Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ‘நலிவுற்ற பெண்களின் குரலாக ஒலித்த ஆளுமை அருண் விஜயராணி’ தாமரைச்செல்வி புகழராம்

‘நலிவுற்ற பெண்களின் குரலாக ஒலித்த ஆளுமை அருண் விஜயராணி’ தாமரைச்செல்வி புகழராம்

6 minutes read

நினைவுகளில் வாழும் எழுத்தாளர் அருண் விஜயராணி

(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை) 

ஒருவர் வாழும் காலங்களில் எப்படி நடந்து கொண்டார்கள்?  அவர்களின் செயயற்பாடுகள் எப்படி இருந்திருக்கிறன?  என்பதை வைத்தே அவர்கள் மறைந்த பின் நினைவு கூரப்படுவார்கள். அவர்களின் நினைவு என்பது அவர்கள் வாழ்ந்த காலத்தின் சாதனைப் பதிவாகவே கொள்கிறோம்.

அருண் விஜயராணியைப் பொறுத்த வரையில் அவர் பல்துறை சார்ந்த ஆளுமை மிக்கவர். இனிய மனமும் இரக்க குணமும் சமூகத்தை நேசிக்கும் இனிய பண்பும் நிறைந்தவர். அவரைப்பற்றியும் அவர் அவுஸ்திரேலியாவில் செய்த இலக்கிய சமூக செயற்பாடுகளைப் பற்றியும் இங்குள்ளவர்கள் அனைவரும் அறிந்தே இருப்பார்கள். இலக்கிய உலகிலும் சமூக சேவைகளிலும் அவர் பதித்துச் சென்ற தடம் தனித்துவமானது.

அவர் 1990  ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியத்  தமிழர்  ஒன்றியத்தின் கலாசாரச் செயலாளராக அங்கம் வகித்ததுடன் ‘அவுஸ்திரேலிய முரசின்’ ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார். இவருடைய படைப்புகள் மெல்பேர்ண், சிட்னி, பிரிஸ்பேர்ண் தமிழ் வானொலிகளிலும் ஒலி பரப்பாகியிருக்கின்றன.


2000  ஆம் ஆண்டு மல்லிகை இதழ் அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியிட்டபோது,  அதில் இவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதில் எழுதிய ‘தொத்து வியாதிகள்’ என்ற சிறுகதையைத் தமிழகத்தின் கவிஞர் தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மட்டுமின்றி,  தான் விரிவுரையாளராக பணியாற்றிய சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் இக்கதை பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

இவருடைய ‘கன்னிகாதானங்கள்’ என்ற சிறுகதைத்தொகுதி தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வன் வரைந்த அட்டைப்பட ஓவியத்துடன் 1991 இல் மெல்பேர்ணில் வெளியீடு செய்யப்பட்டது.   குறிப்பிட்ட  ‘கன்னிகாதானங்கள்’ தொகுப்பில் உள்ள கதைகளை கனடாவில் இருக்கும் சியாமளா நவரத்தினம் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அருண். விஜயராணி , இந்த சமூகத்துக்காக எழுதுவதோடு மட்டும் நின்று விடாமல்,  பல சமூகப் பணிகளையும் ஆற்றியிருக்கிறார். அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம்,  இலங்கை  மாணவர் கல்வி நிதியம் முதலான அமைப்புகளில் இணைந்து தன் பங்களிப்பை வழங்கியிருந்தார்.  அத்துடன் சிறிது காலம் இந்த அமைப்புகளில் தலைவராகவும் ஆக்கபூர்வமாக செயற்பட்டவர்.  அவர் தலைவராக இருந்த  காலத்தில்  கல்வி நிதியம் வெள்ளிவிழாவை கொண்டாடியது. மிகத்  திறமையாக நிர்வாகம் செய்யக்கூடிய ஆற்றலும் அவரிடம் இருந்தது. அவுஸ்திரேலியாவில் வருடா வருடம் எழுத்தாளர் விழாக்களையும் முன்னின்று நடத்தியிருக்கிறார்.

