. கணவன் காணாமலாக்கப்படும்போது, மகனுக்கு ஐந்து வயது. காலச் சக்கரத்தைக் கண்ணீரோடு உருட்டுகிறாள். பல வருடங்களைக் கடக்கிறாள். நீள் துக்கம் அவளை நீங்கவில்லை. அப்போது மகன் தாயைக் கேட்கிறான்,  “ ஏனம்மா இப்படியே அப்பாவை நினைச்சுக்கொண்டே இருக்கிறீங்க… நீங்களும் இன்னுமொரு கலியாணம் செய்து எனக்கு ஒரு அப்பாவைத் தரலாம்தானே…? ” இந்தக் கேள்விக் கணை, பிள்ளைகளிடம் இருந்து எழுவதே ஒரு புரட்சிதான். இதனை ஒரு மகன் தன் தாயிடம் கேட்கும் கேள்விக் கணை என்று எண்ணிக் கடக்கமுடியாது. இது, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி, நவீன வாழ்வு அறத்தை வேண்டித் தொடுக்கும் கேள்விக் கணை. கணவனை இழந்த பெண்ணின் மறுமணத்துக்கு முகம் சுளிக்கும் மானுடம் மறுத்த தமிழர் தலையிலும், கணவனை இழந்தாலும் இன்னொருவனைக் கைப்பிடிக்கும் மறுமணம் தகாதென மறுத்து, பெண் தலைமைக் குடும்ப வாழ்வைக் கருத்திற்கொள்ளாத பிற்போக்குப் புராணப் பிரசங்கிகள் தலையிலும் அடிக்கப்பட்டிருக்கிறது இரண்டாவது ஆணி.

 மூன்று, போருக்குப் பின்னான இன்றைய நிலையிலாவது தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய காலத்தால் மாறாத அன்பின் வழியான இன ஐக்கியம். கதையில், கணவனை இழந்த பெண்ணது மகனின் பள்ளிச் சகா நிமால். அவன், ”வீட்டுக்குள் வந்ததுமே ‘அம்மே..’ எனச் சொல்லி என்னைக் கட்டிக்கொண்டான்” என்று கூறும் அவள், “என்னை ‘அம்மே…’ என விளித்துக் கட்டிக்கொண்டதன் மூலம், எனக்கு இந்த நாட்டில் இன்னுமொரு பிள்ளை கிடைத்திருக்கிறான். எனது கண்கள் பனித்தன” என்று பெருமிதமுறுகிறாள். “ மகனே…’ என்னையும் அம்மே என்றே கூப்பிடு…” எனச் சொல்லி அவனது தலையைத் தடவினேன் ” என்று மகவாஞ்சையோடு சிங்கள மகனிடம் அன்பைப் பரிசளிக்கிறாள். மகன், தந்தையின் படத்தை வணங்கிவிட்டு வந்து நண்பன் நிமாலோடு தன் தாய் சுட்ட தோசையை உண்ணத் தயாராகிறான். அப்போது, சிங்கள நண்பனான நிமால்,  வாய்க்குள் ஏதோ முணுமுணுக்கிறான். அதைக் கண்ணுற்று ‘ மௌனப் பிரார்த்தனையா ’ என்ற தொனியில் பாராட்ட முற்படுகிறாள், தமிழ்த் தாய். அப்போது அவன், “ அம்மே இது கடவுளுக்கான மௌனம் இல்லை. எனது அப்பாவுக்கானது. எனது அப்பா ஆர்மியில் பிரிகேடியராக இருந்தவர். ஒரு தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட்டி அள்ளியதாக அம்மே சொல்லியிருக்கிறாங்க. அப்போது எனக்கு இரண்டு வயதிருக்கும். அப்பாவின் முகத்தை அவரது படங்களில்தான் பார்த்திருக்கிறேன் ” என்கிறான். இந்த இடத்தில்தான், போரானது ஈரின மக்களுக்குள் விளைத்த ஒருமித்த பாதிப்பில் உளம் கசங்கிப்போவதுடன், அப்பாதிப்பிலும் பாதிப்புறாத, மானுட அன்பில் முடிச்சிடப்பட்ட ஈரின நல்லுறவை நயக்கவும் முடிகிறது. போருக்குப் பின்னும் ஈரினங்களுமே ஒன்றுக்கொன்று எதிர்நிலை எனக் காட்டி, இன்றும் இன உறவில் விரிசலைத் திட்டமிட்டு ஏற்படுத்தி, அரசியற் சுயலாபம் கருதிச் செயலாற்றும் பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதிகளின் தலையிலும், அடிப்படைச் சிங்களப் பௌத்தவாதிகளின் தலையிலும் ஒருங்கே அடிக்கப்பட்டிருக்கிறது இந்த மூன்றாவது ஆணி.

மேற்குறித்த மூன்று மெய்க் கருத்துகளையும், ஆசிரியர் இன்னும் கதைத்துவம் ததும்பச் சொல்லியிருக்கலாம்.  சொல்லியிருக்க வேண்டும். சொல்லும் சொல் அவாிடமுண்டு. எனினும், ஈழத்துச் தமிழ்ச் சமூகத்தின் நவ முன்னகர்வுக்கு, வெகுஜனத் தளத்திலான கருத்தியல் பிரசாரமும் கதையில் வேண்டியதே!

—————————————————————-

‘கதைகளின் கதை’ (2021) என்ற நூலிலிருந்து…

கலாநிதி செல்லத்துரை சுதர்சன்

தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More