இன்னும் ஓர் இரண்டு வருடங்களின் பின்
நிலக்கிளியே உனக்கு அகவை ஐம்பது!
அன்றைய நாளில் எப்படித்தான் வந்து நீ
என் மனதில் பொந்து அமைத்து குடிவந்தாய்?
வாசகர்கள் பலர் தம் இதயத்தின் ஆழத்தில்
உன்னையும் உன் நாயகி பதஞ்சலியையும்
இன்றுவரை நினைவழியாப் பாத்திரங்களாக
இருத்தி இன்புறுவதன் காரணந்தான் என்ன?
உன்னைச் சாக்காக வைத்து நான் மிகப்
பெருமிதம் கொள்வது பொருத்தம் தானா?
இக்கதையில் இவன் எதைத்தான் பெரிதாய்
சாதித்துவிட்டான் எனக் கேட்பவரும் உண்டு!
வீரகேசரி வெளியீடாக பத்தாயிரம் பிரதிகளுக்கு
மேல் விற்பனையாகிய வரலாறு உண்டல்லவா?
அத்தனை பிரதிகளையும் எத்தனை ஆயிரம்
மக்கள் வயது வித்தியாசமின்றி வாசித்திருப்பர்!
கனகசெந்தி நாதனும், நாடகர் வேந்தனும்(?)
இன்னும் எம் முல்லைமணி, சுப்பிரமணியம் ஐயர்
கைலாசபதி போன்ற பல இலக்கியகாரர் இதனை
ஈழத்தின் முதல் மண்வாசனை இலக்கியம் என்றும்
படித்தவர் முதல் படிக்காதவர் வரை என
இரசித்துப் படித்த கதை என்றும் கூறியதுண்டு.
எனது பதினேழாவது வயதில், இந்தக் கல்
இல்லம் அமைப்பதற்கு இலாயக்கு அற்றது
என்று ஒதுக்கப்பட்டு, பின் அந்தக் கல்தான்
முக்கியமான மூலைக் கல்லாகியது போன்று
எனக்குப் பல வாசகர்களை தந்தது நீயல்லவா?
தண்ணிமுறிப்பில் அந்த நாட்களில் வாழ்ந்த
இராசசிங்கமே கதிராமன் தந்தை கோணமலையர்!
அக்கினிக் கொழுந்தாக எப்போதும் ஒளிவீசிய
பாலியார் தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும்
ஆழமான மடுக்களைப் போன்று அமைதி காப்பவர்.
பகலில் கொடும் வெய்யிலில் வதங்கிப் பின்னர்
இரவில் நீர்சிந்தும் காட்டு மரங்களைப் போல்
கண்ணீரில் வாழ்ந்தாலும் கணவன் கிழித்த
அவரது கோட்டைத் தாண்டாத சீதை அவர்!
காடும் அதன் சூழலும் என்ற பள்ளியில் மட்டுமே
தன் பாடசாலை என மெல்லிய புன்னகை சிந்தும்
கதிராமன் வேறு யாருமில்லை அண்ணன் கந்தசாமிதான்!
கருமையான நிறம், கட்டுமஸ்தான தேகம் கொண்ட
அவரது செவிலித் தாய் தண்ணிமுறிப்புக் காடுதான்!
அயலட்டைப் பெண்களின் வசை மொழிகளால்
வேட்;டை நாய்களால் துரத்தப்பட்ட முயலாய்
எட்டுவயதுப் பேத்தியைத் தோளில் இருத்தி
ராசசிங்கத்திடம் அடைக்கலம் கோரி ஓடிவந்த
உமாபதி, அவள் கதிராமனைக் கரம்பிடிப்பதைக்
காணாமலேயே நாகத்தால் இறந்தது கொடுமை!