இத்தனை ஆளுமை மிக்க பெண்ணின் தோழி என்ற வகையில் ஆரம்பத்திலிருந்து நாம் பழகிய நாட்களைக் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


1973  ஆம் ஆண்டு நான் வானொலிக்கு ஆக்கங்கள் எழுதத் தொடங்கிய காலம். வானொலிக்கு சிறுகதை , இசையும் கதையும் என்று எழுதிய நேரம். அப்போது
அருண் விஜயராணியும் நிறைய ஆக்கங்கள் வானொலிக்கு எழுதிக் கொண்டிருந்தார்.


வானொலிக்கு எழுதுவதற்கு முன்பே அவர் மாணவியாக இருந்த பொழுது ‘இந்து மாணவன்’ என்ற பாடசாலை மலரில் ‘அவன் வரும் வரை’ என்ற சிறுகதையை 1972 இல் எழுதியிருந்தார்.

அப்போதெல்லாம் வானொலியில் நல்ல தரமான நிகழ்ச்சிகள் இலக்கியத்துக்கு களம் தந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. வானொலிக்கு எழுதிய காலத்தில் முதலில் பேனா நண்பர்களாகத்தான் நாம் அறிமுகமானோம். பக்கம் பக்கமாக கடிதங்கள் எழுதி எம் நட்பை வளர்த்துக் கொண்ட காலங்கள் அவை. எமது கதைகளை ஒருவருக்கொருவர் விமர்சிப்பது , மற்றவர்களுடைய கதைகளைப்பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, நாம் வாசிக்கும் புத்தகங்களைப்பற்றி விமர்சனம் செய்வது என்று கடிதங்களிலேயே இலக்கியம் பேசிக்கொள்வோம்.

வானொலியில் பல நிகழ்ச்சிகளுக்கு எழுதினாலும் நான் சிறுகதை எழுதுவதோடு மட்டுமே நின்று கொண்டேன். ஆனால் விஜயராணி சிறுகதை, நாடகம், உரைச்சித்திரம் என்று பல்துறையிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அவர் எழுதியவற்றில் மறக்க முடியாத பாத்திரம் ‘விசாலாட்சி பாட்டி’. சமூகத்தில் நடக்கும் சின்னச்சின்ன பிரச்சினைகளையும் நகைச்சுவை ததும்ப விசாலாட்சி பாட்டியின் குரலாக எடுத்துச் சொல்வார். 

சில வசனங்களை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். அவரின் வசனங்களை இயல்போடு நடித்து பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார்கள். வானொலி நேயர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பாத்திரம் விசாலாட்சிப்பாட்டி. இது மட்டுமல்ல அவர் வானொலிக்காக நிறைய நாடகங்களையும் எழுதியிருக்கிறார் . இவரின் நாடகங்களை கே.எம்.வாசகர், பி.விக்னேஸ்வரன் ஆகியோர் நெறியாள்கை செய்து ஒலி பரப்பியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் வானொலி நாடகங்களை காத்திருந்து கேட்போம். மிகச்சிறப்பான நாடகங்கள் ஒலிபரப்பாகும்.

அவருடைய இன்னொரு ஆளுமை அவருடைய நேர்காணல்கள். சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்கள் பலபேருடன் அவர் எடுத்த நேர்காணல்கள் அவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத்தந்திருக்கிறது.  அவர் கேட்கும் கேள்விகள் சம்பந்தப்பட்டவர்களின் ஆளுமைகளை வெளிக்கொண்டு வர உதவும் விதமாய் அமையும். அதே நேரம் இலக்கியம், அரசியல், சினிமா என்று அவருக்குள் இருக்கும் திறமையும் வெளிப்படும்.

வானொலிக்கு எழுதிக்கொண்டே தொடர்ச்சியாக பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கினோம். அதன் பின்தான் முதல் தடவையாக நேரில் சந்தித்தோம்.
எங்கள் ஊரான பரந்தன் புகையிரத நிலைய அதிபராக அப்போது திரு. நடராஜா அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார். என் தந்தையுடன் மிகவும் நட்புடன் பழகியவர்.  அவரின் மகள் மஞ்சுவிடம் மாலை நேரங்களில் என் தங்கைகள் படிக்கப்  போவார்கள். மஞ்சுவின் அம்மாவின் அக்கா மகள்தான் விஜயராணி.  

