செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்சிறுகதைகள் அ(இ)துவல்லவா வாழ்க்கை | சிறுகதை | தாருணி பாலேசன்

அ(இ)துவல்லவா வாழ்க்கை | சிறுகதை | தாருணி பாலேசன்

5 minutes read

வெளிநாடு

01.07.2026

அன்புள்ள அத்தான் , அக்கா , பெரியகுண்டு , சின்னவாண்டு அறிவது,

எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள்? அக்கா உன் கடிதம் இரண்டு மாதத்திற்கு முன் கிடைத்தது. உடன் பதில் அனுப்ப முடியவில்லை. ஐந்து நாளும் வேலை. காலை 5  எழும்பி பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி வேளைக்கு school ல விடுறது. அங்கை கொஞ்சப்பேர் பிள்ளைகளைப்  பார்க்க நிற்பினம் . பிறகு சரியான நேரத்திற்கு வகுப்புக்கு அனுப்புவினம். பிறகு  school முடிய அவை திரும்ப பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய்  நான் பின்னேரம் 5:30 க்கு நான் போகும்வரை பிள்ளைகளைக் கவனமாகப் பாப்பினம் .

school வளவுக்கை தான் அவையும் இருப்பினம். பிறகு நான் பிள்ளைகளை வேற வகுப்புகளுக்குக்  கூட்டிப்போய், இரவு சாப்பிட்டு, அதுகள் படுத்த பிறகு தான் நான் ஏதும் சமைச்சு வீட்டையும் துப்பரவு செய்யிறது. நான்  படுக்க எப்படியம் 11 மணி ஆகீடும். களைப்பா இருக்கும். சனிக்கிழமையும் பிள்ளைகளுக்கு நீச்சல், நடனம், கிரிக்கெற் எண்டு நிறைய வகுப்புகள். ஞாயிறு ஏதும் கொண்டாட்டங்கள் இருக்கும். அதுக்கும் போவம். அதுதான் எனக்கு கடிதம் எழுத நேரமே கிடைக்கேலை. உங்கள் எல்லாரையும் அடிக்கடி யோசிப்பன். போட்டோ அனுப்பிவிடு.

பெரியவன் இப்ப நல்லா வளந்திருப்பான் என்ன?  கலியாண வயசும் வந்திட்டுது. அவனுக்குக் கிடைச்ச வேலை எப்படி பிடிச்சிருக்காமோ?  சின்னவன் வடிவா படிக்கிறானோ?  இப்பவும் செல்லக்கதை தான் கதைக்கிறானோ ? இந்த வருஷம் O/L எடுக்கிறான் எல்லோ? அத்தான் பென்சன்  எடுத்திட்டார் எண்டு எழுதியிருந்தாய். எப்படி அவருக்கு பொழுது போகுது?  எப்பவுமே ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பார். இப்ப சும்மா இருக்க ok யாமோ?

ஊரில  சரியான வெயில் எண்டு சொல்லுகினம். நான் காசு அனுப்புறன் . AC ஒண்டு பூட்டுங்கோவன். எவ்வளவு செலவு எண்டாலும் பரவாயில்லை நான் அனுப்புறன். பொருளாதாரப் பிரச்சினைக்குப் பிறகு சாமான்கள் எல்லாம் சரியான விலையாமே?  எப்படி சமாளிக்கிறியள்?  தேவி ரீச்சர் என்னோட கதைக்க ஆசைப்படுறா எண்டு எழுதியிருந்தாய். அவக்கு என்ன நேரம் நான் phone எடுக்கிறது ok யா இருக்கும்? சனி, ஞாயிறு எண்டா  எனக்கு வசதி. ரீச்சருக்கு எது வசதியெண்டதைக்  கேட்டுச் சொல்லு. நான் நிச்சயம் phone பண்ணுறன். எங்களிட்ட ஒரு சதமும் வேண்டாமல் ரியூசன் எடுத்தவ.

நான் பிள்ளையை class ல விட்டிட்டு car ல இருந்து தான் எழுதிறன். சின்னவன் car seat ல நித்திரை.  class முடியிற நேரமாச்சு. இத்துடன் முடிக்கின்றேன் .