காட்டில் துடிப்புடன் துள்ளித் திரியும்
மான் குட்டி பருவத்தில் இருந்த பதஞ்சலி,
வாய்க்கால் ஓரத்து செவ்வாழை எனச்; செழித்து
புளியுடன் சாம்பலில் மினுக்கிய குத்து விளக்கென
ஒளிசிந்திக் கதிராமன் கைத்தலம் பற்றிய
பதஞ்சலி தன் கள்ளமில்லா உள்ளத்தால்
பழகும் மனிதரின் அன்பையும் குணத்தையும்
மட்டுமே கண்டு பாசத்தால் அரவணைப்பவள்!
வாலிபன் சுந்தரம் பெயருக்கேற்ற பேரழகன்
கதைகளிலும் கவிதைகளிலும் கண்ட காதலை
கனவுகளில் மட்மே வளர்த்து வாழ்ந்தவன்;
வரதராசனார் எழுதிய வள்ளுவம் படித்து
அதன்படி வாழப் பழகிக் கொண்டவன்
சந்தர்ப்பம் செய்த சதியால் தவறிப் போனவன்
பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வையாதீர்
என்று ஆன்றோர் அன்றே சொல்லி வைத்தனர்
அந்தக் கூற்றில் அர்த்தம் நிறையவே உள்ளது.
உள்ளம் விரும்பவில்லை உடல் வழுக்கியது
நிலக்கிளி பதஞ்சலிக்கு நேர்ந்த வன்கொடுமை.
உள்ளம் விரும்பியும் உடல் இணைய மறுத்தது
என் குமாரபுரம் நாவல் நாயகி சித்திராவுக்கு!
அருந்ததி என்ற பெண்ணை கற்புக்கரசி என்பர்
அதே பெயர் கொண்ட பாரதப் பெண் ஒருத்தி
எழுதி வைத்தது நினைவுக்கு வருகின்றது
யார் யார், எவர் எவருடன் இணைவது என்பதை
தீர்மானிக்க யாருக்கு பாத்தியதை உண்டெனக்
கேட்டுத் தன் நாவலில் எழுதினார் அவர்
கட்டுக்களை அறுத்துக் கொண்டு கட்டுமீறி வாழும்
சுதந்திரம் பெண்களுக்கு உண்டு எனப் பேசும்
சில பெண்களைவிட கட்டுக்குள் வாழ்வதிலுள்ள
நிம்மதியும் பெருமையும் பெரிதென வாழும்
பெண்கள் பலருண்டு என்பது சிலருக்குத் தெரியாது!
வாலறுந்த நரியொன்று எனக்கு இப்போ எத்தனை
சுதந்திரம், சுகமென மற்ற நரிகளுக்குக் கூறியதாம்!
தொடர் நாடகங்களிலும் மற்றும் ஊடகங்களிலும்
இப்போ வாலறுந்த நரிகள் இவ்வாறு சொல்வது
உண்மைதான் என்பதை பலர் அங்கீகரிப்பர்!
சந்தர்ப்ப வசத்தால் உள்ளத்தால் அன்றி
உடலால் தவற நேர்ந்த பதஞ்சலி பாத்திரம்
காளையர் கன்னியர்க்கு மட்டுமன்றி யாவருக்கும்
ஒரு பாடம் என்பதை உணர்த்தவே இந்த நாவல்!
நீராவிப்பிட்டி மம்மது காக்கா அன்பின் தூதர்
நிலக்கிளி பாத்திர மலர்களை இணைத்த நார்!
வன்னியின் மக்களைச் சொற் சித்திரங்களாக்க
உதவிய அற்புதப் பாத்திரம் மம்மதுக் காக்கா!
அவரை இங்கு குறிப்பிடாவிடின் அது என் தவறு!
இவற்றை எல்லாம் எழுத வேண்டுமென
உள்ளம் தூண்டியது, எழுதிக் களித்தேன்!
தவறெனில் தயவாய் மன்னிக்க வேண்டுகிறேன்!

ஆக்கியோன் | ‘நிலக்கிளி’ புகழ் பாலமனோகரன்