Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் செ.கணேசலிங்கன் நினைவுகள் | க. பாலெந்திரா

செ.கணேசலிங்கன் நினைவுகள் | க. பாலெந்திரா

5 minutes read

ஈழத்து மூத்த தமிழ் இலக்கிய ஆளுமை செ. கணேசலிங்கன் கடந்த மாதம் 4ஆம் திகதி சென்னையில் தனது 93 ஆவது வயதில் காலமானார். இன்று ஒரு மாதம் ஆகிறது.

அவருடனான எனது சில நினைவுகளை இங்கு பகிர்கிறேன்

எழுபதுகளில் இருந்து அவருடன் பழகியிருக்கிறேன். 70 களில்
கொழும்பு வெள்ளவத்தையில் இருந்த அவரது விஜயலட்சுமி புத்தகசாலை கொழும்பில் பல கலை இலக்கிய நண்பர்கள் சந்திக்கும் இடமாகவும் இருந்தது. அங்கு நான் அடிக்கடி போவதுண்டு.

டாம் (Dam Street) வீதியில் இருந்த அவரது குமரன் அச்சகத்தில் எமது நாடக பிரசுரங்கள் சில அச்சாகி இருக்கின்றன.

1978-1982 காலப் பகுதியில் கொழும்பில் நடந்த எமது நாடகங்கள் பலவற்றையும் வந்து பார்த்து இலங்கை தேசிய பத்திரிகைகளில் ஆழமான விமர்சனங்களையும் எழுதியவர்.
நாம் கொழும்பில் ஒழுங்குபடுத்திய பல நாடக விமர்சனக் கூட்டங்களுக்கும் வருகை தந்து தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.

செ.கணேசலிங்கன் மார்க்ஸிய முற்போக்குக் கருத்துகளைக் கொண்டவர். பேராசிரியர் கைலாசபதி அவர்களுடன் நீண்ட காலமாக நெருங்கிய நட்பைப் பேணியவர்.
மார்க்ஸ் மட்டுமல்லாது பரந்த வாசிப்புப் பயிற்சி உள்ளவர். அல்தூசர் , அந்தோனியோ கிராம்சி போன்றவர்களையும் வாசித்து அறிந்தவர்.

ஈழத்து எழுத்தாளர்களில் பன்முகத் தன்மை உள்ள பல நூல்களை எழுதி பிரசுரித்தவர் செ கணேசலிங்கன் ஆவார்.தனது அந்திம காலம் வரை எழுதியவர்.

71 நாவல்கள் 7 சிறுகதைத் தொகுப்புகள், 22 கட்டுரைத் தொகுப்புகள், 8 சிறுவர் இலக்கிய நூல்கள்!

செ. கணேசலிங்கன் ஒரு முன்னோடி முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்டவர். இருந்த போதிலும், எனது பன்முகத்தன்மை கொண்ட பல தரப்பட்ட நாடகத் தெரிவுளையும் ஆற்றுகைகளையும், பரந்த நோக்கில் பார்த்து அவற்றைப் பதிவு செய்தவர்.

நான் நெறிப்படுத்தி 1979-1982 காலப்பகுதியில் கொழும்பில் மேடையேற்றிய யுகதர்மம் , முகமில்லாத மனிதர்கள், சுவரொட்டிகள் ஆகிய நாடகங்களுக்கு அவர் எழுதிய விமர்சனங்கள் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்கள் எனக் கருதுகிறேன். இவற்றை முன்னர் முகநூலில் பகிர்ந்துள்ளேன்.
.
வீரகேசரியில் (07-02-1982) பிரசுரமான “முகமில்லாத மனிதர்கள் ஓர் ஆழமுள்ள பரீட்சார்த்த நாடகம்”
நாடக விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

“சென்ற ஈராண்டு காலத்தில் இலங்கை அவைக்காற்று கலைக் கழகத்தார் மேடையேற்றிய சில நாடகங்களைப் பார்த்த போது ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சியில் நாம் புதியதோர் வளர்ச்சிக் கட்டத்திற்கு வந்திருக்கிறோம் என்று உறுதியாகக் கூறலாம். கண்ணாடி வார்ப்புகள், யுகதர்மம், மழை, நாற்காலிக்காரர், ஒரு பாலை வீடு, ஆகியவற்றின் பின்னர் வங்காள நாடகாசிரியரான பாதல் சர்க்காரின் முகமில்லாத மனிதர்களைப் பார்க்க முடிந்தது.”