 

இவ்வண்ணம்,

தங்கை ரதி

 

 

தாய்நாடு

11.07.2026

அன்புள்ள தம்பி நந்தன், தங்கை ரதி, துஷிக்குட்டி, ஆதிக்கண்ணா  அறிவது,

நாம் எல்லோரும் நலமாக இருக்கின்றோம். நீங்கள் எல்லோரும் நலமாக இருக்க முத்துமாரியம்மன் அருள்புரிவாராக!

இப்ப தான் உன்ர  கடிதம் கிடைத்தது ரதி. தபாற்கார அண்ணான்ர சத்தம் கேட்டாலே ஓடிப்போய் படலையைத் திறந்து பார்க்கிறது . நேற்று காகம் கரையவே நினைச்சனான் உன்ர  கடிதம் வரப்போகுது எண்டு. பத்து தரமாவது திரும்ப திரும்ப உன்ர கடிதத்தை வாசிச்சிருப்பன். துஷிக்குடியும் ஆதிக்கண்ணாவும் இப்ப நல்ல வளந்திருப்பாங்கள். ஆதிக்கண்ணாவை கைக்குழந்தையா கண்ட பிறகு இன்னும் காணேலை.

இப்ப பள்ளிக்கூடம் போறான் எண்ட நம்பவே முடியேலை. ஏன் அவங்கள் காலைல இருந்து பின்னேரம் வரை பள்ளிக்கூடத்திலையோ நிக்கிறவங்கள்?  யாரோ பராமரிப்பினம் எண்டு எழுதியிருந்தாய்?  சாப்பாடு தீத்திவிடுவினமோ? பிள்ளைகளுக்கு களைப்பா இருந்தா படுக்க இடம் இருக்குமோ? அதுக்குப்பிறகும் வேற வகுப்புகள் எண்டு எழுதியிருக்கிறாய் ? எப்ப நீ பிள்ளைகளோட இருக்கிறனீ?  அவங்கள் ரெண்டு பேரும்  எப்ப சேர்ந்து விளையாடுறவங்கள்?  யாரும் பக்கத்து வீட்டுக்காரர்  பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திலையிருந்து கூட்டி வந்து பார்க்க மாட்டினமோ?  அவ்வளவு நேரம் உன்னையும் நந்தன் தம்பியையும் விட்டிட்டு இருக்க பிள்ளைகள் ஓம் எண்டு சொல்லுதுகளோ?  நான் கிட்ட இருந்தா அதுகளை என்ன மாதிரி வளர்த்துத் தந்திருப்பன். நான் இதைச் சொல்லிக் கவலைப்பட அத்தான் சொல்லுது என்னை டிரைவிங் பழகீற்று உன்னோட போய்  இருந்து பிள்ளைகளை வளர்த்துக் குடுக்கட்டாம். எனக்கு சைக்கிள் ஓடவே பயம்.

பெரியவனின்ர வேலையைப் பற்றிக் கேட்டிருந்தாய். கொழும்பில வேலை கிடைச்சது. அவனுக்கு ஊரோட தான் இருக்க விருப்பமெண்டு அந்த வேலைக்கு போகேலை. இப்ப யாழ்ப்பாணத்திலை ஒரு வேலை செய்யிறான். சம்பளத்தை கொண்டு வந்து என்னட்டையே தருவான். நான் வேண்டாம் எண்டு சொன்னா கவலைப்படுவான்.

அவன் குழந்தையா இருக்கேக்கை நீ அவனுக்குத் திறந்த சேமிப்புக் கணக்கிலையே அவனுக்குத் தெரியாமல் போட்டிடுவன். எனக்கொரு சங்கிலி செய்து தந்தவன். நான் கழுத்திலை ஒண்டும் போடுறேலைத்  தானே. இப்ப இந்த சங்கிலியை எப்பவும் போட்டிருக்கச் சொல்லி நான் போடுறது. அத்தானுக்கு ஒரு மணிக்கூடும் சின்னவனுக்கு கொம்பியூட்டரும் வேண்டிக் குடுத்திருக்கான். உனக்கு சாறி வேண்டித் தந்திருக்கான். நான் பார்சல் பண்ணி விடுறன்.

உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமோ? பெரியவன் சிவன்கோயிலடி கந்தசாமியண்ணான்ர மகளைக் காதலாம். உங்களுக்கு ஒண்டு சொல்லோணும் எண்டு அத்தானுக்கும் எனக்கும் சொல்லுவான். வெக்கப்பட்டுக்கொண்டு பிறகு சொல்லுறன் எண்டு போயிடுவான். ஆனா அத்தானுக்கு நியூஸ் வந்திட்டுது.

அந்தப் பிள்ளையை நான் திருவிழா நேரம் கோயிலிலை கண்டனான். என்னைக் கண்டு பயத்திலை தூணுக்குப் பின்னுக்குப்  போய் ஒதுங்கி நிக்கிது. பார்க்க மகாலெச்சுமி மாதிரி அந்தப் பிள்ளை இருக்குது. எனக்கும் பொம்பிளைப்பிள்ளை இல்லை. அந்தப் பிள்ளைக்கும் அம்மா சின்ன வயசிலையே வன்னி அடிபாட்டுக்கை தவறீற்றா. சரியாக் கஸ்டப்பட்டுத்தான் தகப்பன் பிள்ளைகளை வளர்த்தது. எப்ப அந்தப்பிள்ளை எங்கட வீட்டை  காலடி எடுத்து வைக்கும் எண்டு ஆசையா இருக்கு. அந்தப் பிள்ளையை ராசாத்தி மாதிரி வைச்சுப் பார்க்க வேணும் . அம்மா இல்லை எண்ட குறை அந்தப் பிள்ளைக்கு இருக்கவே கூடாது.

இன்னும் கொஞ்ச நாள் பார்த்திட்டு அதுக்குப் பிறகும் பெரியவன் சொல்லேல எண்டா நானே கேட்கப்போறன். நீ நிச்சயம் கலியாணத்துக்கு வரோணும். குடும்பமா வரவேணும். என்ன மாதம் உனக்கு இங்கை வரக்கூடியதா இருக்கும்?  போனமுறை போல பத்து நாளிலை ஓடாமல் குறைஞ்சது ரெண்டு மாசமாவது நில்லு. உனக்குப் பிடிச்ச சாப்பாடெல்லாம் செய்து தாறன். பிள்ளைகளுக்கும் தம்பிக்கும் என்ன விருப்பம் எண்டு சொல்லு.

சின்னவனும் வளர்ந்திட்டான். மீசையும் அரும்புது. கண்ணாடிக்கு முன்னுக்கு நிண்டு சின்ன மீசையைப் பார்த்து  தன்னைத் தானே ரசிச்சுக் கொண்டு இருப்பான். ஆனாலும் இன்னும் செல்லம் தான். சகுந்தலா ரீச்சர் கண்டு கதைச்சவ. அவன் நல்லாப் படிக்கிறானாம். கெட்டிக்காரனாம். ரியூசன் ஒண்டுக்கும் போறேலை . இந்த வயசிலை தானே விளையாட வேணும் எண்டு அத்தான் அவனை அனுப்பேலை. தானே படிப்பான். தெரியாததை பெரியவன் சொல்லிக் குடுப்பான். பள்ளிக்கூடம் முடிய சாப்பிட்டிட்டு கடற்கரைக்குப் போய் விளையாடி செக்கல் படத்தான்  வருவான்.

அத்தான் பென்சன் எடுத்த பிறகு தான் இப்ப கூட பிஸி. பொருளாதாரப் பிரச்சினை நேரம் வீட்டுத் தோட்டம் செய்யத் தொடங்கினவர். அது நல்ல செழிப்பா வளந்திருக்கு. கத்தரி,  தக்காளி, வெண்டி,  பூசணி,  பாகல் எண்டு பின் வளவுக்கை பெரிய தோட்டம் இப்ப. தேவைக்கு மேலால மரக்கறி இருக்கு. நான் பக்கத்து அன்ரியாக்களுக்கும் கோயிலுக்கும் மிச்சத்தைக் குடுக்கிறனான். கோழியும் வளர்க்கிறம். ஆடும் வேண்டப் போறம் எண்டு பெரியவனும் அத்தானும் நேற்றுக்  கதைச்சவை.

