வெற்றிடங்களை நிரப்ப அலையப் போவதில்லை
இப்போதெல்லாம் வெற்றிடமும் ஒரு கண்டு பிடிப்பாய்த் தெரிகிறது
வெற்றிடங்கள் ஒரு ஏகாந்தப் பெருவெளி
வெள்ளி நிலா பூக்குமா
வெகு மீன் உதிக்குமா
கரு மழை சனிக்குமா
கேள்விகளை நீட்டுவது வெறு வானந்தானே
கன்னிக்குத்தானே
கனவில் முதலிடம்
கனவுக்குத்தானே
கற்பனை பெரு இடம்
இட்டு நிரம்பிய கோப்பையில்
மனத் தேனீரை ஊற்ற முடியுமா
நிரப்பிய சாடியில்
இன்னொரு பூவை பூக்க முடியுமா
வெற்றிடத்தின் மீதான மன அலைச்சலில்
ஆனந்த மோகனம் நீச்சலடிக்கும்
வெற்றிடமான பூமியில்
போர் செய்ய சாமியும் புன்னகைக்கும்
வெற்றிடம் புது ஆரம்பத்தின் வேர்
புதுப் புன்னகையின் பூபாளம்
காலம் இட்ட வெற்றிடத்தில்
பொம்மையாய் உழல்கிறோம்
நிரப்ப வேண்டிய மொழிதலில்
காலம் எழுதிக் கலைகிறது வெற்றிடத்தை
த.செல்வா
இரவு 11.10