தந்தையர் தினத்துக்கு ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது.தந்தையர் தினத்துக்கு ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது.

பாபிலோன் நாட்டில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எல்மெஸ்வி கார்வெர்ட் என்ற இளவரசர் களிமண் பலகை ஒன்றில் தன் தந்தைக்கு ‘நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும். உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று சிறிய கடிதம் ஒன்றை எழுத… அது பலரையும் கவர்ந்தது. அதைப் பார்த்த பலரும் தங்கள் தந்தைக்கு அதுபோலவே வாழ்த்துகளைச் சொல்ல, அது ஒரு விழா போலவே அப்போதைய காலக்கட்டத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. காலப்போக்கில் அந்தப் பழக்கம்

மறைந்துபோனாலும், தந்தையர் தினத்துக்கு ஆதி ஆதாரம் அந்தக் களிமண் வாழ்த்து அட்டைதான்.

பிறகு, ஆங்காங்கே பல நாடுகளில் தந்தையர் தினம் என்று ஜூன் மாதத்தில் கொண்டாட ஆரம்பித்தனர். இன்றளவும் பல நாடுகளில் சூரியனைத் தெய்வமாக கொண்டாடும் கும்பிடும் பழக்கம் இருக்கிறது. ஐரோப்பா நாடுகளில் சூரியனை வானவெளியின் தந்தையாகவும் இயற்கையின் தந்தையாகவும் வணங்கிவந்தனர். மற்ற மாதங்களில் கடும் மழையும் கடும் வெயிலுமாக இருக்கும்போது, ஜூன் மாதத்தில் மட்டும் சூரியன் மித வெப்பமாக மக்கள் மனங்களைக் குளிர்விக்க… அந்த சந்தோஷத்தில் இயற்கையின் தந்தையான சூரியனுக்கு விழா எடுத்துக் கொண்டாடின பல நாடுகள். ஜூன் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினமாக கொண்டாட, இப்போதும் அந்தப் பழக்கம் பல ஐரோப்பிய நாட்டு கிராமங்களில் அனுசரிக்கப்படுகிறது.

இப்போது நாம் கொண்டாடும் நவீன தந்தையர் தினத்துக்கான வித்து அமெரிக்காவில் 1909-ல் சோனார் லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்னும் இளம்பெண்ணால் விதைக்கப்பட்டது.

வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர் சோனார். தன் 16-வது வயதிலேயே தாயை இழந்தவர். ஆறுகுழந்தைகளுக்குத் தாயான அவரது அம்மா எல்லன், ஏழாவது பிரசவத்தின்போது இறந்துவிடவே… அந்த ஆறு குழந்தைகளையும் பாதுகாத்து வளர்ந்தவர் அவரது அப்பா வில்லியம் ஜாக்ஸன் தான். அவர் ஒரு ராணுவ வீரர். பல போர்களில் நாட்டுக்காக போரிட்டவர். தன் குழந்தைகளுக்காக வேலையை விட்டுவிட்டு குழந்தைகளின் மீது அக்கறைக் காட்டி வளர்த்தவரை, சோனாருக்கு ரொம்பவே பிடிக்கும்.

தன் தந்தையைப் பற்றி இப்படி சொல்கிறார் சோனார். ”எங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அப்பாவின் நிலைமை அவ்வளவுதான். துடிதுடித்துப் போய்விடுவார். மருத்துவம், கல்வி, அன்பு என எங்களை அவ்வளவு அக்கறையாக பார்த்துக்கொள்வார். எந்த ஒரு குழந்தைக்கும் அம்மாவும் அப்பாவும் வாழ்க்கையில் அத்தனை முக்கியம். ஆனால், எங்களுக்கு இருவருமே ஒரே ஆள்தான். என் அப்பாவே எனக்கு அம்மாவாகவும் இருந்தார். எங்களுக்கு எல்லாம் அவர் ஒரு ஹீரோ!”

தன் 27-ம் வயதில் அம்மாக்கள் தின விழா பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட சோனாருக்கு, ஏன் தந்தைக்கும் ஒரு தினம் கொண்டாடக் கூடாது என்று ஆசை வரவே… அதை அந்த விழா மேடையிலேயே சொன்னார். அமைதியாக இருந்த கூட்டம், அவரின் தந்தையர் தின ஐடியாவைக் கேட்டு பலமாக சிரித்து ஏளனம் செய்தது. இருந்தும் சோனாரின் தீராத உழைப்பால், அவரின் ஆசை கூடிய சீக்கிரமே நிறைவேறியது. தன் சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள் என சிலரை சேர்த்துக்கொண்டு பல இடங்களுக்கு சென்று தந்தையர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

பல பொதுக்கூட்டங்களை நடத்தினார். அதன் உடனடி பலனாக 1910-ல் ஸ்போகனே என்ற கிறிஸ்துவ சபை தானாக முன்வந்து ஒய்.எம்.சி.ஏ. அமைப்புடன் இணைந்து ஜூன் 19-ம் தேதி சிறிய அளவில் தந்தையர் தினத்தைக் கொண்டாட… ‘கொண்டாடினால்தான் என்ன?’ என்று பலருக்கும் கொஞ்சமாக ஆசை வர ஆரம்பித்தது.

சோனார் அந்த விழாவை தன் தந்தையின் பிறந்தநாளான ஜூன் 5-ம் தேதி கொண்டாட வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், அப்போது விழா ஏற்பாடுசெய்வதில் சிறு தாமதம் ஏற்பட… ஜூன் 19-ம் தேதி அதாவது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைக்கு விழா மாற்றப்பட்டது. இப்போது நாம் கொண்டாடுவதும் அதே ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில்தான்.

1916-ல் வாஷிங்க்டன் மாகாணம் அந்த நாளை அங்கீகரித்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1966-ல் அமெரிக்க ஜனாதிபதி மாளிகை தந்தையர் தினத்தை அங்கீகரித்தது. 1972-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக அந்த நாளை அங்கீகரித்த அமெரிக்கா, அந்த வருடத்தில் இருந்து அரசு விழாவாகவும் கொண்டாட அனுமதியளித்தது.

ஒரு மகள் உலக தந்தையர்கள் அனைவருக்கும் கொடுத்த பரிசு இந்த நாள்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

Courtesy – Vikatan.com

ஆசிரியர்