கொழும்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள எதிர்ப்பு | சென்னையில் இலங்கை தூதரகம் முன் சீமான் போராட்டம்கொழும்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள எதிர்ப்பு | சென்னையில் இலங்கை தூதரகம் முன் சீமான் போராட்டம்

இலங்கை நடைபெற இருக்கும் ராணுவ கருத்தரங்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ராணுவ கருத்தரங்கு ஒன்று நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் இந்திய ராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக நரேந்திர மோடியின் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த கருத்தரங்கில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி உள்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை நாம் தமிழர் நிறுவனர் சீமான் முன்னிலையில் சுமார் 100 பேர்முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை அரசுக்கு எதிராகவும், ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அவர்களை போலீஸார் அமைதியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக நுங்கம்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்