ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம் | மதம் மாற மறுத்த யாஜ்டி இன மக்களை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் நாட்டில் சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அரசினை எதிர்த்து கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈராக்கின் முக்கிய நகரங்கள் மற்றும் பெட்ரோல் கிணறுகளை கைப்படுத்திய அவர்கள் மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் யாஜ்டி இனப் பிரிவினர் 80 பேர்களை சன்னி முஸ்லீம் பிரிவுக்கு மாறும்படி கட்டாயப்படுத்திய தீவிரவாதிகள் அவர்கள் உடன்படாத காரணத்தால் 80 பேர்களையும் ஒருவர் பின் ஒருவராக நிற்கவைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தரத்தக்க தகவல் ஒன்று ஈராக்கில் இருந்து வெளியாகியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 80 பேர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

ஈராக்கில் உள்ள சிஞ்சார் என்ற பகுதியை சேர்ந்த கொச்சோ என்ற ஊரில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த தாக்குதல்களை சிஞ்சார் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்த போதிலும், அதை பற்றி சிறிது கவலை கொள்ளாத ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் தலைநகர் நோக்கி முன்னேறி வருகின்றனர்.

அமெரிக்க போர் விமானங்கள் நேற்று மொசூர் நகர் அணைக்கு அருகே உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து குண்டு வீச்சை தொடங்கி உள்ளன. இந்த தாக்குதலுக்கு தீவிரவாதிகளை சேர்ந்த சிலர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனாலும் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈராக்கின் முக்கிய பகுதிகளை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

ஆசிரியர்