ஒருதடவை அவர்கள் வீட்டுக்கு விஜயராணி வந்தபோது மஞ்சு அவரைக்கூட்டிக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். இரட்டைப்பின்னலும் பாவாடை சட்டையும் குழந்தை முகமுமாக அன்று  அவரைப் பார்த்தது இன்றும் என் கண்களில் நிற்கிறது.

அதன் பின்னர் கொழும்பில் தெஹிவளையில் இருக்கும் விஜயாவின் வீட்டுக்கும் போயிருக்கிறோம்.அவரின் தந்தை மிகச்சிறந்த ஓவியர். அவர் வீட்டில் அவர் வரைந்த ஓவியங்களை பிரமிப்புடன் பார்த்து ரசித்திருக்கிறேன்.  கோவில் கோபுரங்கள், இயற்கை காட்சிகள், பறவைகள் என்று அழகழகான ஓவியங்கள்.


அவர்கள் வீடு போனால் அப்பா, அம்மா, சகோதரர்கள் என்று அத்தனை பேரும் அன்போடு உபசரிப்பார்கள். அந்த மாலை நேரங்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

நேரிலும் கடிதங்களிலும் நிறையப்  பேசுவோம். அப்போதுதான் ஒரு குறுநாவலை  நால்வர் சேர்ந்து எழுதுவோமா என்று விஜயாதான் முதலில் ஆரம்பித்தார். விஜயா, நான், மண்டூர் அசோகா, தேவமனோகரி விஜேந்திரா நால்வரும் சேர்ந்து எழுதிய ‘நாளையசூரியன்’ எனும் நாலு வாரத்தொடர் வீரகேசரியில் 1979 இல் வெளிவந்தது.

அந்தக் கதை எழுத முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன் கொழும்பு சூழலில் தடம் புரண்டு ஹிப்பியாக அலையும் கதை. இதை எழுதுவது சரியாய் வருமா என்று தயங்கிய போது தைரியம் தந்து எழுத வைத்தது அவர்தான். கதைக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்த அதே சமயம் எதிர் விமர்சனமும் எழவே செய்தது. இப்படி ஒரு கதையை பெண்கள் எழுதியிருக்கிறார்களே என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போது அதை தைரியமாக எதிர் கொண்டவர் விஜயாதான். பெண் எழுத்து ஆண் எழுத்து என்று எதுவும் இல்லை. பெண்களைப்பற்றி ஆண்களும் ஆண்களைப் பற்றி பெண்களும் எழுதலாம். நாங்கள் என்ன கருத்தை எழுதுகிறோம், அது எப்படி சமூகத்தை சென்றடைகிறது என்பதுதான் முக்கியம் என்று தன் கருத்தை முன் வைத்தார். அதைப் பற்றி மற்றவர்கள் என்ன விமர்சனங்கள் செய்தாலும் கவலைப்பட மாட்டார்.

அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை எத்தனையோ. எனது கதைகள் வரும்போதெல்லாம் நல்லதென்றால் மனமார பாராட்டுவார். திருத்தம் ஏதும் இருந்தால் அதை உரிமையோடு சுட்டிக்காட்டுவார். அவரின் நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. எனது கதைகளை மட்டுமின்றி பிறருடைய கதைகளைப் பற்றியும் தன் விமர்சனங்களை பகிர்ந்து கொள்வார். எதையும் ஊன்றிக் பார்க்கும் இந்த ஆளுமைதான் காலப்போக்கில் நிறைய ஆய்வு செய்யவும் விமர்சனம் செய்யவும் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

அவரிடம் நான் கண்ட மிகச்சிறந்த இயல்பு அனைவரையும் நேசிப்பது. அவரைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற பெண்ணாகத்தான் அவர் வாழ்ந்திருக்கிறார். அவரின் எழுத்தும் பேச்சும் வாழ்வில் நலிந்து போன பெண்களின் குரலாகத்தான் எப்போதுமே இருந்திருக்கிறது. அதுவும் கையாலாகாத்தனத்துடன் ஏழ்மை நிலையில் வாழும் பெண்கள் பற்றிய கவலையும் அவருக்கு நிறையவே உண்டு. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு அது. அதை தன் படைப்புகளில் கொண்டு வந்ததோடு மட்டுமல்ல அதற்கான தீர்வுகளையும் தன் எழுத்தில் பதிவு செய்தவர். ஒரு சமூக நேசிப்பாளராக ஒரு இலக்கியவாதியாக தன் கடமையை நியாயத்துடன் செய்தவர்.

