ஏவுகணையை செயலிழக்கச் செய்யும்போது வெடித்தது | காஸாவில் 6 பேர் மரணம்ஏவுகணையை செயலிழக்கச் செய்யும்போது வெடித்தது | காஸாவில் 6 பேர் மரணம்

போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக காஸாவில் வீசப்பட்டு வெடிக்காமலிருந்த இஸ்ரேல் ஏவுகணை புதன்கிழமை வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

அந்த ஏவுகணையை செயலிக்கச் செய்யும் முயற்சியில் ஹமாஸ் இயக்கத்தின் காவல்துறைப் பொறியாளர்கள் ஈடுபட்டிருக்கும்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

இந்த வெடிப்பில் பலியானவர்களில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த “அசோஸியேட் பிரஸ்’ நிருபர் ஒருவரும், உள்ளுர் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர் என பாலஸ்தீன செய்தி நிறுவனமான மாண் தெரிவித்தது.

சைமன் காமில்லி என்ற அந்த 35 வயது இத்தாலிய நிருபர், ஏவுகணை செயலிழக்கச் செய்யப்படுவதைக் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு வந்திருந்தார்.

அண்மையில் தொடங்கிய இஸ்ரேல்-காஸா மோதலில் உயிரிழந்த முதல் வெளிநாட்டு செய்தியாளர் இவர் எனக் கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தால், இவர்களைத் தவிர மேலும் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ராஃப் அல்-குயித்ரா தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கிய 72 மணி நேர போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையிலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கெய்ரோவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் புதன்கிழமை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், “இந்த போர் நிறுத்தம் எந்தப் பலனுமில்லாமல் முடிவுக்கு வந்து, மீண்டும் சண்டை தொடங்கினால் ஹமாஸ் இயக்கத்தை முழுவதுமாக அழித்தொழிப்போம்’ என இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.

ஆசிரியர்