ஏசி பூட்டுறதைப் பற்றிக் கேட்டிருந்தாய். எங்கட வீட்டை வெக்கை இல்லை. வேம்பு,  நிழல்வாகை,  மாமரங்கள், முருங்கை எல்லாம் வீட்டைச் சுத்தி நிக்குது. எப்பவுமே நல்ல பசுமையாத்தான் இருக்கு. அத்தானும் பிள்ளைகளும் சேர்ந்து மரங்களுக்குப் பெயர் கூட வைச்சிருக்குதுகள். வேப்பமிலை முற்றம் கூட்டக் கஸ்டம் தான் . நான் கோயில் கூட்டக் காலமை போறனான். அத்தான் தான் இங்கை கூட்டுறது. தனக்கு அது கஸ்டமில்லை எண்டு தான் சொல்லுறவர். கொஞ்சம் நுளம்பு தான். வேப்பம்புகை போட நுளம்பும் வராது.

இந்தமுறை நல்ல வடகம் போட்டனான். மாம்பழமும் இந்தமுறை நிறைய. சந்தைக்குக் குடுத்தனாங்கள். ஒவ்வொரு முறை மாம்பழம் வெட்டும்போதும் அத்தான் உன்னைப் பற்றித் தான் கதைக்கிறது. உனக்குத் தானே அம்பலவி மாம்பழம் சரியான விருப்பம். நீ தான் இங்கை வாறாய் இல்லை.

அத்தானும் பெரியவனும் விறாந்தையிலை தான் படுக்கிறவை . நான் மட்டும் தான் உள்ளை. யன்னல்களைத் திறந்து விடுறனான் . நல்ல காற்று வரும். சின்னவன் பொன்னையா அப்புவோடை போய்  படுக்கிறவன். ஆச்சி இறந்த பிறகு அப்பு நல்லா உடைஞ்சு போட்டார். நான் எங்களோட வந்து இருக்க சொன்னான். ஆச்சி இருந்த வீட்டை தனியா விட்டு வரமாட்டனாம். அதுதான் நான் சமைச்சுக் குடுக்க சாப்பாட்டையும் கொண்டு போய் அப்புக்குத் துணையாப்  படுத்திட்டு காலைல சின்னவன் வருவான். நீ ஒருக்கா அப்புக்கு போன் பண்ணிக் கதை. சரியா ஆச்சியை  நினைச்சு அழுவார். ஆறுதல் சொல்லு. நாங்கள் அதுகளுக்கு இரத்தச் சொந்தம் இல்லையெண்டாக் கூட எங்களை சொந்தப்  பிள்ளைகள் போல பார்த்ததுகள் .

தேவி ரீச்சரோட கதைக்க வசதியான நேரம் கேட்டிருந்தாய். நாங்கள் இங்கை ஆக்களின்ட  வீடுகளுக்குப் போகவே நேரம் கேக்கிறேலை. நீ போன் பண்ணுறதுக்குக் நேரம் கேட்டிருக்கிறாய். அடி தான் தருவா. நீ எப்ப எண்டாலும் எடுத்துக் கதை. சந்தோஷப்படுவா.

காசு அனுப்பி மினக்கெடாதே. எங்களுக்கு எல்லாம் இருக்கு. வயலும் நல்ல விளைச்சல். ஏலுமெண்டா பொன்னையா அப்புக்கு ஒரு ரீவி வேண்டிக் குடு. தனிய இருக்கிறவர். யோசிக்காமல் ரீவி பார்ப்பார். நீ தான் இங்கை வா. வந்து கனநாள் நில்லு. வழமை மாதிரி நல்லா படுத்திரு. நான் குழந்தைகளைப் பார்ப்பன். அதுகளுக்குத் தேவையானதெல்லாம் செய்து குடுப்பன். வடிவா வெளிக்கிடுத்தி கோயில்களுக்கும் சொந்தக்காரர் வீடுகளுக்கும் கூட்டிக் கொண்டு போவன். கெஞ்சிக் கேட்கிறன். தயவு செய்து குடும்பமா வந்து ரெண்டு மாதமெண்டாலும் நில்லுங்கோ.

நிறைய எழுதோணும்  போல இருக்கு. உனக்கு வாசிக்க நேரமிருக்காது. இதோடை  முடிக்கிறன். என் செல்லக்குஞ்சுகளுக்கு பெரியம்மாவின் முத்தங்கள்.

 

இவ்வண்ணம் ,

அன்புடன்,

அக்கா

 

தாருணி பாலேசன் | பிரிஸ்பேன் | அவுஸ்திரேலியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.