73 ஆம் ஆண்டு ஆரம்பித்த எங்கள் நட்பு அவர் மறைந்த 2015  ஆம் ஆண்டு வரை நாற்பத்தியிரண்டு வருடங்கள் தொடர்ந்திருக்கிறது. இடையே சில காலங்கள் தொடர்புகள் அற்று இருந்தோம். போர்க்காலங்களில் நாங்கள் இடப்பெயர்வினால்  வீடு வாசல் விட்டு அலைந்து கொண்டிருந்த காலங்களில் கடிதங்கள் கூட போட முடியாத சூழல். அப்போதும் கூட அவர் லண்டனில் இருக்கும்  எனது தம்பி தங்கைகளிடம் எங்களைப்பற்றி விசாரித்துத் கொண்டேயிருப்பார். பின்னர் 2011 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா வந்தபோது நீண்ட நாட்களின் பின் அவருடன் தொலைபேசியில் கதைக்க முடிந்தது. 

அதன் பின் ஒவ்வொரு தடவை இங்கு வரும் போதும் கதைத்துக் கொள்வோம். அவருடைய மறைவுக்கு சில வாரம் முதல் கூட அவருடன் தொடர்பு கொண்டேன்.அவரின் கணவர் அருண்தான் எடுத்தார். கொஞ்சம் களைப்பாக இருக்கிறது என்று படுத்திருக்கின்றா என்றார். நான் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் சுகம் விசாரிக்கத்தான் எடுத்தேன் என்று சொல்லி அவரின் உடல் நிலை பற்றி கதைத்துவிட்டு வைத்துவிட்டேன். அரை மணி நேரத்தில் அருண் திரும்ப எடுத்து அவ உங்களுடன் கதைக்கப் போகிறாவாம் என்றார். அடுத்த வினாடி விஜயாவின் குரல். மெலிந்த குரலில் அன்பும் வாஞ்சையும் கலந்திருந்தது. நோயின் வலிகளை தாண்டி நின்ற திடம் தெரிந்தது.

அன்றுதான் அவரின் குரலை நான் கடைசியாக கேட்டது. அதன்பின் அவரின் மறைவுச் செய்தியைத்தான் கேட்டேன். முருகபூபதி அவர்கள்தான் தகவல் தந்தார். உண்மையில் அதிர்ந்து போய்விட்டேன். மனம் தாங்கவில்லை. பல தடவை அவுஸ்திரேலியா வந்து போயிருந்தாலும் ஒரு தடவையேனும் மெல்பேர்ண் போகவோ அவரைச் சந்திக்கவோ முடிந்ததில்லை. அது பெரும் சுமையாக மனதை அழுத்துகிறது. எண்பதுகளில் பார்த்த முகமே மனதில் நிலைத்து விட்டது. இனிய தோழியை இழந்து விட்ட துயரம் என்றென்றும் ஆறப்போவதில்லை.

அவர் எப்போதும் எல்லோராலும் நினைவு கொள்ளக்கூடியவர். நினைவு கொள்ள வேண்டியவர். அவ்வளவு தூரம் தன் வாழ்வை இந்த சமூகத்திற்கும் இலக்கியத்துக்கும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். எல்லோராலும் நேசிக்கப்படும் மகத்தான ஒரு பெண்மணி. அவர் என் தோழி என்பதில் எனக்கு பெருமையுண்டு.

அவரின் நினைவுகள் என்றென்றும் என் நெஞ்சில் நிறைந்தே இருக்கும்.

–0–

தாமரைச்செல்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More