Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்!

குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்!

3 minutes read

‘உடல் வலி’ என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதிலும், அதிகமாக இருப்பது கழுத்து வலி, முதுகு வலி மற்றும் கால் மூட்டு வலி எனலாம். இதனையும் தாண்டி சிலர் குதிகால் வலியால் அவதிப்படுவர். காலையில் எழுந்ததும் கால்களை தரையில் ஊன்றி நிற்கக்கூட முடியாத அளவு
குதிகால் வலி ஏற்படும். அவ்வாறான குதிகால் வலி ஒருவருக்கு ஏன் வருகிறது? வந்தால் அதற்கான உரிய சிகிச்சை முறைகள் என்னென்ன? வராமல் இருக்க எவ்வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பது பற்றி தெளிவாக இங்கே பார்க்கலாம்.

குதிகால் வலி…

குதிகால் எலும்பினை சுற்றி காலின் தசை நார்கள், ஜவ்வுகள், ஜெல்லி போன்ற திசுப் பைகள், கொழுப்பு, திசுக் கொத்து போன்ற அனைத்தும் அமைந்திருக்கும். இந்த திசுக்களில் ஏதேனும் அழற்சி, காயம் ஏற்பட்டால் வலி வரக்கூடும். இது இல்லாமல் குதிகால் எலும்பின் மீது கால்சியம் (சுண்ணாம்பு) படிந்து, இறுகி எலும்பு போல் ஆவதாலும் வலி வரக்கூடும்.

வலி எதனால் வருகிறது..?

*அதிக உடல் எடையின் காரணமாக குதிகால்களுக்கு அழுத்தம் அதிகரிப்பதால்.
*நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும் வேலை செய்பவர்களுக்கு.
*ஹீல்ஸ் காலனி அதிக நேரம் மற்றும் நீண்ட காலம் பயன்படுத்துவோருக்கு காலின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதால்.
*கட்டையான வகை காலணிகள் அணிந்தால்.
*அதிக கால்சியம் சத்து குதிகால் எலும்பின் அடியில் படிந்து இறுகிவிடுவதால் நடக்கும்போது அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாவது.
*சிலருக்கு குதிகால் எலும்பில் கூடுதலாக எலும்பு வளரும் போது.
*போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதாலும், கால்களை பராமரிக்காமல் இருப்பதும் கூட காரணங்களாக அமைகிறது.

யாருக்கு அதிகமாக வரும்..?

*பெண்களுக்கும் ஆண்களுக்கும் வரும் என்றாலும் அதிக அளவில் பெண்
களையே பாதிக்கிறது என புள்ளி விவரம் சொல்கிறது.
*விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் சரியாக, முறையாக பயிற்சிகள் செய்யாமல் இருந்தால் நாளடைவில் வலி வரக்கூடும்.
*40 வயதை கடந்த ஆண், பெண் இருவரும் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

அறிகுறிகள்..?

*ஆரம்பத்தில் அதிக நேரம் நின்று வேலை செய்தால் மட்டுமே வலி வரும்.
*நாளடைவில் காலையில் எழுந்தவுடன் கால்களை தரையில் வைத்து நடக்கும் போது லேசான வலி உண்டாகும்.
*பின் அதுவே கடுமையான வலியாக மாறும் என்பதால் கால்களை தரையில் வைக்கவே பயம் வரும். பின் 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து வலி குறைந்துவிடும்.
*வலியுடன் சிலருக்கு வீக்கம் ஏற்படலாம்.

எப்படி கண்டறிவது..?

*90 சதவிகிதம் எந்தவித கருவி முறை பரிசோதனைகளும் அவசியமில்லை.
*மேல் சொன்ன அறிகுறிகள் இருந்தால் அருகில் இருக்கும் இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர் அசைவுகள் மூலம் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்குவர்.
*அப்படியும் வலி குறையவில்லை என்றால் எக்ஸ்ரே மூலம் எலும்பு வளர்ச்சி அல்லது கால்சியம் படிமானம் இருக்கிறதா என உறுதி செய்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை முறையை மாற்றிக் கொள்ளலாம்.

சிகிச்சை முறை

ஆரம்பத்திலேயே கண்டறிந்து இயன்முறை மருத்துவரை அணுகினால் குறைந்த காலத்தில் எளிதில் சரி செய்துவிடலாம். முதலில் வலி குறைய இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிப்பர். பின் குதிகால் எலும்புகளை சுற்றியுள்ள தசைகளை, தசை நார்களை தளர்வாய் மாற்றுவதற்கு பயிற்சிகள் கற்றுக்கொடுப்பர்.அதோடு வீட்டில், அலுவலகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை குறிப்புகளாகவும் சொல்வர்.

மாத்திரை, மருந்துகள் அதிகம் எடுத்துக்கொள்வதால் அந்த நேரத்திற்கு வலி தெரியாதே தவிர பிரச்னைக்கான தீர்வு கிடைக்காது. மேலும் அதனால், கிட்னி போன்ற உள் உறுப்புகள் பாதிக்கக்கூடும்.அறுவை சிகிச்சை வெகு சிலருக்கே பரிந்துரைப்பர். அதுவும் எலும்பு அல்லது கால்சியம் படிமானம் இருந்தால் மட்டுமே பரிந்துரைப்பர்.

வருமுன் காப்போம்…

*அதிக உடல் எடை இருந்தால் அதனை குறைக்க வேண்டும்.
*விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் சரியான முறையில் வார்ம் அப் (warm up) மற்றும் வார்ம் டவுன் (warm down) தினமும் செய்ய வேண்டும்.
*அதிக நேரம் நின்று வேலை செய்ய வேண்டிய பணியில் இருந்தால் முடிந்த வரை அவ்வப்போது உட்கார வேண்டும்.
*கால்களுக்கு புத்துணர்ச்சி தரும் மசாஜ், பாதத்தை சுடு நீரில் நனைத்து வைத்திருத்தல் போன்றவற்றை மாதம் ஒரு முறை செய்யலாம்.
*ஹீல்ஸ் காலணி அணிவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
*பிளாஸ்டிக், மரக்கட்டை சார்ந்த காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
*மிருதுவான ரப்பர் காலணிகளை 30 வயதுக்கு மேற்பட்டோர் உபயோகிப்பது சிறந்தது.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More