எனது மொழிபெயர்ப்பு நாடகங்கள் சம்பந்தமாக சில முற்போக்கு விமர்சகர்கள் கூறிய எதிர்மறைக் கருத்துக்களையும் அவர் நன்கு அறிவார். 80களில் எனது நாடக முயற்சிகள் குறித்து தினகரன், அலை, லங்கா கார்டியன் ஆகியவற்றில் நடந்த விவாதங்களையும் முழுமையாக அறிந்திருந்தார். இருந்தபோதும் தனது கருத்தை எமக்கு ஆதரவாக வெளிப்படையாகக் கூறினார்.

25-11-1979 இல் கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நாடகக் கருத்தரங்கில் “நாடகமும் நெறியாள்கையும்” என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அந்த மாதம்(10/11-11-179 )புதிய கதிரேசன் மண்டபத்தில் இலங்கை மத்திய வங்கி தமிழ் இலக்கிய மன்றம் ஒழுங்கு செய்த இரண்டு நாள் நாடக விழா பற்றிய விமர்சனங்களும் அன்று இடம்பெற்றன. அதில் செ. கணேசலிங்கனும் உரையாற்றினார். அந்த நிகழ்வில், செ. கணேசலிங்கன் அவர்களை நோக்கி “எனக்கு தயாரிப்பதற்கு ஈழத்து தமிழ் நாடகப் பிரதிகள் வேண்டும் எழுதித் தாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தேன். இது தமிழில் நல்ல நாடகங்கள் வேண்டும் என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் வெளியானது. இப்படி என்னுடன் தொடர்பில் இருந்த ஈழத்து எழுத்தாளர் பலரையும் அப்போது கேட்டிருக்கிறேன். ஆனால் பின்னர் அது சாத்தியப்படவில்லை.

10-02-1980 இல் வீரகேசரியில் வெளியான யுகதர்மம் நாடக விமர்சன அரங்கு பற்றி “ சாதாரண ரசிகர் மட்டத்தில் ப்ரெக்ட் அறிமுகமாகியுள்ளார் “ என்ற செய்திக் குறிப்பில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“முதலாவதாக பிரபல நாவலாசிரியர் செ. கணேசலிங்கன் விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தார். அவர் கருத்து வெளியிடுகையில்
கலை பற்றிய மாறுபட்ட காத்திரமான கோட்பாட்டை முன்வைத்த உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் பிரெக்ட் தமிழுக்கு அறிமுகமாகும் இந்த அரிய சிறப்பான நிகழ்வு பற்றி விமர்சிப்பதற்கு அவருடைய மாணவன் ஆகிய நான் பங்கு கொள்வதில் பெருமை அடைகிறேன். தமிழில் இந்தியாவில் கூட பிரெக்ட்டை அறிமுகப்படுத்தாத சூழலில் இங்கு வெற்றிகரமாக அவரை முதன் முதலாக அறிமுகப்படுத்திய வரலாற்றுப் பெருமை இவர்களையே சாரும். அதிலும் குறிப்பாக பாலேந்திரா நாடக ஆசிரியரின் செய்தியை சரியாக அப்படியே வெளிக்கொணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது. நீதிமன்றக் காட்சிகள் மூலம் தான் சொல்ல வந்த விஷயங்களை அலசி ஆராயும் பாங்கு பிரெக்டின் பல நாடகங்களில் கையாளப்பட்டு இருப்பதை இந்தியாவிலும் பல மொழிகளிலும் ஜெர்மன் மொழியில் கூட நான் பார்த்திருக்கிறேன். அவை எல்லாவற்றையும்விட “யுக தர்மம்” நாடகத்தில் நீதிபதியின் அசைவுகளும் நடிப்பும் மிகத் தெளிவாக இந்த சமூகத்தின் நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பை வெளிப்படுத்துகின்றன என்றார்.
ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் கலையும் எப்படி ஒரு விற்பனைப் பண்டமாக மாறுகின்றது என்பதையும் பிரெக்டின் அன்னியமாதல் என்ற கலைக் கோட்பாடு பற்றியும் விளக்கமாகப் பேசிய கணேசலிங்கன் தொழில்நுட்ப பொருளாதார வசதியீனங்களுக்கு மத்தியிலும் இவ்வளவு சிறப்பாக இந்த நாடகத்தை நடத்தியமை ஒரு சாதனையே என்றார். பாத்திரங்களின் பொதுத் தன்மையை விளங்கி அதை வெளிக்கொணர்ந்த நடிகர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்று கூறி சிறந்த ஒரு நாடக அனுபவத்தை காத்திரமான கருப்பொருளோடு தந்த நாடக குழுவினருக்கு நன்றி கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

1982 இல் நான் புலம்பெயர்ந்த பின்னர் லண்டனிலிருந்து சென்னை செல்லும் வேளைகளில் செ. கணேசலிங்கன் அவர்களை அங்கு சந்திப்பது வழமை.
சென்னையில் அவர் “இந்து” பத்திரிகை காரியாலயத்துக்கு காலை 8:00 மணிக்கே போய் விடுவார். அங்கிருந்தே முழு நேர வேலையாக தனது எழுத்துப் பணியைத் தொடரந்தார். இருந்தும் எமக்காக நேரம் ஒதுக்கி சந்திப்பதுண்டு.

எப்பொழுது தொலைபேசியில் அழைத்தாலும் “என்ன உதவி செய்யலாம் ?” என்பதே அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

மென்மையாகப் பேசும் இனிய மனிதர் அவர்.

2020 ஜனவரியில் நான் அங்கு சென்றபோது அவரைச் சந்திக்க விரும்பி இருந்தும் சந்திக்க முடியாமல் போனமை எனக்கு மிகவும் மனவருத்தம். அவரது மகள் மான்விழியுடன் வட பழனிக்கு அண்மையில் வசித்தார். மகளுடன் தொலைபேசியில் பேசியபோது அவரது முதுமை- உடல் நிலை காரணமாக சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் அவரைப் பார்க்க முடியும் என்று கூறியிருந்தார். அந்த நேரத்தில் என்னால் அங்கு செல்ல முடியவில்லை என்பது கவலையே.

2017இல் கொழும்பில் எதிர்பாராத வகையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் அவரைச் சந்தித்தேன். அது தான் எமது கடைசிச் சந்திப்பு. அப்போது அந்த இரவு நேரத்தில் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோம். அதனை இங்கு இணைத்துள்ளேன்.

செ. கணேசலிங்கன் கடந்த 30 ஆண்டுகளாக சென்னையிலேயே வாழ்ந்தார். சில ஆண்டுகளாக அவர் கொழும்பு வருவது கூட அபூர்வமாக இருந்தது . அப்படி இருந்த போதிலும், நான் லண்டனிலிருந்து கொழும்பு சென்ற வேளையில் அவரைக் கொழும்பில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவர் தனது மகன் குமரன் வீட்டில் இருந்து தமிழ் சங்கத்துக்கு தனது உடல் நிலையைப் பொருட்படுத்தாது நடந்தே வந்திருந்தார்.

அவருடனான உறவு மகன் குமரன் மூலம் தொடர்ந்து வருகிறது. எமது “கண்ணாடி வார்ப்புகள்”,” யுகதர்மம்” ஆகிய நாடக நூல்களை குமரன் பதிப்பகம் வெளியிட்டது.
ஒரு நூல் அறிமுக நிகழ்வையும் குமரனே கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒழுங்கு செய்தார்.

70களின் ஆரம்பத்தில் செ. கணேசலிங்கன் அவர்களின் மகள் குந்தவி எனது மனைவி ஆனந்தராணியுடன் கொழும்பில் நடனம் பயின்று பல நடன நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடனம் ஆடியவர்.

எழுபதுகளிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் செ. கணேசலிங்கத்தின் குமரன் அச்சகம் எமது நாடகப் பிரசுரங்கள் சிலவற்றை மிகக் குறைந்த விலையிலும் சிலவற்றை இலவசமாகவும் நல்ல வடிவமைப்புடன் அச்சிட்டுத் தந்தது.
செ கணேசலிங்கன் அவர்கள் 1982 இல் அவசரமாக நடந்த எமது திருமணத்திற்கான அழைப்பிதழை இலவசமாகவே அச்சிட்டுத் தந்தார் என்பதையும் நான் நன்றியுடன் நினைவில் வைத்துள்ளேன்.

செ. கணேசலிங்கன் அவர்களது நினைவுகள் என்றென்றும் என்னுடன் இருக்கும்.
அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி!

க. பாலேந்திரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More